காதல் கடிதம்

உன் நிழல் பட்ட
மண் எடுத்து வந்து
ரோஜா செடிக்கு வைத்தேன்
எத்தனை எத்தனை
நிறங்களில் எவ்வளவு
ரோஜா பூக்கள்
நித்தம் நித்தம்
என் இதய தோட்டத்தில் ..

உன் விரல் கொண்டு
குளத்து நீரில் தகதகத்த
நிலவின் கறை தொட்டாய்
சிலிர்த்த நிலவு
நொடியில் கறை நீங்கி
வெளுத்து பாலாக மாறியது
ஆம்..
அப்படித்தான் உன்
அன்பைக் கொண்டு
மோகம் தீண்டிய என்
இதயத்தின் கறைகளை
நானும் போக்கிக் கொள்கிறேன்

இரு..
இதோ..
உனது பேச்சொலி கேட்டு
புல்லாங்குழலிசையோ என்று
திகைத்து ஏங்கி நிற்கும்
இந்த ஆயர்பாடி பசுக்களை
சமாதானம் செய்துவிட்டு
வந்து விடுகிறேன்..
என் மனதையும் சேர்த்துதான்
சொல்கிறேன்!

..என்று எழுதியிருந்த
காகிதத்தை கண்டெடுத்ததாய்
சொல்லி அவளிடம் தந்தேன்..
..
இன்னுமா இப்படியெல்லாம்
எழுதி காதலிக்கிறார்கள்
ஒரு குறுஞ்செய்தியை
தட்டி " ஐ மிஸ் யூ டா "ன்னு
சொல்லலாமே என்கிறாள் ..
..
ப்ச்ச்..
அது அவளுக்காக நான்
எழுதியது என்று அவளிடம்
"சொல்லாமலே"
இந்த கவிதை
முடிகிறது!

எழுதியவர் : கருணா (20-Aug-16, 9:42 am)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 269

மேலே