தேவை வேற்றுமையிலும் ஒற்றுமை

ஒரே நாடு.
பல இனங்களை பல மதங்களை
பல மொழிகளைக் கொண்டு
வேற்றுமையில் ஒற்றுமை காணும் வல்லரசு.

சிதறுண்டு கிடந்த நாம்
பல மொழிகள் பேசி
ஒரு நாடு என்ற பெயரின்றி
பலநாடுகளாயாய் சிதறிக் கிடந்த
துணைக்கண்டம் இது

அன்று
பெயரின்றி பலநாடுகளை
உள்ளடக்கிய துணைக்கண்டம்.

இன்று
இந்தியா என்ற பெயர்வரக் காரணமே
அந்நியரென்பது தான் உண்மை.
அந்நியரே நம் நாட்டுக்கும்
நம்மில் பெரும்பான்மையோர்
பின்பற்றும் மதத்திற்கும்
பெயர் சூட்டியவர்கள்.

வடமொழியும் பாரசீகமும்
புணர்ந்தமையால் வந்தவை
வட இந்திய மொழிகள்.

தமிழும் வடமொழியும் கலந்தமையால்
தோன்றியவை பிறதென்னக மொழிகள்.

சிதறுண்டு கிடந்த நம்மை
அந்நியரின் ஆதிக்கம்
ஒன்றிணைய வைத்தது.

அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு
நமது சாதிகளல்லவா வித்தாகிப்போனது.
சாதியால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று
அந்நியரா நம்மைப் பிரித்து வைத்தார்கள்?

அந்நியர் சென்று அரைநூற்றாண்டு கழிந்தும்
சாதிவெறி அவ்வப்போது சதிராட்டம் போட
உரமூட்டும் நல்லோரும் நம்மிடையே!.

அறவழியைக் கூறும் திருவள்ளுவரையும்
அண்ணல் காந்தி அடிகளையும் மறந்துவிட்டு
எவன் நல்ல மனிதனாய் இருந்துவிடப் போகிறான்?

உருப்படாத ஊதாரிகளுக்குத் தான்
வேலையொன்றும் இல்லை.
உழைக்க நினைப்பவனுக்கு வாழ்வில்
உயர்ந்திடப் பலவழிகள்.

நிரந்தரத் தீமைகளைத் தினம் தினம்
உருவாக்குவோரை உயர்ந்தோராய்ப்
போற்றும் இளிச்சவாயர்களுக்கு
நாட்டுப்பற்று வருமா?
மொழிப்பற்று தான் இருக்குமா?

கல்லாமல் கற்ற அரைவேக்காடுகளுக்கு
தீவிரவாதம் பலவித மன்றங்கள்
வெறித்தனத்தை வளர்க்கும் அமைப்புகள்
ஏமாற்றிப் பிழைக்கும் தொழில்கள்.

ஆறறிவைப் பிசகின்றிப் பார்ப்பவன்
அவனுள்ளே தெய்வம் இருப்பதை உணர்பவன்.
மொழியும் நாடும் தாயிற் சிறந்தவை
நமக்கிரு கண்கள் அவை.

தாய்மொழியைப் போற்றுபவன்
தாய்நாட்டைப் போற்றிடுவான்
பிறமொழிக்கு மதிப்பளித்து
ஒற்றுமையை வளர்த்திடுவான்.

வெறிபிடித்த மதவாதிகளைத்
திருத்துவது யாரோ?
(மதத் தலைவர்கள் தான்
பதில் சொல்லவேண்டும்.)
அந்நியரைப் போலவே
மதவெறியர்களுக்கு இலாபம்
வேற்றுமையில் மட்டுமே.

வன்முறையை ஆபாசத்தை வஞ்சத்தைக்
கருப்பொருளாய்க் கொண்டு தீமையை
வளர்க்கும் திரைப்படங்களை
தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை
இரசித்து தீயோரை நல்ல
வழிகாட்டிகளாய் ஏற்றுக் கொள்பவன்
பயனற்று வாழ்ந்து தரம் தாழ்ந்து
வீழ்கிறான் தீமையின் பிடியில்.

காலிகள் நிறைந்த கலிகாலத்திலும்
நல்லவர்களும் இருப்பதால் இங்கு
வேற்றுமையிலும் ஒற்றுமை
வேரூன்றி நிற்கிறது.


ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே
இயம்பியது புறநானூறு:
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று.
அதுவே வடமொழியில்
“வசுதய்வ குடும்பகம்” எனப்படும்..

இம்மூதுரைகள் நம்மூச்சாய்
இருக்கும்வரை
இந்தியத் திருநாட்டில்
வேற்றுமையில் நாம் காணும்
ஒற்றுமையை
வீணர்களால் சீர்குலைக்க் முடியாது.


நல்ல நூல்களைக் கற்பதுவே
நம்மை நல்வழிப் படுத்தும்
தரம்கெட்ட பொழுதுபோக்கிகள்
நம்மைத் தறுதலையராக்கிவிடும்.

எழுதியவர் : மலர் (13-Aug-16, 7:23 pm)
பார்வை : 376

மேலே