வரதட்சணை

வரதட் சணையா உரக்கச் சொன்னால்
வருமே கைக்குக் காப்பு
வரன்வீட் டார்கள் தமக்குத் தாமே
வைப்ப துண்டோ ஆப்பு
வரன்கள் பெண்ணை தங்கம் தந்து
மணக்கும் நிலைமை யாச்சு
தரவும் பெறவும் கூடா தென்ற
சட்டம் வலுத்துப் போச்சு

பெண்ணுக் காக மாப்பிள்ளை வாங்கும்
வழக்க மில்லை நாட்டில்
பெண்ணைக் கேட்டே மணமு டிக்கப்
பேசு கின்றார் வீட்டில்
பெண்ணை ஆணே அடிமைப் பெண்ணாய்
பேசும் கொடுமை போச்சு
பெண்ணோ இன்று புதுமைப் பெண்னாய்
பெருமை கொள்ள லாச்சு

திருமணத் தகவல் மையம் இந்நாள்
வலையில் கூடிப் போச்சு
திருமணஞ் செய்ய பெண்ணைத் தேடி
தினமும் வலையின் வீச்சு
பொருந்து மென்றும் பொருந்தா தென்றும்
பட்டி மண்டபப் பேச்சு
வருத்தப் படாத வாலிபர் சங்கம்
வலையில் கூடிப் போச்சு

வலையில் பதிந்து பெண்ணைத் தேட
பெண்ணின் படம்தான் இருக்கும்
அலையில் தேடி முகவரி கேட்டால்
அதற்கும் பணம்தான் கேட்கும்
அலையாய் அலைந்து பெண்ணைத் தேடும்
அலையும் வலையும் அதிகம்
வலையும் தரகும் பெண்ணைத் தேடும்
முதலீ டில்லா வணிகம்

சீர்கேட் டாலே சீர்கெடு வீர்கள்
சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பார்!கைக் குள்ளே தொடுதிரை பேசி
பார்த்துப் பேச வேண்டும்
“யார்கேட் பார்கள்?” என்று கேட்டால்
காணொலிக் காட்சி யாகும்
ஊர்கேட் பார்கள் உலகம் பார்க்க
ஒலியும் ஒளியும் போகும்

படிப்புக் கேற்ப மாப்பிள்ளை வீட்டார்
பணமும் நகையும் கேட்பார்
படிப்பில் கூட கூடப் படித்துப்
பெண்ணே அதனை மறுப்பார்
அடித்த கொள்ளை போதும் போதும்
மகிழ்வுந் தெல்லாம் வருமா?
பிடித்த பெண்ணை மணந்து கொண்டால்
மகிழ்வுந் தானாய் வருமே

பெண்ணின் பிறப்பு விகிதம் குறைவே
புள்ளி விவர முண்மை
பெண்ணின் படிப்பு விகிதம் அதிகம்
பெருமை யான உண்மை
மண்ணில் இதனால் வரதட் சணையின்
கொடுமை குறைந்த தன்றோ?
எண்ணிப் பார்த்தால் வரதட் சணைக்கு
இடம்தான் இங்கே உண்டோ?

எழுதியவர் : சு.ஐயப்பன் (26-May-16, 4:05 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 364

மேலே