என் அழகிய தமிழ் மகள்

மாசில்லா முழு நிலவை
கறைபடாமல் எடுத்து வந்து
மோகத்துடன் படைத்த மதிமுகம்
இவள் முகம்...!.

சேரநாட்டு வில்கொடியில்
சேர்ந்திருக்கும்
இவள் புருவங்கள்...!
சோழ நாட்டு புலிக்கொடியில்
பொதிந்திருக்கும்
இவள் வீரங்கள்...!
பாண்டியனார் கொடி மீனில்
மறைந்திருக்கும்
இவள் கண்ணழகு...!

முத்தமிழும் கலந்தெடுத்து
மெல்லியதாய் வார்த்தெடுத்து
முக அழகுக்கேற்றபடி
முயன்று படைத்த
இவள் மூக்கழகு...!

தேனூறும் தினைமாவில்
செந்நாவல் பழம்பிழிந்து
செய்து வைத்த இவள் உதடு...!

செங்காந்தள் மலரெடுத்து
செய்த அழகு மென்விரல்கள்...!

வெண்சங்குப் பூவெடுத்து
செய்த அழகு வெண்கழுத்து...!

தும்பைப் பூப்போலே
தேர்ந்த அழகுப் பல்வரிசை...!

தேமதுரத்தமிழோசை
தேவதையிவள்
குரலோசை...!

அதிகாலைப் பனித்துளியில்
நனைந்து நிற்கும் இளரோஜா
நங்கையிவள் உடல்வனப்பு...!

நொச்சிப் பூவெடுத்து
நேர்த்தியாய் வகிடெடுத்து
சங்க காலப்பூக்களெல்லாம்
பின்னாத கார்குழலை
பெருமையாய் அலங்கரிக்க
பெருமைகொண்டே காதலித்தேன்
அவள் அழகை...!.

அள்ளஅள்ளக் குறையாத
பல கவிதை பாக்களெல்லாம்
எனக்குள் தந்து நின்றே
மனதுக்குள் சிரிக்கின்றாள்...!

பொருனை ஆற்றின்
மகத்துவமோ
கருணை வடியும்
அழகுமுகம்...?

பாலாற்றின்
பெயர்ப்பொருத்தம்
மங்கையிவள் மனதழகோ...?

கரை நிறைந்த காவிரியின்
நுரை அசைவோ
இவள் கண்ணசைவு..?

கலையாத மேகமெல்லாம்
கார்கூந்தலிலே விளையாட
விண் நாட்டில் இருந்திறங்கி
பசுமை தவழ்ந்திருக்க
மண் நாட்டில்
மழைத்துளியாய் பவனிவரும்
அருமழையும் இவள்தானோ...?

திருக்குறளின் முப்பாலும்
இவள் நாட்டில்
முக்காலம்...!

ஐம்பெருங் காப்பியமும்
இவள் உடலில்
அலங்காரம்...!

மலைதவழும் கார்மேகம்
கூந்தலாய் மாறியதால்
குறிஞ்சி நாட்டுக்கு
சொந்தம் இவள் கூந்தல்...!

சந்தனமும், அகில்மணமும்
வாசமோடு கலந்ததனால்
முல்லை நிலத்துக்கு
சொந்தம் இவள் மேணி...!

பச்சைபசும் வயல்போர்த்திய
மருத நிலம்
இவள் தாவணி...!

நெய்தல் நிலமிவள்
நேசிப்பின் கண்வண்ணம்...!

பாலை என்பதில்லா
பவளராணி இவளின்
பொற்காதல் அரசாட்சி...!

காலங்கள் அழிந்தாலும்
கலையாது இவள் வனப்பு...!
வேதங்கள் அழிந்தாலும்
அழியாது இவள் சிறப்பு...!.

தேடித்தேடி சொல்லெடுத்து
எழுதி எழுதி வடித்தாலும்
சொல்லிடவே முடியாது
என் சோலைமயில் தமிழ்மகளின்
சிறப்பான பேரழகை...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (25-Jun-16, 10:00 am)
பார்வை : 505

மேலே