ஒரு விடியல் சில முகில்கள்

ஒரு விடியல் சில முகில்கள்
நீலவானத் திரையில் வானவில் சிதறல்

ஒரு இரவு சில மேகச் சிதறல்
முகில் திரை இடையில் நிலவோவியம்

ஒரு இளந் தென்றல்
சில மலர்கள் சிரிக்கும் தோட்டம்

ஒரு மென் சாரல்
சிலிர்க்கும் சிறகுகளில் சின்னக் குருவிகள்

ஒரு மாலைப் பொழில்
சில அலைவட்டங்கள் கலைந்திடும் நிலவின் சித்திரம்

அலைகளின் நடுவினில் படகில் பயணம்
அவன் பாடும் ஏலோ லோவிலும் ஏதோ ஒரு சோகம்

சாலையில் ஒரு மாட்டு வண்டி
சலங்கை ஒலிகளுக்கிடையில் அவன் பாடும் நாடோடி ராகம்

கதிர்க்கட்டு சுமக்கும் காரெழிலி
கன்னக் குழிவுப் புன்னகையில் தையில் தாலியுடன் மாமனின் கனவு

கமலை மாடு முன்னும் பின்னும் நடக்க
அவன் தான தன்னாவுக்கு தாளம் போடும் நீரோடை

மரக் கிளை தூளியில் மழலை
துயிலுது அவள் சுயசரிதை தாலாட்டு கேட்டு

வயல் வரப்பினில் நடுகைப் பெண்களின் குலவை
வளர்வோம் உயர்வோம் என்று உறுதி சொல்லி தலை அசைக்கும் பச்சை வயல் பசுமை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-16, 5:23 pm)
பார்வை : 665

மேலே