மருந்து கொடுக்க ஆசையா --------- மருந்துகள், இந் தியா, தரக்கட்டுப்பாடு ----ஷங்கர்

இந்தியாவின் முன்னணித் தொழில் துறைகளில் ஒன்றாக மருந்து உற்பத்தித் துறை இருக்கிறது. உலகின் மருந்து உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை வகிக்கிறது. உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றைக் குறைந்த செலவிலேயே செய்யக்கூடிய மையமாகவும் இந்தியா திகழ்கிறது. உலகத் தரம் வாய்ந்த ஆய்வகங்களும், புத்தம் புதிய முயற்சிகளுக்குச் சளைக்காத விஞ்ஞானிகளும் இந்தியாவில் இருக்கின்றனர். சாதாரணத் தலைவலி மாத்திரைகளிலிருந்து, சிக்கலான இதய நோய்களுக்கான மருந்துகள் வரை இங்கு தயாரிக்கப்படுகின்றன.

2005-ல் காப்பீடு முறை வந்தபின்னர், உயர்தரமான பொதுமருந்துகளை உலகம் முழுவதும் ஏற்றுமதிசெய்யும் நாடாக இந்தியா உருமாறியுள்ளது. உலகளவில் எய்ட்ஸ் மருந்துகளை அதிகமாக விநியோகம் செய்யும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், அமெரிக்கா போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.

இந்திய அரசும் மருந்து உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் வகையில் மருந்து உற்பத்தியாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. மருந்து கட்டுப்பாடு ஆணையத்தால் (டிரக் கண்ட்ரோல் அத்தாரிட்டி) அங்கீகரிக்கப்பட்ட பெரும்பான்மையான மருந்துகளைத் தயாரிப்பதற்கு உரிமம் எதுவும் அவசியமல்ல. அத்துடன் மருந்து உற்பத்தித் துறையில் 100 சதவீதம் அயல்நாட்டு முதலீட்டை இந்திய அரசு தாராளமாக அனுமதிக்கிறது.

வாய்ப்பும் வேலையும்

மருந்து உற்பத்தித் துறை சார்ந்தவர்களுக்கும் பெரும் எதிர்காலம் இந்தியாவில் காத்திருக்கிறது. ஃபார்மசி படிப்பு முடித்த இளங்கலைப் பட்டதாரிகளும் முதுகலைப் பட்டதாரிகளும் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், அரசுத் துறைகள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிலையங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிலையங்களில் பணியாற்றலாம்.

உணவு மற்றும் அலங்காரப் பொருட்கள் உற்பத்தித் துறை

உணவு, அலங்காரப் பொருட்கள் உற்பத்தித் துறையில் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தைச் சோதிப்பதற்கான பணிகளும் வாய்ப்புகளும் ஃபார்மசிஸ்டுகளுக்குப் பிரகாசமாக உள்ளன.

உற்பத்தி வேதியியலாளர்

குறைந்தபட்சம் 18 மாதங்கள் பணி அனுபவம் உள்ள பி.ஃபார்ம் பட்டதாரிகள் மேனுபேக்ச்சரிங் கெமிஸ்ட் எனப்படும் உற்பத்தி வேதியியலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மருந்துகளைத் தயாரிப்பதை நேரடியாக மேற்பார்வை செய்யும் பணியாக இது இருப்பதால் தொழில்நுட்ப ரீதியான நிபுணத்துவம் தேவை. இவர்கள் பின்னர் தொழிற்சாலை மேலாளராகப் பணி உயர்த்தப்படும் வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மருந்து உற்பத்தி நிறுவனமும், மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான உரிமங்களை மருந்து மற்றும் அலங்காரப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பெறுவதற்கு பி.ஃபார்ம் பட்டதாரிகளை வேலைக்கு வைத்திருக்க வேண்டியது அவசியமென்பதால் உற்பத்தி வேதியியலாளருக்கு வேலை சார்ந்த பாதுகாப்பும் உத்தரவாதமானது.

தரக்கட்டுப்பாடு அல்லது தர உத்தரவாத வேதியியலாளர்

மருந்துகளைப் பகுப்பாய்வு செய்வதிலும், நுட்பமான கருவிகளைக் கையாளும் திறனும் இருந்தால் அவர்கள் குவாலிட்டி கண்ட்ரோல் ஆர் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் கெமிஸ்ட் எனப்படும் தரக்கட்டுப்பாடு அல்லது தர உத்தரவாத வேதியியலாளர் பணியைத் தேர்ந்தெடுக்கலாம். மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் போதும், தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் அதன் தரம் தேசிய தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் மருந்துத் தயாரிப்பு விதிமுறைகளுக்குட்பட்ட தரத்தில் உள்ளதா என்பதைப் பரிசோதிக்கும் பணி இது.

மருத்துவமனை மருந்தாளுநர்

மருந்துகளைக் கொள்முதல் செய்வது, மருந்துகளைப் பாதுகாப்பது, மருந்து விநியோகம் போன்றவை மருத்துவமனை ஃபார்மசிஸ்டின் பணிகளாகும். ஆனால் இந்தப் பணியைப் பொறுத்தவரை குறைந்த அளவு வளர்ச்சியே உண்டு.

சமூக மருந்தாளுநர்

தனியார் மருந்துக் கடைகளில் ஃபார்மசிஸ்டுகள் அவசியமானவர்கள். டிப்ளமோ இன் பார்மசி படித்தவர்கள் எளிதாக இந்தப் பணியைப் பெறலாம்.

அரசு ஆய்வாளர்

அரசு மருந்து ஆய்வகங்களில் ஃபார்மசி பட்டதாரிகள், தனியார் மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளின் மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்க்கலாம். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மருந்துகளைப் பரிசோதனை செய்யும் அனுபவத்தை ஏற்கெனவே பெற்றிருத்தல் அவசியம்.

மருந்து ஆய்வாளர் (டிரக் இன்ஸ்பெக்டர்)

பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

தேர்வு எழுதி ஃபார்மசி பட்டதாரிகள் மருந்து ஆய்வாளர்களாக முடியும்.

ஒரு மருந்து ஆய்வாளராக, மருந்துகளின் பாதுகாப்பு, தரம்,

திறன் ஆகிய அம்சங்களைப் பரிசோதிக்க முடியும். தொழிற் சாலைகளிலிருந்து மருந்துக்

கடைகள் வரை அவர்களுக்குப் பணிகள் உள்ளன.

ஆய்வாளர் பணி

மருந்துத் தயாரிப்பு தொழிற்துறையிலும், மருந்து ஆய்வகங்களிலும் ரிசர்ச் அனலிஸ்ட் என்னும் ஆய்வாளர் பணிக்கு எப்போதும் புதிய ஆய்வாளர்கள் தேவைப்படுகின்றனர். இருக்கும் மருந்துகளை மேம்படுத்துவதற்கும் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும் அவர்கள் உதவுவார்கள்.

இந்தப் பணிக்கு ஒருவர் எம்.ஃபார்மா அல்லது அதற்கும் மேம்பட்ட கல்வித் தகுதியைப் பெற்றிருத்தல் அவசியம்.

சந்தைப்படுத்துதல்

மருந்துகளைச் சந்தைப்படுத்துதலைப் பொறுத்தவரை, தனி நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களையும், மருந்துக் கடைக்காரர்களையும் சந்திக்க வேண்டிய சிறப்புத் திறன்கள் தேவைப்படும். தொடக்கநிலைப் பயிற்சிக்குப் பின்னர், மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் ஆக பணியாற்றலாம். இத்துறையில் பொதுமேலாளர் வரை திறமை மற்றும் அனுபவத்துக்கேற்ப உயரும் வாய்ப்புகளும் உண்டு.

எழுதியவர் : (28-Jul-16, 10:47 am)
பார்வை : 208

மேலே