காவிரி தன் வரலாறு கூறுதல்

முன்னுரை:

என் பெயர் தான் காவிரி. எனக்கு பொன்னி என்றும் பெயர் உண்டு. பொன் போன்ற நெற்கதிரை விளைவிப்பதால் எனக்கு அப்படியொரு பெயர். காவிரி என்ற பெயர் கூட காரணப் பெயர் தான். கா என்றால் சோலை விரி என்றால் பரப்புதல் இருமருங்கும் சோலைகளை பரப்பி வருவதால் நன் காவிரி ஆனேன்.

என்னை பற்றிய கதை :

அகத்திய முனிவர் தவம் செய்தபோது அவரது கமண்டத்திலிருந்த நீரை காக்கை விட்டதாம். அதிலிருந்து வழிந்த நீர் ஓர் ஆறாக பெருகி ஓடிற்றாம். அது தான் நானாம். கவேரமாகிய காக்கை வந்து தட்டி விட்டதால் என் பெயர் காவிரி ஆயிற்றாம். கதை எப்படி இருக்கிறது? படிப்பறிவற்ற மக்கள் என்னை காவிரி என்பதற்கு பதிலாக "காவேரி" என்பார்கள்.

என் தாய்வீடு :

கருநாடகமே என் தாய்வீடு. அங்குள்ள "குடகு" மலைப் பகுதியில் "மெர்க்காரா" என்னும் இடத்தில் தோன்றுகிறேன். அங்கிருந்து ஓடிவந்து "திருக்குளத்தில்" தங்குகிறேன் அதற்கு "தலை காவிரி" என்று பெயர். இங்கு எனக்கு ஒரு கோவிலும் உண்டு. எவ்வளவு நாள் தான் அங்கேயே தங்க முடியும்? எனக்கோ சோழ நாட்டை பார்க்க வேண்டுமென்று ஆசை. என் பயணத்தை தொடங்கினேன். வரும் வழியில் என்னை சிறை வைத்தார்கள். அந்த இடத்திற்கு "கிருஷ்ணராஜாசாகர்" என்று பெயர். தடுத்த அவர்களுக்கு தண்ணீரையும் மின்சக்தியையும் அளித்தேன் அதில் அவர்கள் மயங்கி விட்டார்கள் போலும். ஒடி வந்து என்னை திறந்து விட்டனர்.எனக்கோ மகிழ்ச்சி வெள்ளம்.ஆனந்த கூத்தாடி கொண்டு கீழ்த்திசை நோக்கி ஓடினேன்.

மேட்டுர் அணை :

தமிழகத்தின் எல்லை என்னை வரவேற்றது. நன் அடைந்த இன்பத்திற்கு எல்லையே இல்லை. இன்னும் சில நாட்களில் சோழ நாட்டை அடைந்து விடலாம். கவலை இல்லை என்று எண்ணி கொண்டு தளர் நடை போட்டேன். கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்ததால் காலில் வலி. மேட்டிலும் பள்ளத்தில் குதித்தல் உடம்பிலும் வலி. எங்காவது ஒய்வெடுத்துச் சென்றால் இதமாக இருக்கும் என்று உள் மனம் எண்ணிற்று. அதற்கு ஏற்றது போல் சேலம் மாவட்டத்து மக்கள் எனக்கு "மேட்டுரில்" எனக்கொரு மாளிகை கட்டி வைத்திருந்தார்கள். அப்பப்பா மாளிகையா அது மாமனார் கோட்டை போலிருந்தது. வெள்ளையரின் ஆணையின்படி "பாகல்பட்டி ஜமீன்தார் பா.வே மாணிக்க நாயக்கர் என்னும் பொறியியல் அறிஞர் அந்த மாளிகையை வடிவமைத்துக் காட்டித் தந்திருப்பதாகச் சொன்னார்கள். இவர் நல்ல தமிழ் அறிஞர் என்றும் சிந்தனையாளர் என்றும் ஒருமுறை கேள்விப்பட்ட நினைவு. இந்த காலத்து பொறியியல் அறிஞர்களுக்கு ஆங்கிலம் தான் தெரியும் ; தமிழ் அறவே தெரியாது . எல்லாம் காலத்தின் கோணம்.

