வேண்டும் வரம் தருவாயா

வேண்டும் வரம் தருவாயா.......??

தத்தி தத்தி நடந்திடுவாள்
கொஞ்சல் மொழியில்
கதைத்திடுவாள்.....
கொஞ்சி கொஞ்சி என் கன்னம்
கரைத்திடுவாள்.......
கிள்ளி கிள்ளி என் எடையும்
குறைத்திடுவாள்....

சுவரெங்கும் கைவண்ணம்
காட்டிடுவாள்....
என் முகமெங்கும் பஞ்சவர்ணம்
பூசிடுவாள்...
என் மேலே ஏறியே அவளும்
உலகமதை சுற்றிடுவாள்....
என் காலில் ஊஞ்சல் கட்டியே
பம்பரம் போல் சுழன்றிடுவாள்.....

கண்களிரண்டால் கவிதை
மொழி பேசிடுவாள்.....
மழலை மொழியில்
உபதேசம் செய்திடுவாள்...
என்னை அதட்டும் வேளைதனில்
ஆசானாய் உயர்ந்திடுவாள்...
கேள்விகளால் துளைத்தே அவளும்
மேதையென காட்டிடுவாள்...

தன் சிரிப்பாள் என் துயரங்கள்
போக்கிடுவாள்......
கைதட்டி சிரித்தே அவளும்
சாகசங்கள் செய்திடுவாள்......
என் பிணி போக்கிடவே அவளும்
முத்தங்கள் தந்திடுவாள்.......
தலைவலியில் துடிக்கும் போதும்
பிஞ்சு விரல் கொண்டு தடவிடுவாள்.....

தாலாட்டு பாட சொல்லியே
எனையும் தாயாக மாற்றிடுவாள்.....
என் பசி போக்கும் வேளையில்
எனக்கொரு தாயாய் மாறிடுவாள்..
தூங்கும் வேளையிலும் கூட
என் பெயர் அவளும் சொல்லிடுவாள்..
தாய்மடி தேடியே அவளும்.
என் அணைப்பில் புகுந்திடுவாள்....

பட்டாடை தான் உடுத்தி
வீதிஉலா வந்திடுவாள்....
கோபம் கொள்கையிலே அவளும்
நடனங்கள் ஆடிடுவாள்...
வீம்பு கொண்டு அழுகையில் அவளும்
நர்த்தனங்கள் புரிந்திடுவாள்...
தான் அழும் நேரம் கூட
என் கண்ணீர் துடைத்திடுவாள்......

தன் அழுகுரல் கொண்டே அவளும்.....
மெட்டொன்று போட்டிடுவாள்
சேலைகட்டி ஒத்திகையை
பார்க்கையிலே அவளும்...
மெட்டி அணியும் காலம் தனை
உணர்த்திடுவாள்.....

இனிவரும் ஜென்மங்களனைத்தும்....
கண்ணே உன் காலடியில் நானும்..
உனக்கொரு மகனாய் பிறந்திட வேண்டும்...
காலமெல்லாம் உன் மடியில் நானும்....
கவலைகள் மறந்தே தூங்கிட வேண்டும்......!!

எழுதியவர் : அன்புடன் சகி (7-Aug-16, 10:39 am)
பார்வை : 608

மேலே