யாதுமாகி நிற்கிறாய்

யாதுமாகி நிற்கிறாய்
எனக்குள் யாவுமாகி நிற்கிறாய்
இருந்தும் விழி அறியா
திசை புரியா காற்றினைபோலே
என் அருகே யாதுமாகி நிற்கிறாய்....
உன் இறுக்க நேரங்களில்
நீ புன்னகைக்க என் விழிநீரை
வடியச்செய்து விளையாட்டாய்
கப்பலோட்டி பார்க்கிறாய்......
இருந்தும் என் அருகில் ஏன்
யாதுமாகி நிற்கிறாய்.......
புன்னகைத்தது போதுமென்று
என் விழிநீரை துடைத்துவிட்டு
மாயவனாய் என் இதழ்த்தீவை
விரிக்கச்செய்து சிரிப்பினிலே
நாட்டியம் ஆடி பார்க்கிறாய்......
இன்றும் என் அருகில் நீ
யாதுமாகி நிற்கிறாய்....
உன் ஆசை தீர்த்துக்கொள்ள
நீ நடத்தும் பள்ளியிலே
என்னை மாணாக்கன் ஆக்கி
தோல்வி பாடம் எடுக்கிறாய்....
என் மனதை கந்தலாக துவைக்கிறாய்....
இருந்தும் என் அருகில் ஏன்
யாதுமாகி நிற்கிறாய்.......
எங்கிருந்து வந்ததோ என்மேல்
இந்த திடுமென பாசம்
விட்டு போனவரெல்லாம்
என்னோடு கட்டி புரள அன்பில்
திக்குமுக்காட வைக்கிறாய்.....
இன்றும் என் அருகில் நீ
யாதுமாகி நிற்கிறாய்....
என்ன தான் நினைக்கிறாயோ
தீயது பாதி இனியது மீதி
இது நீ எழுதிய நியதி போல்
என்னை பொம்மையாய் ஆட்டி
தட்டாமாலை செய்கிறாய்.....
இருந்தும் என் அருகில் ஏன்
யாதுமாகி நிற்கிறாய்.......
உன்னை கோபிப்பதா இல்லை
எனக்குள்ளே அணைத்து கொள்வதா
ஒன்றும் புரியாமலே
ஏறிட்டு பார்க்கிறேன் உன்னை
என் விழித்திரைக்குள் நிற்கிறாயா என்று
என்றுமே நீ யாதுமாகி நிற்கிறாய்....
எனக்குள் யாவுமாகி நிற்கிறாய்.....

எழுதியவர் : இந்திராணி (29-Sep-16, 1:00 pm)
பார்வை : 184

மேலே