தோட்டம்

தோட்டம்

அழகான தோட்டம்
அழகான பூக்கள் இருந்தும்
என் மனம் மாறவில்லை
என்னால் சோகத்திலிருந்தும் மீளவில்லை

நான் கண்டேன்,
அந்த பூக்கள் நடுவே
மனதை மயக்கும் ஓர் மெல்லிய தென்றல்.
தென்றல் வருட ,
நான் திரும்ப

பூக்களின் நடுவே
உன் சிரிப்பு
மத்தாப்பூ போல்
பிரகாசித்து கொண்டிருந்தது.

எனக்கு தெரியாமல்
என் உதடும் சிரித்துக்கொண்டிருந்தது
சோகத்தையும் மறந்து,
உன் சிரிப்பை கண்டு

அக்கணம் என் சோகம்
மேகம் போல் கலைந்தோடியது
உன் முகத்தை காண
அருகில் வந்தால்
கருமுகில் நிலவை மறைப்பது போல்
கருக்கூந்தலை கொண்டு முழுமதியை மறைத்திறந்தாய்....

ஒற்றை வானவில் உதட்டில் சிரிக்க
உன் கண்களோ வண்ண வானவில்லை பார்க்க
என்னையும் வானத்தை
அண்ணாந்து பார்க்க வைத்துவிட்டாய் ...

திடீரென ஓர் மின்சாரம்
என்னவென்று பார்த்தால்
உன் சுண்டுவிரல் தொட்டவுடன்
என்னை சுண்டு இழுக்கிறது.
அந்த நொடியில் என் ஜாதகத்தில் உள்ள
தோஷம் எல்லாம் சந்தோசமாக மாறின....

நான் சந்தோசமாக வீடு திரும்பினேன்.

மீண்டும் மீண்டும்
அதே இடத்திற்கு வந்தேன் கண்டேன்
என்னவளை-
தினம் தினம் பூக்களோடு பூக்களாய்
அப்பூவையும் ரசிக்க ஆரம்பித்தேன்.

ஒரு நாள் கலைந்த மேகம் ஒன்று கூடின சோகமும் சேர்ந்தது
அவ்வேளையில் வீடு மாறும் சூழ்நிலை
பூக்களையும் பிரியும் வேலையும் வந்தது
பிரிய மனமின்றி பிரிந்தேன், வீட்டை மாற்றினேன்.

புதிய இடம் , புதிய வீடு, புதிய மக்கள் என்று பார்க்க
என் மனம் அலைபாய சலனத்துடன் வாழ்ந்து வந்தேன் .

நான், என் வீட்டு மொட்டை மாடியில் நின்று வானத்தை
பார்த்து கொண்டிருந்தேன். அந்த நொடியில்
வானத்தை பார்த்து ,அந்த வானவில்லை பார்த்து
ஒரு கேள்வி கேட்டேன்

"சந்தோசம் கூட ஓர் தோஷம் தானா" என்று
அதை கேட்ட வானவில் சோகத்தால் தன் நிறம் மாற,
மேகம் எல்லாம் கண்ணீர் விட்டு மழை பெய்தது
அடைமழையாய்.

அடுத்த நொடியில் மின்னல் தாக்கியது போல் ஓர் உணர்வு.
மொட்டை மாடியில் சிறிது தூரம் நடந்தேன்.
ஆம்,மின்னல் , எதிர் வீட்டு ஜன்னல் வழியே,
கீழே இறங்கி ஓடினேன் அந்த ஜன்னலை பார்க்க
அதற்குள் கதவு மூடின.

காத்து கொண்டிருந்தேன்..
ஏக்கத்தோடு அந்த ஜன்னலை பார்த்து கொண்டிருந்தேன்..
மீண்டும் அந்த ஜன்னல் கதவு திறக்கும் என்று..
தினமும் ஜன்னல் வழியாக ஜன்னலை கண்டேன்
வழக்கம் போல் ஏமாற்றம் தான் அடைந்தேன்.

ஒரு நாள் காலையில்
எழும்போது காதில் பூபாளம் கேட்க
நான் ஜன்னல் ஓரமாக நின்று எதிர் வீட்டு
ஜன்னலை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த ஜன்னல் கதவு திறந்தன, ஆர்வத்துடன் தேடி பார்த்தேன்
அந்த ஒளி எனக்கு கிடைக்கவில்லை.
ஆனால்,
ஓர் அதிசயம் நான் பழகிய சிரிப்பு
என்னை அறியாமல் தொட்டது,
தனியாக நின்று சிரித்து கொண்டிருந்தேன்.

மீண்டும் கண்டேன் என்னவளை
எதிர் வீட்டு மின்னலாக , ஒளி பரவியது
என் உள்ளத்தில் - முதன் முதலாக
சிரிப்போடு சிந்தியது என் ஆனந்த கண்ணீர்...

அன்று மாலை எனக்கு
என்னவளை காண உருகியது
என் உள்ளம்
பேச துடிக்கிறது என்
மொழியின் மௌனம்.

என் அவள்,
எதிர் வீட்டு ஜன்னல் கதவு மட்டும் திறக்கவில்லை
என் வாழ்க்கை கதவையும் திறந்துவிட்டவள்
நான் முடிவு செய்தேன் அவள்
என் உயிரோடு உயிராக வாழவேண்டும் என்று....

மங்களகரமான மாலை, சப்தத்தில் ஓர் நிசப்தம்
அவள் கண்ணை பார்த்து கூறினேன்,
" நான் உன் உயிரோடு கலக்க ஆசைப்படுகிறேன் " என்று
என்னவள் நாணத்தால் குனிந்து
நீ எத்தனை முறை தான் என் உயிரில் கலப்பாய் என்று கேட்டாள்.

ஓர் காதல் பூ
இரு மனதில்
வேர் உன்றியது
அன்று முதல் காதல் கதகளி ஆடியது.

என்னவளை எப்பொழுதும் பூக்களோடு பூக்களாய் பார்த்து பழகிய நான்
என் மொட்டை மாடியில் மலர் தோட்டத்தை அமைத்தேன்.
எங்கள் காதல் , பூக்கள் நடுவே பூத்து குலுங்கியது
எங்கள் இருமனம் வலுவடைய திருமணம் தேவைப்பட்டது.

நானும் என்னவளும் முறையோடு முறையிட்டோம்
பெற்றோம் சம்மதம் உறவோடு...
இனி நித்தம் நித்தம் ஆனந்தம்....

திருமண நாள் நெருங்க நெருங்க
என் மனதில் ஏதோ ஓர் விதமான சஞ்சலம்
முகத்தில் உள்ள சிரிப்பு குறைந்து
அகத்தில் பயம் உயிரோடு ஒட்டி கொண்டது.

இருமணங்களுக்கும் குழப்பம் திருமணம் பற்றி....
இதோ என் விதி இங்கேயும் விளையாடுகிறது.
திருமணத்திற்கு எல்லா வேலையும்
முடியும் தருவாயில் ஒரு செய்தி
என் காதில் விழ - அங்கு
என் காதல் விழுந்தது
ஆம்.

" என் தேவதையை,மரண தேவதை
அழைத்து சென்று விட்டாலாம்"

மீண்டும் ஓர் ரணம் என் அவளின் மரணம்.
என் வாடாப்பூ என்னை வாடவிட்டால்
விழுந்தேன் அவள் காலடியில்....

எனக்கு தெரியவில்லை நான் செய்தது
என் அவளின் திருமணத்திற்கு அல்ல....இறுதி சடங்கிற்கு என்று....
என் எதிர் காலம் என் எதிரே செல்கிறது
என்று சொல்லி சொல்லி
என் கண்ணீரை என்னவள் காலடியில்
காணிக்கையாக்கினேன்.

மீண்டும் முடிவெடுத்தேன்
நான் தோட்டத்திற்கு சென்று அமரலாம் என்று ...
இந்த முறை நான் சென்றது கல்லறை தோட்டத்திற்கு.....

என் முடிவை தேடி அலைந்தேன் அன்று
பிறருக்கு முடிவை அளிக்கின்றேன் இன்று...
கல்லறை தோட்டத்தில்....
என் சந்-(தோஷம்)-தீர....

நன்றியுடன்
ஜ.கு.பாலாஜி.

(இது என் ஒரு சிறு முயற்சி. தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.)

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (13-Sep-16, 9:09 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : thottam
பார்வை : 574

மேலே