ஶ்ரீ இராமானுஜர் -1000

ஶ்ரீ இராமானுஜர் -1000
(:கட்டுரைமலர்: M.பழனிவாசன்)

பாரததேசத்தின் அட்டையாள விளங்கும் இந்த(து) சமூகம் ஒப்புயர்வற்ற தன்மைகொண்டது. இது குறிப்பிட்ட இயக்கத்தாலோ, தலைவர்களாலோ, அல்லது ஆளுமைத்தன்மை கொண்ட பிற கட்டமைப்புகளாலோ வழிநடத்தப்படுவதில்லை. ஆயினும் உலகம் முழுவதும் இன்று மீண்டும் தன் தாய்மதம் நோக்கி தன் கரங்களை நீட்டுகிறது.
பெருமைமிகுந்த இந்த(து) சமூகம் அளப்பரிய அறிவுப்பொக்கிஷமாகத் திகழ்வதாகும். இதனைப் போற்றுவதற்கும், பரப்புரை செய்வதற்கும், வாழ்ந்து வழிகாட்டவும், அவ்வப்போது இறைவன் மானிடப்பிறவியாக அவதாரமெடுக்கிறான். இதைப்போலவே, இறைவனின் அம்சங்களும் அவதரிக்கின்றன. இவ்வகையில், வைணவத்தில் திருமாலின் பாம்பணையாக விளங்கும் ஆதிசேஷனின் அம்சமே ஸ்ரீ இராமானுஜர்.
ஸ்ரீ இராமானுஜர் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீ பெரும்புதூரில் பிங்கள ஆண்டு, சித்திரைத் திங்கள், 13-ம் நாள் வியாழக்கிழமை சுக்கில பட்சம், பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் கடக லக்னத்தில் (ஆங்கில ஆண்டு கி.பி. 4.4.1017) ஆசூரி கேசவ சோமையாஜுலு –காந்திமதி என்ற தம்பதியினருக்குப் பிறந்தார். சிறுவயதிலேயே ஞானத்தின் சொரூபமாக விளங்கிய இவர்,. இறைவனின் படைப்பில் மானிடஇனத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துக்கூறுவதோடு நின்றுவிடாமல் தானே அதற்கு முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டினார். ஆச்சாரம், அனுஷ்டானங்களில் தீவிரம்காட்டிய இவர் தனது மனைவிக்கு, தன் கொள்கையை விளங்கவைத்து அவரை தன்வழியில் மாற்றிக் காட்டினார். "ஒருவன் தெருவில் விழுந்து, காயமுற்று இரத்தம் சிந்தும்போது, நீயும் இரத்தம் பெருகக் காயமடைந்திருப்பதாய் உணர்ந்தால்தான், நீ வைஷ்ணவன். காயமுற்றவன் வேறொருவன் என்ற உணர்ச்சி உனக்கு ஏற்பட்டால், நீ வைஷ்ணவன் இல்லை. எந்த இஷ்ட தெய்வத்தை வணங்கினாலும், என் திருமாலுக்கே அது சேரும்' என்று இவர் கூறினார்.
இவருக்கும் பலநூற்றாண்டுகள் கழித்து அவதரித்து சைவநெறிமுறைதன்னில் சமரச சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து, “வாடிய பயிரைக் காண்டபோதெல்லாம் வாடினேன்” என ஜீவகாருண்யத்தில் உயிர் உருகிய வடலூர் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் கருத்தை முன்னரே முழங்கியவர்.
இந்த(து) சமூகத்தில் ஏதோ சிலகாரணங்களால், அறியாமையால் தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கிவைக்கப்பட்ட மக்களை அரவணைத்து, அவர்களும் ஆலயப்பிரவேசம் செய்ய தன்னாலான அனைத்தையும் செய்து சாதித்துக் காட்டியவர் ஸ்ரீஇராமானுஜர். உயர்ந்தகுலமெனக் கருதப்படும் குலத்தில் பிறந்த இவர், ”தாழ்த்தப்பட்டவர்கள்” என ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை “திருக்குலத்தார்” (புனிதம் நிறைந்த குலத்தினர்) என அழைத்தார்.
இவருக்குப்பின் பலநூற்றாண்டுகள் கழித்து தோன்றிய மோகன்தாஸ் கரம்சந்த் (காந்தியடிகள்) தாழ்த்தப்பட்ட மக்களை “ஹரிஜன்” (திருமாலின் குழந்தைகள்) எனக்கூறியதற்கும் முன்னோடி ஸ்ரீ இராமானுஜர் அவர்களே.
தமிழகத்தில், பகுத்தறிவு எனும் பெயரில் கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டோரும் இன்று ஸ்ரீஇராமானுஜரின் புகழ்பாடத் தொடங்கியுள்ளமையே இதற்கு நல்ல சான்றாகும்.
”நன்முக்தி” எனும் சொர்க்கம் சேர்வதற்கு என்னவழி என ஆசான் ”திருக்கச்சி நம்பி” அவர்களிடம் கேட்டபோது, அவர் “ஓம் நமோ நாராயணாய நம” என்கிற மந்திரத்தை உபதேசித்தருளினார். இதனை திருக்கோஷ்டியூர் பெருமாள்கோயில் கோபுரத்தின் மீது ஏறிநின்றுகொண்டு, சாதிசமய பேதமின்றி, சமூக ஏற்றத்தாழ்வுகளின்றி வெளிப்படையாக அறிவித்தார். இதனால் கோபமுற்ற ”திருக்கச்சி நம்பி” அவர்கள் ஸ்ரீ இராமானுஜரைப் பார்த்து “இவ்வாறு நீ செய்ததால் நரகத்திற்குத்தான் செல்வாய்” என சபித்தார். அதற்கு ஸ்ரீ இராமானுஜர் அவர்கள் “என் ஒருவன் பொருட்டு பல்லாயிரம்பேர் சொர்க்கம் செல்லமுடியும் எனில, நான் ஒருவன் நரகம் செல்வதில் எந்த ஆட்சேபணையுமில்லை.” என தனது உறுதியான பதிலால் திக்குமுக்காட வைத்தார். இப்படி மேன்மையான பக்தியில் மெய்யான பகுத்தறிவு கண்டவர் ஸ்ரீ இராமானுஜர் அவர்கள்.

ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து, ஞானத்தில் மேம்பட்டு, இல்வாழ்வில் ஈடுபட்டு, துறவறம் ஏற்று, பக்திமார்க்கத்தில் விசாலமான கொள்கைகொண்டு, சோழமன்னனின் மதமாச்சர்யத்தால் அபாயத்திற்காளாகி, மைசூர் மேல்கோட்டைக்கு இடம்பெயர்ந்து, பின் அங்கிருந்து மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து ரங்கநாதன் அக்கோயிலின் நிர்வாகத்தில் புரட்சிகரமான மாறுதலைச் செய்தவண்ணம் 120 ஆண்டுகாலம் வாழ்ந்த ஸ்ரீ இராமானுஜர் அவர்கள் கி.பி. 1137 ஆண்டு, தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் இறையடி சேர்ந்தார்.
அவரது பூதவுடல் ஸ்ரீரங்கம் கோயிலில், பத்மாசன நிலையில் பதப்படுத்தப்பட்டு, அத்திருமேனிக்கு புனுகு சாத்தப்படுகிறது. தைலகாப்பும் செய்யப்படுகிறது. உலகிலேயே, ஆயிரம் ஆண்டுகளாக, இன்றும் பங்கமில்லாமல், பாதுகாக்கப்படும் ஒரே மானிடத் திருமேனி மகான் ஸ்ரீஇராமானுஜர் திருமேனி மட்டுமே. ”உடையவர்” சந்நிதியில் எவரும் என்றும் தரிசிக்கலாம்.
இத்தகைய மாபெரும் சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீஇராமானுஜர் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்து ஆயிரமாவது ஆண்டு துவங்கிறது. நாம் வாழும் காலத்தில், கிட்டும் மிகப்பெரிய பேரென்று எண்ணி, சிறப்புசெய்வதன் மூலம், இந்த(து) சமூகத்தின் பெருமை போற்றுவோம். உலகமாந்தர் அனைவரும் தங்களிடையே ஏற்றத்தாழ்வுகளை நீக்கிவாழ, நம்மாலான பணிகளைச் செய்ய உறுதியேற்போம்.

------------ஓம் நமோ நாராயணாய------

எழுதியவர் : எம். பழனிவாசன் (3-Aug-16, 7:10 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 261

சிறந்த கட்டுரைகள்

மேலே