அவங்க தான் என் அம்மா அப்பா

அவங்க தான் என் அம்மா அப்பா ...


அம்மா!
உங்களை கண்ணீரால்
கலந்திடாமல்
நேர்பட எழுதுகிறேன்...
நான் கவலைக்கொண்டால்
தாங்கிடுமோ
உங்கள் மனம் ...

அம்மா
நான் அதிகமாக
நேசித்த உலகம்
உங்கள்
வயிறுதானே ...
நான் புள்ளியாக தெரிந்தபோதும் தட்டித்தடவி
தைரியம் தந்தீர்கள்...

நான்
உங்கள் வயிறு கிழித்து வந்தபோதும்
என் முகம்கண்டு அகமகிழ்ந்தீர்கள் ...

நான்
உதைத்து உதைத்து
அம்மாவின் வயிறு கிழிந்திடுமோ என்று
எண்ணியதில்லை ..
நீங்களோ கிழித்துக்கொள்ளுங்கள்
காயம் படாமல் பிள்ளை வெளிவந்தால் போதும்
என்றீர்கள்...


அம்மா
நீங்கள்
எனக்கு தந்த
உங்கள் முதல் முத்தங்கள் நினைவில்லை - ஆனால்
நான் அதிகமாக முத்தமிட்டது
அந்த வயிற்றின் வடுக்களுக்குத்தான் ...
உங்கள் காயம் ஆறிவிட்டது
என் மனக்காயம் ஆறவில்லை...
நான் சற்று பொறுத்து வளைந்திருந்தால்
சுகப்பிரசவம் தானே ..

இருட்டுக்குள் வளர்ந்தேன்
வளர்பிறை போல் - இன்றும் தேயவில்லை
என் அம்மாவின் முழுநிலவு முகம்போல் நானாம் ...

அம்மா
எப்போது ஆரம்பித்தீர்கள்?
என்மீது அன்புசெலுத்த
சட்டென சொல்வாய் அந்த நாட்களை..
புள்ளிப்போல் தெரிந்தேனாம்
எனக்கு இரண்டு பிறந்தநாளென்று ...

நீங்கள் இருக்கும் வரை
நான் எதற்கும் ஏங்கியதில்லை
ஆனால் இன்று
என் மொத்த ஏக்கமும் நீங்கள் தானே ...

நீங்கள்
ஊட்டிவிட்ட கைவாசம் இன்னும் மூக்கினுள்
அந்த ரசம்சோறும் அப்பளமும் ..
அதற்கு ஈடில்லை
எந்த அமிர்தமும் ...

அப்பாவிற்கு உலகம்
தெரியாது -அவர் சிறு பிள்ளைப்போல் என்பாய் ...

அந்த நாட்களை
மறக்கமுடியவில்லை ...
பனிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதி
நீங்கள்
கூறிய மதிப்பெண்களும் எடுத்தேன் ...

பல்வலி என்றல்லவா
மருத்துவமனைக்கு சென்றாய்..
பத்துநாளில் புற்றுநோய் என்றார்கள் ...
அடுத்தநாள் என் மடியில் உயிர்துறந்தாய் ...

அன்று நானும் சிறுபிள்ளை
அப்பாவும் சிறுபிள்ளைதான்
நீங்கள்
கூறிய உண்மை விளங்கியது ...
அழுது புரண்டோம்
நீங்கள் இன்றும் வரவில்லை
நிசத்தில் ...

கனவில் அம்மா வருவாங்க
நீ தூங்கு என்பார் அப்பா ...
நானும் நீங்கள்
கட்டிய சேலைகளில் தான்
நான் உறங்குவேன் ...

அப்பாவும் சொல்லுவார்
நானும் சொல்லுவேன்
கனவில் நீங்கள் வந்த காட்சிகளை ..
அம்மா வந்தாங்க
முகத்தை மட்டும் பார்த்திட்டு போறாங்கா...

நாட்கள் சென்றது
வறுமையும் நம்மிடம் போராடி தோற்றது ...
வளர்ந்தேன் வாலிபனாக
வேலையும் கிடைத்தது...

வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது ...
என் அப்பாவும் அம்மாவும் இன்றும் கனவில் வருகிறார்கள் ..
என் முகம் மட்டும் கண்டு செல்கிறார்கள் ...

நானும் புடவையும் வேட்டியையும் கட்டியனைத்து தூங்கிறேன்
அவர்கள்
வாசத்தில் பாசத்தை காண்கிறேன் ...

நீங்கள் இருவரும்
கனவில் வரும் நாட்களில்
தான் ...
இனி
என்னுடைய வருங்காலங்கள்!!

தொடரும் ...
என் வாழ்க்கையின் படம் பார்த்து வரைந்த நிழல் கவிதை :க.மருதுபாண்டியன்

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (2-Sep-16, 9:41 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 1858

மேலே