அகன்ற காவிரி :

அங்குச் சில நாட்கள் ஓய்வெடுத்தபின் , என் பணத்தை மீண்டும் தொடங்கினேன். "பவானி,நொய்யல்" என்னும் தோழிகளும் என்னோடு சேர்ந்து கொண்டனர். என் மகிழ்ச்சியை கேட்க வேண்டுமா ? பரந்து திரிந்து பாடி நடந்தேன். "திருவேங்கடப் பெருமானின்" திருவடியைத் தொட்ட போது 'அகன்ற காவிரி' என்று அன்புடன் அழைத்தனர். என் பருவமும் உருவமும் பார்ப்பதற்கு அப்படி தான் இருந்தது. என் வேகமான நடை சில மணி நேரத்திற்குள் "தோகூர்" என்னும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து.

கல்லணை :

இந்த இடத்தில் தான் கரிகால மன்னன் எனோக்கோர் உப்பரிகையைக் கட்டி வைத்திருக்கிறான். அதற்கு கல்லணை என்று பெயர். மேட்டூரும் கிருஷ்ணராஜாசாகர் முளைப்பதற்கு முன்னால் இது முளைத்து விட்டது. இதன் வைத்து ஈராயிரம் ஆண்டுகள் . இன்று கட்டியது போல் எத்துனை அழகு! தமிழர்களின் கட்டடக்கலை நுட்பத்திற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? "பட்டுக்கோட்டை" மக்களின் பரிதாபத்தை தீர்ப்பதற்கு என் அருமை தங்கை ஒருத்தியைக் கல்லணை கால்வாய் மூலம் அனுப்பி வைத்தேன். பின் திருகாட்டுப்பள்ளியில் இன்னொரு தங்கையாம் வெண்ணையாற்றை வேறொரு பக்கம் அனுப்பி வைத்தேன். அதன்பின் திருவையாறு , குடந்தை , மயிலாடுதுறை வழியாக பூம்புகாரை அடைந்தேன். ஓடி ஓடி வந்ததால் உள்ளமும் களைத்தது ; உடம்பும் இளைத்தது. இங்கு "ஆடு தாண்டவம் காவிரி " என்று அழைக்கப்பட்டேன். யார் எப்பெயரால் அழைத்தால் எனக்கென்ன? வங்கக் கடலில் என் சங்கமம் முடிந்தது. சோழ நாட்டு பயணம் மகிழ்ச்சியாக அமைந்தது.

முடிவுரை :

நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறேன். நான் யாருக்கும் எந்த விதக் கெடுதலும் செய்யவே இல்லை. பிறந்த கருநாடகத்திற்கும் பேரளவில் உதவி செய்திருக்கிறேன். புகுந்த தமிழ்நாட்டிற்கும் பெயரெடுத்து கொடுத்துள்ளேன். "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று நாவுக்கரசரின் நலவாக்கிற்கேற்ப நடந்துள்ளேன். என்னை முன்னிட்டு உங்களுக்குள் ஏன் சண்டை? இது தான் எனக்கு புரியாத புதிர். கருநாடகம் ஒரு கண் என்றால் , இன்னொரு கண் தமிழகம். இதில் எந்த கண்ணையும் நான் இழக்க விரும்பவில்லை. ஆதலால் என் போக்கில் என்னை நடக்க விடுவதே இந்த நாட்டிற்கு நல்லது. என் ஆசையும் இதுதான். நிறைவேற்ற வேண்டியதே நீங்கள் ; செய்விர்களா?....

எழுதியவர் : Maharaj (22-Oct-16, 8:05 pm)
சேர்த்தது : மகாராஜ்
பார்வை : 15777

சிறந்த கட்டுரைகள்

மேலே