ஒற்றையடிப்பாதை

அறைச் சுவரில் இருந்த கடிகாரம் ஆறுமணி அடித்தது. நம் ஊரில் சேவல் கூவும் சத்தம் கனடாவில் கேட்காவிடினும் குருவிகளின் கல கலப்புச் சத்தம் இருக்கத்தான் செய்தது. வழக்கம் போல் எனது ஜொக்கிங் களிசானையும் அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் சப்பாத்துக்களையும் மாட்டிக்கொண்டேன். ஏதோ ஓட்டப் போட்டிக்கு போகிறவன் போல் என் தோற்றமிருந்தது. நடையை ஆரம்பிக்க முன் கதவை பூட்டிக்கொண்டு முன் தோட்டத்துக்கு வந்தேன். புறப்படுமுன் டிவி சனலில் அன்றையமிகக் கூடிய வெப்ப நிலை 28 பாகை என அறிந்து, வெய்யில் தலைக்கு வருமுன் வீடு திரும்பவேண்டும் என்ற திட்டத்துடன் புறப்பட்ட எனக்கு, காலை வீசிய இதமான குளிர்காற்று மனதுக்கு குளிர்மையைக் கொடுத்தது. வாய்க்குள் “நடடா ராசா நட” என்ற சினிமாப் பாடலை முணுமுணுத்துக் கொண்டு ஓற்றையடிப் பாதையைத் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

