காப்பியக் காட்சிகள் ​17 சிந்தாமணியில் செல்வம் தீவினை குறித்த நம்பிக்கைகள் ---

செல்வம்

மண்ணுலக வாழ்க்கைக்கும் விண்ணுலக வாழ்க்கைக்கும் இன்றியமையாதது செல்வம் ஆகும். வள்ளுவரும்,

‘‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு’’(247)

என்று செல்வத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. செல்வத்தைப் பெருக்கிப் பிறருக்கு உதவி செய்வோர் யானை மீது செல்வர் என்ற நம்பிக்கையும், ஆலமரங்கள் கெட்டாலும் அவற்றை விழுதுகள் தாங்கும்(495,497498) அதுபோல முதுமையில் உடல்வலிமை கெட்டாலும் இளமையில் அவர்கள் சேர்த்த பொருள் முதுமைக்காலத்தில் பயன்படும் என்ற நம்பிக்கைகள் சிந்தாமணியில் திருத்தக்கதேவரால் குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. இந்நம்பிக்கைகள் செல்வத்தை ஈட்டுவதிலும் ஈட்டிய செல்வத்தை வறியவர்களுக்கு வழங்கி உதவி செய்யும் பண்பையும் உருவாக்குகின்றன எனலாம்.

நல்வினை தீவினை குறித்த நம்பிக்கை

மண்ணுலக வாழ்க்கையில் மக்கள் செய்யும் செயல்களை நல்வினை தீவினை என்று இரண்டாகப் பிரிப்பர். இவற்றில் நல்வினை என்பது தவம் செய்தல், அருகனை வணங்குதல், கொடையளித்தல், பிற உயிர்களைக் கொல்லாமை, பிறர்மனை விரும்பாமை முதலிய செயல்களைக் குறிக்கின்றது.

முற்பிறவியில் அருகனின் பாதங்களை மலர்தூவி வழிபட்டவர்கள் இப்பிறவியில் பிறர் மலர் தூவி வழிபடும் அரசர்களாகப் பிறக்கின்றனர்(2739). தவம் செய்யும் முனிவர்கள் பிறவியைப் போக்குவார்கள்(605) அருகனது திருவடியைத் தொழுதல் நன்மையத் தரும்(511. சிற அளவேனும் உணவை வறியவர்களுக்கு ஈந்தாலா் மகாமேரு போல உயர்ந்த பலன்களைத் தரும்(2926). பொருளற்ற வறியவர்களுக்குக் கொடுக்கும் உணவு நல்லுகம் செல்ல ஏணியாகி உதவும்(2927). தேனையும் ஊனையும் உண்ணாதவர்களை மண்ணுயிர்கள் கைகூப்பித் தொழும் என்று நல்வினை பற்றி சிந்தாமணி எடுத்துரைக்கின்றது(2927).

பிற உயிர்களைக் கொன்று தின்றால் ஏற்படும் தீவினைகள்

உயிர்க்களைக் கொல்லுதல், அருகனை வணங்காமலிருத்தல், ஊன் உண்ணுதல், கள் உண்ணுதல் ஆகிய செயல்கள் தீவினை நிரம்பிய செயல்களாகக் கருதப்படுகின்றன. செல்வம் நிலையில்லாதது தாளிப்பு மணம் மிக்க உணவுகளையே உண்டவர்கள் பின்னொரு காலத்தில் பிச்சை ஏற்று உண்ணும் நிலையை அடைவர் என்பதிலிருந்து உணவின் ஈடுபாட்டைத் திருத்தக்கதேவர் குறிப்பிடுகின்றார்(2929). செல்வம் நிலையில்லாததை உணர்ந்து வறியவர்களுக்குக் கொடுத்து உண்ணாத வாழ்க்கையை உடையவர்கள் கிழிந்த ஆடையை உடுத்தி இல்லந்தோறும் சென்று பிச்சை ஏற்பர்(2929)

