தாய்மையில் கண்ட சுகங்கள்

உன்னிடம் மாசமாக
இருக்கின்றேன் என
வெட்கத்தோடு நான் கூற
அளவற்ற மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து ஓடி வந்து எனை கட்டித்தழுவி முத்தமிட்டு சிரித்தாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

நான் உன் மடியில் படுத்துறங்க மேடிட்ட என் வயிற்றை வலக்கையால் நீ தடவி
என் காதோரம் வந்து
என் பையன் எனக் கூறி
என் உதட்டில் முத்தமிட்டாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

அடம் பிடித்து நான் உன்னிடம்
புளிப்பு மாங்காய் வேண்டும் என்று நடுச்சாமம் தான் கேட்க இரவு என்று பார்க்காமல் மரமேறி உடன் பறித்து என் கையில் வைத்தாயே என்
சிரிப்பைப் பார்ப்பதற்காய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

முதல் மாதம் இது உனக்கு வேலைக்கு போகாதே என கண்டிப்புடன் அதட்டல்
குரலுடன் சத்தமாக நீ கூற
கோபத்துடன் நான் சிணுங்க
என் அருகில் நீ அமர்ந்து
அறிவுரைகள் பல கூறினாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

மூன்றாம் மாதம் சமைப்பதற்கு
தடை என்றாய் என்னிடம் நீ
ஐந்தாம் மாதம் கனம் தூக்க
தடை என்றாய் என்னிடம் நீ
ஏழாம் மாதம் நீர் அலசி உடை
தோய்ப்பதற்கு தடை விதித்தாய்
அனைத்தையும் நீ செய்தாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

எட்டாம் மாதம் சீமந்தம் செய்ய
உன் வீட்டாரை நீ அழைத்தாய்
மஞ்சளும் பூசி, வளவி இட்டார்கள்
தினமும் மாலையில் கை கோர்த்து
நடைபயின்று இரவெல்லாம்
கண் விழித்து உன் மடி மீது
எனை உறங்க வைத்தாய்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

அத்தருணம் மனதில் ஒரு கேள்வி எனக்கு- என் தாய் இவன் தானோ..? ஆண்டவன் இருந்திருந்தால் அப்பொழுதே கேட்டிருப்பேன் இவன் அன்பை பெறுவதற்காக என்னை தாய்மை அடையச் செய்தாய்? என்று

நாட்கள் நெருங்க நெருங்க உன் கண்களில் நான் பார்த்தேன் ஒரு தயக்கம்- நம்பிக்கையை இழந்தவனாய் நீயிருந்தாய்
மார்பில் அணைத்தாய் எனை
பொறுமையை இழந்து
பல்லை கடித்து வலியென நான் கூற
பதறியடித்து ஓடிச்சென்று
ஊர்தி ஒன்றை அழைத்து வந்து
அவசரமாய் மருத்துவமனை செல்லும் முன் வியர்த்தொழுகியது
உன் முகமெல்லாம்
அன்று பார்த்தேன் உன் அன்பை..!

சில நொடிகளில் வந்தார்கள் உன் தாயும் உறவினரும் நண்பர்களும்
தனியறைக்குள் எனை அழைத்துச் செல்ல- நான் கதறும் ஒலி கேட்டு தாங்க முடியாமல் அமர்ந்திருந்தாய் கண்ணீருடன்.... பொறுமையற்று
உள் நுழைந்தாய் மின்னல் வேகத்தில் பல் கடித்து வேதனையில் துடிக்க
கைபற்றி கொண்டாய் என் விரலை..!

அரை நினைவில் நான் சிரிக்க
குழந்தை முகம் காணும் மகிழ்ச்சியில் முத்தமிட்டாய் என் நெற்றியில்
ஆண் குழந்தை பெற்றேன் உனக்கு பேரின்பம் அடைந்த நீ
நான் கொஞ்சம் கண்ணயர
கொண்டு சென்றார் வெளியில்
வாரி எடுக்க வந்தாள் உன் அன்னை "உன் மகன் உன்னை போல் இருக்குறானடா" என்று உனது அன்னை உன்னிடம் கூற பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தினாய் ஆனந்தகண்ணீரோடு..!

கண் விழித்த நான் தேடினேன் நான் பெற்ற மகனை அல்ல என்னை உயிர்பித்த கணவனை கட்டித்தழுவி முத்தமிட்டேன் சில வினாடிகள் மௌனம் பின் கைகளால் ஏந்தி முத்தமிட்டேன் நான் பெற்ற செல்வத்தை..!

அனைவரும் வாழ்த்தி விட்டு சென்றனர் தங்கள் வீட்டிற்கு
மிகுந்த பொறாமையுடன்
நானும் கணவனும் நான் பெற்ற செல்வமும் மட்டும்
ஒரு தனி உலகத்தில்.......!

எழுதியவர் : சி.பிருந்தா (2-Oct-16, 1:23 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 178

மேலே