குறைந்தது தினமும் மூன்று மைலாவது நடக்கவேண்டும். இது எனது குடும்ப டாக்டரின் கட்டளை. “பைபாஸ் சேஜரிக்கு” பிறகு டாக்டர் வாக்கே தெய்வவாக்காக கருதினேன். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஒற்றையடிப் பாதையில் நான் நடப்பது வழக்கம். காரணம் ஒரே பாதையில் நடப்பதில் சிலிர்ப்பு இல்லை. தினமும் ஒரே உணவைச் சாப்பிட்டு அலுப்பு தட்டுவது போன்ற நிலை ஒரே பாதையால் நடக்கும் அனுபவம். நடக்கு முன்பே என் கைக்கடிகாரத்தை பார்த்து விடுவேன். காரணம் வீடு திரும்பி வரும்போது “ எவ்வளவு நேரம் நடந்தீர்கள் என்ற என்மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லியாகவேண்டும். அதோடு நடந்ததிற்கு ஆதாரமாக சேர்ட வியர்வையில் தோய்நது இருப்பதைக் காட்ட வேண்டும். அப்போது தான் ஒரு கிலாஸ் நிரம்ப ஆரஞ்சு சாறு கிடைக்கும்.
ஊரில், வயல் வெளிகளிலும், குளக்கட்டுகளிலும் ஒற்றையடிப் பாதைகள் ஏராளம். ஆனால் குளக் கட்டு ஒற்றையடிப் பாதைகளில் நடப்பதை நான் தவிர்த்தேன், காரணம் காலைக் கடன் கழிக்கும் பலரைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்ததால் அந்த திறந்த வெளி அடல்ட்ஸ் ஓன்லி காட்சிகளைப் பார்த்து ஏன் நானும் அதை பின்பற்றுவான் என்று. சில சமயங்களில் அந்த திறந்த வெளி நிர்வாணக் காட்சிகளில் எனக்கு தெரிந்தவர் யாரும் இருந்தால் ஏன் வீண் வம்பு . யாரோ ஆரம்பித்து வைத்த அடிச்சுவடுகளை மற்றவர்கள் பின் பற்றியதால் தோன்றியவை ஒற்றையடிப்பாதைகள். அரசு அதை அமைக்க வரிப்பணத்தை செலவு செய்யவில்லை. அது மக்களின் சமூக சேவையால் உருவாகியவை. அதுவுமல்லாமல் ஒருவரும் அப்பாதைகளுக்கு சொந்தம் கொண்டாடவில்லை. சில சமயங்களில் கால்நடைகள் கூட அவற்றைத் தோற்று வித்திருக்கலாம். ஒற்றையடிப் பாதை எங்கே போகிறது என்று காட்டுவதற்கு போர்ட் ஒன்றும் கிடையாது. வழிப் போக்கர்களிடம் கேட்டுத் தான் தெரிந்து கொள்ளவேண்டும். சாதாரணப் பாதையில் நடந்து செல்வதை விட ஒற்றயடிப்பாதையில் நடந்து செல்வதையே பலர் விரும்புவார்கள். காரணம் மரங்கள் நிறைந்த சுற்றாடல். பாதையி;ன் இரு கரைகளிலும் பூத்துக் குழுங்கும் காட்டுப் பூக்கள். வாகனங்களின் மோதல்களில்; இருந்து தப்பித்துக் கொள்ள ஒரே ஒரு வழி அதுதான். அதுவுமன்றி வாகனங்கள் கக்கும் புகைகளை சுவாசித்து வியாதியை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்படாது. அதோடு மட்டுமல்ல, அனேக ஒற்றையடிப்பாதைகள், குறுக்குவழிகளாக அமைந்ததால், போய்ச்சேர வேண்டிய இடத்தை குறுகிய காலத்தில் போயடையலாம். தனிமையை விரும்புபவர்கள் துணிந்து நடப்பதற்கு தேர்ந்தெடுப்பது ஒற்றையடிப் பாதைகள். இரவு நேரங்களில் நடப்பதற்கு உகந்தவையல்ல சில சமயங்களில் ஒற்றைறயடிப்பாதையில் சந்திகளும் உண்டு. இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரியும் போது எந்தப் பாதையில் போக வேண்டும் என்ற மனதில் தோன்றும் கேள்விக்கு “ இந்தப் பாதையில் தான் போய் பார்ப்போமே. தொலைந்தா போகப் போகிறேன்” என்ற ஒரு அனுமானத்தில் போவோர் பலர். ஆனால் போகுமுன் திசையின் அடிப்படையிலேயே அந்த தீர்மானத்தைப் பலர் எடுப்பார்கள். ஒற்றையடிப் பாதையில் தினமும் போய் வரும் கால் நடைகள், மூளைச் சலவை செய்யப்பட்டு, சந்தி வரும் போது வழி தவறாது சரியான பாதையில் செல்லத் தவறமாட்டா. காட்டுக்குள் வேட்டையாடப் போகிறவர்கள் ஒற்றையடிப் பாதையின் ஓரத்தில் உள்ள செடிகளின் கிளைகளை அடையாளத்துக்காக முறித்து கீழே போட்டு விட்டுச் செல்வார்கள். திரும்பும் போது அவையே வழிகாட்டியாக அமைவது வழக்கம்.

இந்த முறைகளில் கிராமத்தில் அனுபவப் பட்ட நான் கனடாவுக்கு புலம் பெயர்ந்து வந்து சில காலம் அப்படியான ஒற்றையடிப் பாதைள் வழியே நடக்க ஒரு ஆசை மனதில் உருவாகியதில் தவறில்லை. என் ஆசையைப் பூர்த்தி செய்ய எனக்கு நடந்த சேர்ஜரி துணைபுரிந்தது. “நீர் தினமும் நடக்க வேண்டும். அப்போ தான் இருதயத்துக்கு நல்லது” என்று வைத்தியர் சொன்னவுடன் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பெரிய பூங்காவை எனது நண்பர் ஒருவரின் சிபார்சில் தேர்ந்தெடுத்தேன். “அந்த பூங்காவிலே நீர் விரும்பிய ஒற்றையடிப் பாதைகள் இருக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை. குப்பைகளை உமது விருப்பப் படி நிலத்தில் போட முடியாது. காலைக் கடன்களை பத்தைகளில் கழிக்க முடியாது. அப்படி செய்தால் பெரிய தண்டப்பணம் கட்டவேண்டி வரும்” என்று எனக்கு எச்சரிக்கை விட்டார். அந்த நிபந்தனைகளை மனதில் வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன். “நடப்பதினால் இரத்த அழுத்தம் குறையும்” என்றார் அனுபவப் பட்டவர் போல் என் நண்பர்.

என்னைப்போல் ஆண்களும் பெண்களுமாக பலர் அதிகாலையில் பூங்காவில் நடப்பார்கள். அவர்களைச் சந்தித்தால் காலை வணக்கம் (குட் மோர்னிங்) சொல்ல தவறமாட்டார்கள். மழை தூறிக் கொண்டிருந்தாலும் ரெயினிங் மோர்னிங் சொல்லாமல் குட்மோர்னிங் தான் சொல்வார்கள். சிலர் கண்டவுடன் “ஹாய்” என்று, ஊரில் மாட்டை விரட்டுவது போல், வட அமெரிக்க பாணியில் சொல்லுவார்கள். வந்த புதிதில் அச் சொற்றொடர் எனக்குப் புதுமையாக இருந்தது. ஆங்கில ஏகாதிபத்தியத்தில் பழக்கப் பட்ட எனக்கு “ஹலோ” சொல்லி தான் பழக்கம். ஆங்கில அகராதியில் ஹாயைத் தேடினேன் கிடைக்கவில்லை. ஏன் இந்த வம்பு என்று நானும் கிளிப் பிள்ளை போல் ஹாய் சொன்னேன். அது தான் கலாச்சாரமாம்.

சிலர் தமக்குத் துணையாக ஒரு உயர் சாதி நாயைக் கூட்டிச் செல்வார்கள். நாயுக்கும் மிருக வைத்தியர் நடக்கச் சொல்லியிருப்பாரோ என்னவோ!. வேடிக்கை என்ன வென்றால் ஊர் நாய்கள் விளக்கு கம்பங்கள் அல்லது பெரிய மரத்தைக் கண்டால் அதில் போய் மோப்பம் பிடித்து மல சலம் கழிக்கும். இதைப் பல தடவை போகும் வழிகளில் செய்யத் தவறாது. அதனால் ஒற்றையடிப் பாதையைவிட்டு விலகி நடந்தால் நாய் மலத்தின் மேல் தான் மிதிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலை கனடா பூங்காவில் உள்ள ஒற்றையடிப் பாதை ஓரங்களில் இல்லை. காரணம் நாயுடன் செல்பவர் கையோடு ஒரு பொலித்தீன் பையையும் எடுத்து செல்வார். நாய் மலம் கழித்தவுடன் புல்லில் இருக்கும் மலத்தைப் பையுக்குள் அள்ளிப் போட்டு விடுவார்கள். தங்கள் கையால் அல்ல! அதற்கு ஒரு ஷவல் உண்டு. அப்படி செய்யாவிடில் நகரசபை சட்டம் அவர்களைத் தண்டித்து விடும்.

ஒற்றையடிப் பாதையில் வாக்கிங் செல்லும் இளைஞர்கள் வோக்கமன்னையும் தங்களுடன் வாக்கிங்கிற்கு எடுத்துச்செல்வார்கள். தொழில் நுட்பம் அவர்களுக்கு நடக்கும் போதும் இசையை இரசிக்க உதவுகிறது. ஆனால் காரில் இளைஞர்கள் செல்லும் போது கேட்கும் இசை பலரின் காதுகளை செவிடாக்கும் அளவுக்கு அலறும். ஆனால் நடந்து செல்லும் இளைஞர்களின் வோக்மென்னின் ஓசை அவர்களுக்கு மட்டுமே கேட்கக் கூடியதாக அமையும். சில இளைஞர்கள் வியர்க்க வியர்க்க ஓடுவதைப் பார்த்ததும் எனக்கு எனது பழைய கால நினைவுகள் தான் மனதுக்குள் வரும். பள்ளிக்கூட ஓட்டப்போட்டிகளில் முதலாம் பரிசுகள் பல பெற்ற எனது கால்கள் இப்போது ஓட மறுப்பதன் காரணத்தை அவைகளிடம் கேட்ட போது “ எல்லாவற்றிற்கும் நீ தான் காரணம் . சிகரட்டை புகைத்தாய். வயிறு முட்ட கட்டுப்பாடு இன்றி குடித்தபின் சாப்பிட்டாய். உன் உடலின் நிறையைக் கூட்டினாய். நான் எப்படி உன்னைத் தூக்கிக் கொண்டு ஓட முடியும்” என்று என்னைக் கேட்பது போல் இருந்தது. நான் பதில் சொல்லாது நடந்தேன்.

என் எதிராக ஒருவர் வியர்க்க வியர்க்க வேகமாக நடந்து வந்தார். அவர் வந்த வேகத்தில் என்னோடு மோதிவிடுவார் போல் இருந்தது. நான் ஒதுங்கி வழிவிட்டேன். “ தாங்கியூ. எப்படி இருக்கிறீர் என்று சாட்டுக்கு கேட்டு விட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் போய் விட்டார். அப்படி என்ன அவசரமோ தெரியாது. அவருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும். அவரை அடிக்கடி நான் நடக்கும் போது சந்தித்திருக்கிறேன். தலையில் தொப்பி போட்டிருந்தார். ஒரு வேளை மொட்டைத் தலையை மறைக்கவோ தெரியாது. நான் குறிப்பிட்ட தூரம் நடந்து திரும்பும் போது அவர் மரத்தடியில் உள்ள இருக்கை ஒன்றில் அமர்ந்து சந்தோஷமாக சிகரெட்பிடித்துக் கொண்டிருந்தார். எனக்கு அவரைப் பார்க்க சிரிப்புத் தான் வந்தது. பாவம் மனிதருக்கு என் மனதில் பட்டதை சொல்லுவோம் என்று நினைத்து அவரிடம் போனேன்.

“நீங்கள் நல்ல நடை ஒன்றுக்குப் பின் களைத்துப்போய் சிகரட்டை இரசித்து புகைகிறீர்கள் போல் தெரிகிறது என்றேன் “ சிலேடையாக.

“அவர் சிரித்தார். என்னால் புகைப்பதை நிற்பாட்ட முடியாது. முப்பது வருஷமாக புகைக்கிறேன். அதுக்கு ஈடு கொடுக்கத் தான் அதிக தூரம் நடக்கிறேன்” என்றார் ஏதோ சாதனை படைத்தவர் போல்..

“அப்படி நடப்பதில் பிரயோசனமில்லை. நானும் உம்மைப்போல் ஒரு காலத்தில் சிகரட் பிடித்தவன் தான். அதோடு ஒரு ஸபோர்ட்ஸ்மன் வேறு. அதெல்லாம் சரிபட்டு வரவில்லை. சிகரட் என்னை பழிவாங்கிவிட்டது”

“ அதெப்படி சிகரட் பழி வாங்க முடியும்.” புரியாமல் கேட்டார்.

“ கெரட் குடித்ததினால் தான் தான் எனக்கு ஹார்ட் அட்டாக வந்து பை பாஸ் செய்ய வேண்டிய நிலைக்கு போக வேண்டி வந்தது என்றார் என் குடும்ப டாக்டர்” அவருக்கு விளக்கினேன். .

“ஒரு வேளை உங்கள் இரத்தத்தில் கொழுப்பு கூட இருந்திருக்கலாம். எனக்கு அப்படி இல்லை. நான் ஆறுமாதத்துக்கு ஒரு தடவை செக்கப்புக்கு போறனான். பிரச்சனை ஒன்றுமில்லை என்று டாகடர் சொன்னவர்“ என்று விளக்கம் தந்தார். “ இந்த மனுசனோடை பேசி ஏன் என்; இரத்த அழுத்தத்தைக் கூட்டுவான்;” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு. “ சரி நாளைக்கு சந்திப்போம்” என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். சில சமயம் நான் தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையை நுளைத்து அவமானப்படுவதை என் மனைவி எனக்கு அடிக்கடி சுட்டிக்காட்டுவாள். ஆனால் அந்தப் பழக்கத்தை என்னால் மாற்ற முடியவில்லை.

******
அடுத்த நாள் காலையும் எனது வழக்கமான நடைக்குத் தயாரானேன். ஒற்றையடிப் பாதையில் நான் சந்திக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் எனது சிந்தனைகளில் புதிய கதாப்பாத்திரங்களாகத் திகழந்தனர். அதில் என் மனதைக் கவர்ந்தவர் சுமார் எண்பது வயதுடைய மூதாட்டி ஒருவர். கைகளில் கோலின்றி என்னை விட வேகமாக நடந்து செல்வதைப் பார்க்கும் போது, வீட்டோடு வெற்றிலை உரலோடு திண்ணையில் இருந்துகொண்டு கிராமத்துச் செய்திகளை அசைபோடும் எம்மூர் மூதாட்டிகள் தான் நினைவுக்கு வந்தது. அங்கு முடங்கிய அவர்கள் எங்கே, இங்கே சுறுசுறுப்பாக இயங்கும் இவர்கள் எங்கே. வழக்கத்துக்கு மாறாக நேற்று நடந்த ஒற்றையடி பாதை வழியாகவே நடந்தேன். வெகு தூரத்தில் ஒரு கூட்டம் நிற்பதைக் கண்டு விடுப்பு அறிய என் நடையின் வேகத்தைக் கூட்டினேன்.

“ஏன் அங்கு கூட்டம்?. ஏதும் விபத்தா?” என்று; கூட்டத்தில் இருந்து விலகி என்னை நோக்கி வந்தவரிடம் கேட்டேன். ஆமாம் வோக்கிங்போன ஒருவர் மயஙகி விழுந்துவிட்டார். ஒரு வேளை ஹார்ட் அட்டாக்காக இருக்கலாம். அம்புலன்சுக்கு செல் போனில் போன் செய்திருக்கிறார்கள் என்றார்.

“அப்படியா .ஐயோ பாவம்..” என்று பதில் சொல்லிவிட்டு கூட்டத்தை அடையும் போது அம்புலன்ஸ் வந்து நின்றது. எட்டிப் பார்த்தேன். என்னால் நம்பமுடியவில்லை. நான் நேற்று சந்தித்து சிகரெட்டைப் பற்றி பேசிய அந்த மொட்டைத் தலை மனிதர் தான் கீழே கிடந்தார். அம்புலன்ஸ்காரர்கள் அவருக்கு அவசரச் சிகிச்சை செய்தார்கள். ஆள் அசையவில்லை. தாமதிக்காமல் ஸ்டெரச்சரில் தூக்கிப் போட்டுக் கொண்டு அம்புலன்சில் மி;ன் வேகத்தில் சைரன் ஓசையுடன் போய் மறைந்தார்கள்.

கூட்டம் கலைந்தது. தூரத்தில் கிடந்த அவரின் சிகரட் பெட்டி என்னைப் பார்த்து கண்சிமிட்டியது. என்னை எரித்து தள்ளிய அவரை நான் பழிவாங்கி விட்டேன் என்று அது சொல்வது போல் இருந்தது. எனக்கேன் இந்த வம்பு என்று பேசாமல் ஒற்றையடிப் பாதையில் என் நடையைத் தொடர்ந்தேன்.

*******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (20-Sep-16, 7:55 pm)
பார்வை : 332

மேலே