குழந்தை பிழை

குழந்தை பிழை
***************************

ஒரு பறவை தோளில் ஏறிவிட்டு
உன்னையே சுற்றிவர
ஆசையாய் இருக்கு
உனக்குள் தான்
எத்தனை
காலநிலை பார்க்கிறேன்
கோலமிடும் அழகியலில் இருந்து
கோப முற்றத்தின்
மேற்கத்திய பனிப்படர்வுவரை ம்ம்
உன் சின்னஞ்சிறு
உதடுகள் குவியுற போதெல்லாம்
உன் மூக்கு நுனியும்
நான் காணும்போது குவிவது
முத்தமிடத்தான் என்று நெருங்குவேன்
முத்தமிடுவதாகச் சொல்லி
ஏமாற்றுவதில்
எனக்கு சமமான
எதிரி தேடிக் கொண்டிருக்கிறேன்
வா கூட்டு சேர்ந்துகொள்
குப்புறப் படுத்துக்கிடக்கும்
என் பின்னாலேறி
இடைஞ்சல் செய்வதாக நினைத்து
மாவு பிசையாதே
காது நீண்டுக்கொண்டே போகிறது
பிறகு நான்
உன்னை தாயாக்கிடுவேன் பார்
ச்சீ நீ அந்த அர்த்தத்தில்
செய்யலை என்கிறாயா ம்ம்??
எனக்குத் தெரியும்
உனக்கு என்னதான் தெரியும்
சொல் என்கிறாயா ம்ம்
உன்னை தாயாக்கத் தெரியும்
போ இப்படி எல்லாம் பேசினால்
எனக்கு பேசவராது என்கிறாயா ம்ம்
அட லூசு லூசு
உன்னை அம்மா ஆக்கிடறேன்னுதான்
சொன்னேனே ஒழிய ,,
யாருக்குன்னு சொன்னேனா ம்ம்
எனக்கு அம்மா
ஆக்கறேன்னு சொன்னேன் ம்ம்
முள்ளில் சிக்கிய உன் சேலையை
அவிழ்த்தப்போதும்
விருந்தாளியாய் உண்டு
கைக்கழுவிவிட்டு
நீ முந்தானை கொடுக்க
முகம் துடைத்த போதும்
பெருமழையில்
பொத்தலாய் நனைந்த
என் கேசத்தில்
உன் தாவணி துவண்ட போதும்
தாய்மை உணர்ந்த
கதகதப்பின் அதே இதந்தான்
உன் மடியிலும்
விளக்கு சுற்றி விழுந்துகிடக்கும்
சலபம் போல
இதோ துவிழ்கிறேன் காதலி
வரட்டுக் குப்பாயத்துக்கு
வாசனாதி தெளித்தே வருகிறேன்
உன் சிரிப்புக்காற்று உரசி
கொஞ்சம் மெல்லமாகட்டுமே என்றுதான்
அலைகளுக்குள் நின்றுவிட்டு
கைக்கூப்பி அழைக்கிறேன்
அலைத்தொடும்
தூரம்வரை வந்துவிட்டு
அகப்படாமல் ஓடுகின்றன
உன் கால்கள்
அதைக்காணும்
என் எண்ண அலைகள்
முயன்று முயன்றுத் தோற்கின்றன..
முறைக்கு முறை ம்ம்
உன்னிடம்
மனசை இடரவிட்ட
கோழை ஆண்மைக்குள்
குழந்தை பிழைபோல நுழைந்துவிட்டாய்
இப்போதெல்லாம்
பெரிய பைய்யன் போல
நடிக்கக்கூட முடியவில்லை எனக்கு ம்ம்


"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (1-Jun-16, 4:16 am)
Tanglish : kuzhanthai pizhai
பார்வை : 114

மேலே