திருமுருகன் அந்தாதி ஒரு பா ஒரு பஃது

கார்மயில் வாகனனைக் கந்த கடம்பனைச்
சீர்மேவும் செந்தூரின் தேவனை - வார்குழல்
வள்ளியின் நாயகனை மன்றாடி மைந்தனை
உள்ளத்துள் வைத்தே உருகு. 1.

உருகியழு தாலிரங்கி ஓடிவரும் வேலன்
கருணையுடன் தீர்ப்பான் கவலை - திருமால்
மருகனை நெஞ்சினிக்க வாழ்த்தி வணங்கித்
திருத்தாள் பணிவாய் தினம் . 2.

தினமவன் நாமம் திகட்டத் திகட்ட
மனமுவந்து பாட மலர்வான் - வனமுறை
வேடனவன் வள்ளியுடன் வீற்றுச் செவிகுளிர்ந்தே
பாடலில் சொக்கிடுவான் பார் . 3.

பார்க்கும் விழிகளொரு பன்னிரண்டும் கைதனில்
கூர்வேலும் சேவற் கொடியுமுளோன் - சீர்பாதத்
தண்டையும் கிண்கிணிச்ச தங்கையும் கொஞ்சிடும்
வண்ணமணி மார்பும் வடிவு . 4.

வடிவு மிகுந்த வதனங்க ளாறும்
அடியவர் துன்பம் அழிக்கும் - வடிவேலும்
நித்தமும் காத்திடும் நிம்மதி தந்திடும்
சித்திக்கும் யாவும் சிறப்பு . 5.

சிறப்பாய்த் திருப்புகழ் செப்பு மடியார்
இறவாப் புகழினை எய்தப் - பறக்கும்
மயிலேறி வந்தே வரங்க ளருளும்
கயிலைவா சன்மகனே காப்பு . 6.

காப்பான் திருத்தணிகைக் கந்தன், அடிபணிந்து
கூப்பிட வந்திடுவான் குன்றிறங்கிப் - பூப்பான்
திருமுகம், அன்பாய்த் திருவாய் மலர்ந்தே
குருவாய் வருவான் குகன் . 7.

குகனே! குருபரா! குன்றுதொறும் நீலச்
சிகண்டியி லாடிடும் சீலா!- புகழ்ந்துனைப்
பாடிப் பணிந்திடும் பக்தரை யாட்கொள
ஆடிவரும் கோலம் அழகு . 8.

அழகனே! அப்பனே! ஆறுமுகா! கந்தா!
பழனிமலைப் பாலகா பாராய் ! - பழமுதிர்
சோலைவாழ் வேலா துயர்துடைப்பாய் ! நெஞ்சேநீ
வேலை வணங்கிநிதம் வேண்டு . 9.

வேண்டி வருமடியார் வெவ்வினையை வேரறுப்பான்
மூண்ட பகையொழிப்பான் முப்போதும் - ஆண்டிடுவான்
ஆலமுண்டோன் மைந்தன் அழகன் துணையிருக்கக்
காலனின் தூதரணு கார் . 10.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (21-Sep-16, 1:20 pm)
பார்வை : 74

மேலே