முற்பிறவியில் செய்த தீவினை ஊழ்வினையாக வந்து கேடு செய்யும்(945). காமம், கள், இறைச்சி ஆகியவை தீவினையைத் தரும்(1551). உயிரினங்களுக்குத் தீவினை செய்பவர்கள் நரகத்தில் துன்புறுவர்(2762). அங்கிருக்கும் கொடிய நஞ்சை உணவாக உண்பர்(2763). உயிர்களைத் துன்புறுத்தியவர்கள் உடலை வயிர ஊசியால் குத்தி நெருப்பிலிட்டு வாட்டுவர்(2766). விலங்குகளைக் கொல்பவர்களை அவ்விலங்குகளின் உடலிலுள்ள மயிர்களின் எண்ணிக்கை அளவு உடலைக் கூறுபடுத்துவர்(2766).

விலங்குகளின் ஊனை உண்டவர்கள் நரகத்தீயில் விழுந்து உடல் உருகுவர்(2765). உடும்பை வேட்டையாடியவர்களை வேட்டை நாய்களைக் கொண்டு குதறச் செய்வர்(2767). வாளை மீன்களைத் தின்றவர்களின் வாயைத் திறந்து உருக்கிய இரும்பைத திணிப்பர்(2768). கால்களை நிலத்தில் பதிந்து கிடக்கும் முள்ளில் வைத்து அவர்களது உடம்பைத் தேய்ப்பர்(2768). அம்பினால் விலங்குகளைக் கொன்று வலையினால் மீன்களை வாரிக் கொன்றவர்களை நரகத்தில் தள்ளி நாள்தோறும் சுட்டுத் துன்புறுத்துவர்(2770).

தீவினையாளர்களைத் தடியால் அடித்துத் துன்புறுத்துவர்(2771). இரும்புச் சட்டியில் இட்டுப் பொரித்து எடுப்பர்(2771). அவர்களது கண்களைக் கூரிய வாளால் குத்துவர்(2771). கூரிய முள்ளை நட்டுப் பனைமரத்தைப் பிளப்பது போன்று அவர்களது உடலைப் பிளப்பர்(2771). நாவறட்சியுற்ற தீவினையாளர் குடிக்க அருவெறுக்கத்தக்க குளத்து நீரைக் குடிக்கக் கொடுப்பர்(2772). தீவினையாளர்களைச் செப்புக் குழம்பில் அழுத்தியும் இயந்திர ஊஞ்சலில் அமர்த்திக் கீழே நெருப்பிட்டும் பொசுக்குவர்(2774).

தீவினை செய்பவர்களை செக்கிலிட்டு ஆட்டுவர். அம்மிலிட்டு அரைத்துப் பொடியாக்குவர்(2774). பிறர்மனை நயந்த கயவர்களை உலைக்களத்தில் பழுக்கக் காய்ந்த பாவைகளைக் கட்டித் தழுவச் செய்வர்(2769). ஐம்பொறிகளைக் காக்காதவர்களின் உடல் தசைகளை நரகர், ஈட்டி, வேல், குந்தம், வாள், எரியும் முனையுடைய சுரிகை முதலியவற்றால் எட்டுத் திசைகளிலும் சிதறிக் கிடக்கும்படி செய்வர்(2764). மண்ணுலகில் தீவினைகளை விதைப்பவர்களைக் கழுவில் ஏற்றித் துன்புறுத்துவர்(2776).

இவ்வாறு பிற உயிர்களைக் கொன்று அதனைத் தின்பவர்களும், பிறன் மனை நயப்பவர்களும் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாவர் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவி வந்தது. தீயன செய்பவர் தீயனவற்றாலேயே அழிவர் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் நிலவியதை சிந்தாமணி தெளிவுறுத்துவது நோக்கத்தக்கது.

முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

எழுதியவர் : (30-Aug-16, 3:32 pm)
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே