நானோர் வழிப்போக்கன்

எனக்கு இருப்பிடம் எதுவும்
தேவையில்லை.
இரசித்துச் சாப்பிட
தனியுணவு தேவையில்லை

கால் நிற்கும் இடம்தான்
என் கூடாரம்..
காய்கனிகள் மட்டும் என்
நாவூறும் உணவாகும்...

கட்டுக்காகிதம் தேவையில்லை
காற்றில் நான் கவியெழுத
கடல் அலைகள் சந்தமிடும்...
வழிந்தோடும் ஓடை நீரோசை
தவிலிசையாய் கலந்தொலிக்கும்

வண்டரித்த மூங்கிலோசை
புல்லாங்குழலிசையாய்
கவிதையின் ஊடாக
கானகத்தை ஊடுருவும்...

தொங்கும் விழுதுகளே
தோரணமாய் எனக்கிருக்க
தேவையில்லை
முகத்துதி பாடும்
பொல்லாதவர்களின்
வரவேற்பு..

பட்டாடை தேவையில்லை
பணமுடிப்பும் தேவையில்லை
இடுப்பொட்டி இருந்திடவே
அரைக்கச்சை அதுபோதும்

அதுவும் இல்லையென்றால்
எனக்கேதும் கவலையில்லை
இருந்தே இருக்கிறது
ஆதிமனிதன் இலையாடை...

பார்ப்பவர்கள் என்னை
பைத்தியமென்றாலும்
பாவம் அவர்களென்பேன்.

சுவாசம் இருக்கும்வரை
மண்வெளியை
ஆண்டிடுவேன்..
என் மூச்சு எனைப் பிரிந்தால்
வான்வெளியையும்
ஆண்டிடுவேன்...
பறவைகளின் மொழிபுகுந்தே
பல நாள் கவிதைகளை
பாட்டாக்கி இசைத்திடுவேன்...

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (18-Sep-16, 2:33 pm)
பார்வை : 453

மேலே