அந்த இரயிலடி இரைச்சலில்

அந்த இரயிலடி இரைச்சலில்
இரகசியமாகிக் கொண்டிருந்த
சில சம்பவங்களில்
அந்த இருவிழிகள்
தாண்டி உருண்டு வெளியேறிய
துளிகளின் ஓசையும் கலந்திருந்தது...

கலப்படமில்லாத பாசத்தை
அந்தக் கைவிரல் பிணைப்பு
காட்சியளித்துக் கொண்டிருந்தது...

மூன்றாவது தண்டவாளத்தில் ...
புறப்படக் காத்திருக்கிறது ...
என்று ஒலிபெருக்கி
உதிர்த்த வார்த்தைகளில்
இதயக்கூடு தன் இயல்பு வேகத்தைத்
தாண்டியிருந்தது ...

ஒட்டுப் போட்ட சட்டைப் பையிலிருந்து எடுத்து
ஒரு பத்து ரூபாயைக் கையில் கொடுத்து
மீண்டும் ஒருமுறை கையை இறுக்கிப் பிடித்து...

இரயில் சங்கின் ஒலியைத் தொடர்ந்து
மெல்லத் தடுமாறி நகர்ந்த தொடர் வண்டியோடு
வேகமெடுத்த இதய ஓட்டத்தோடு
வெளியே விழுந்த அவசர வார்த்தைகள்...

சன்னலுக்கு வெளியே கை நீட்டாதே
நேரத்துக்கு சாப்பிடு
நல்லபடியா ஊர் போய் சேர்ந்து காகிதம் போடு...

இவையனைத்தையும்
கண்ணாடித் திரையில்
கைவிரல் நகரத்தி மட்டுமே
படித்துக் கொண்டிருக்கும்
தலைமுறையெனில்
நீங்கள் பாவம் !

#மணிமீ

#தந்தையர்_தின_வாழ்த்துக்கள்
19-ஜூன்-2016

எழுதியவர் : மீ.மணிகண்டன் (19-Jun-16, 11:45 pm)
பார்வை : 91

மேலே