புரட்சிக்கவியின் வழியினிலே

=============================
தமிழுக்கு அமுதென்று தந்த பேரில்
=தான்வாழும் பாரதியின் தாசன் வாக்கை
அமுதென்று உண்ணாமல் அன்றும் இன்றும்
=ஆங்கில விஷஊசி ஏற்றி நாவால்
தமிங்கிலமாய் பேசுகின்றத் தன்மை மாற்றி
=தரணியிலே தரமான தமிழைப் பேசும்
தமிழர்களை உருவாக்கும் தொண்டு செய்தல்
=தமிழர்களின் தலைகடமை தானே இங்கு.

சங்கெடுத்து முழங்கவைத்த சந்தக் கவியின்
=சங்கத்தமிழ் வேட்கைக்கொரு சங்கம் செய்து
பங்கெடுக்கும் தமிழருக்கு பாட்டுத் தலைவன்
=பரிசளித்த பாடல்களில் பொதிந்த உண்மை
தங்கமென மின்னுகின்ற தமிழின் மேன்மை
=தனைவழங்கி தமிழுயர்த்தத் தானே முயல
மங்களங்கள் கூடிவந்து மழையாய் பொழிய
=மடல்விரிக்கும் பூக்களிலே மணக்கும் தமிழும்

தமிழன்னை வீட்டிருந்த தாமரைப் பூவில்
=தரமற்றோர் வீட்டிருக்கும் தகாத செயல்கள்
அமிழ்ந்திங்கு புதைகின்ற அவரின் கனவை
=அரியணையில் ஏற்றுதற்கு ஆவண செய்து
நிமிர்ந்திருப்போம் நாம்தமிழின் நிந்தனை நீக்கி
=நிலைமறந்து பரிதவிக்கும் நேசத் தமிழை
உமிழ்ந்துவிட்ட உலகின்முன் உயர்த்திக் காட்டி
=உயர்ந்திருப்போம் தாசன்வழி உணர்ந்தே என்றும்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (6-Aug-16, 2:15 am)
பார்வை : 257

மேலே