நீங்கள் மனிதர்கள் தானா - சந்தோஷ்

ஆனாலும் நீங்கள் மனிதர்கள் தானா.. ?
-----------------------------------------------------
உங்கள் கழிப்பறை...
உங்கள் கழிவுகள்..
உங்களால் கூட சகித்து
சற்று நொடி நோக்க இயலாதுதானே...
ஆனாலும் என்ன
நீங்கள் மனிதர்களென சொல்லப்படுகிறது.

எமது ரணத்தின் மீது
வெறுப்பு உப்பு தூவி
நச்சு பார்வையிலுரசும்
உங்கள் ஜனநாயக பொதுவுடைமை
ஒரு கொடூர காட்டேரி என
எங்களால் கோபமிட முடியும்.

ஆனாலும் என்ன ?
சாக்கடைகளை சுத்தம் செய்து
மலங்களை அள்ளி ஒழிக்கிறோம்.
எங்கள் மேனியில் வழியும் வியர்வை
உங்கள் கழிவுகளாலானது.

ஆனாலும் என்ன..
எங்களை முகஞ்சுளிக்க பார்க்கும்
உங்கள் மேனியில் வீசும்
நறுமண வாடையானது
எங்களை முகஞ்சுளிக்க வைக்கிறது .

கிடைக்கும் சந்துகளில்
மூத்திரம் பெய்து
அசுத்தம் செய்தும்
அவசரத்திற்கு நுழையும்
பொதுக் கழிப்பறைகளில்
மலம் கழித்து
அலம்பிவிடாமல்
அத்துமீறல் செய்யும்
உங்கள் அநாகரிக அகராதியில்
மனிதம் என்ன விலை ..?

ஆனாலும் என்ன..?
அசுத்தம் செய்யும்
நீங்கள் மேல் ஜாதி
சுத்தம் செய்யும்
நாங்கள் கீழ்ஜாதி...!
ஆனாலும் என்ன..

நீங்கள் ஆளப்பறந்தவர்கள்
கண்ணியமற்று
பேழப் பிறந்தவர்களும் தான்.....

ஆனாலும் என்ன..
நாங்கள் மனிதர்களென
எங்களுக்கு தெரியும்..

பொதுவுடைமை பொதுவுடைமை
என கூவும்
உங்கள் ஜனநாயகத்தில்
எங்களை தனித்து வெறுத்துப்பார்க்கும்
நீங்கள் மனிதர்கள் தானா என
உங்களுக்கு தெரியுமா..?
**
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (13-Oct-16, 2:50 pm)
பார்வை : 80

மேலே