தீபாவளி வந்துருச்சு மஜாதான்

தீபாவளி நெருங்குகிறது, ஆ, மஜாதான். இனிப்பு என்ன! புது உடைகள் என்ன! வித்விதமான பட்டாசுகள் என்ன! விஜயதசமி அல்லது தசரா முடிந்தவுடனேயே

தீபாவளி களை கட்டிவிடுகிறது. எல்லாக் கடைகளிலும் ஜே ஜே என்று கூட்டம், அதுவும் ஜவுளிக் கடைகளில் கேட்கவே வேண்டாம், தவிர, அடுத்து வருவது பட்டாசுக் கடைகள். இப்போதே பட்டாசு சத்தம் கேட்கத்

தொடங்கி விட்டது. வாண வேடிக்கைகள் பார்க்கக் கண்களுக்கு ஒரு விருந்துதான், ஆனால்

இதனால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது என்பதும்

உண்மைதான்.

முன் காலத்தில் மாடி வீடுகள் அதிகம் இல்லை. திறந்த வெளிகள்

நிறைய இருந்தன, ஆகையால் புகை வானத்தில் போக வசதியாக இருந்தது. இப்போது பல அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்து அடைத்துக் கொண்டு விட்டன. சில பதினாறு மாடிகள் வரை உயர்ந்து நிற்கின்றன. ஆகையால் இந்தப்ப புகை மண்டலம் கீழேயே அதிகம் சூழ்ந்து கொள்கிறது. ஆனாலும் திருநாள் என்றால் வாண வேடிக்கை வேண்டுமே! இந்தத் தீபாவளிப் பண்டிகைக்குக் காரணாமான நரகாசுரனே தன் மரணத்தை வாண வேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படிக் கேட்டுக் கொண்டானாம், ஏன் என்றால் அவனுக்குக் கடைசியில் கண்ணன் அல்லவா காட்சி அளித்தார்?

இப்போது பட்டாசு வெடிப்பதைப் பற்றிப் பார்க்கலாம். பட்டாசு கொளுத்தும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் விபத்து நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச்சுற்றி இருப்பவருக்கும் வருவது உண்டு. மகிழ்ச்சியுடன் இருக்கும் வேளை வருத்தத்தைக் கொடுத்து விடும். பெரிய வெடிகளை பெரிய அண்ணா அல்லது வேறு பெரியவர்கள் துணையுடன் அல்லது அவர்கள் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது நீண்ட ஊதுவத்தி ஏற்றி நேருக்கு நேர் நிற்காமல் சாய்ந்தவாட்டில் நின்று கொளுத்த வேண்டும். நைலான்

ஆடை அல்லது பட்டாடை தவிர்க்க வேண்டும். பட்டாசு விடும் போது ஒரு

கர்ச்சீப்பை நனைத்து முகத்தில் முகமூடி போல் கட்டிக் கொள்வது நல்லது, ஆஸ்மாகாரர்களுக்கு இப்படிச் செய்வது மிகவும் அவ்சியம். எதை ஏற்றினாலும் அது முடிந்தவுடன் ஒரு பக்கெட் தண்ணீரில் போட்டுவிட வேண்டும். சுடச்சுடக் கீழே போட்டுவிட்டு அதைத் தவறிப் போய் யாராவது மிதித்துப் பின், "ஆ சுட்டுவிட்டதே எரியறதே!" என்று அலறுவதைத் தவிர்க்கலாமே. பட்டாசு வெடிக்கும் போது அருகில் கார், ஸ்கூட்டர் இல்லாமல் இருப்பது நல்லது. பெட்ரோல், டீசல் போன்றதிலிருந்து தூரமாக இருப்பது நல்லது தானே! வீட்டில் நோயாளிகள் அல்லது வயதானவர்கள் இருந்தால், அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அங்கு வெடிக்காதீர்கள். பாவம், நோயால் அவதிப் படும்போது இதனால் இன்னும் சிரமம் ஏற்படலாம். அதே போல் சின்னப் பாப்பா இருந்தாலும் அந்த வெடிச் சத்தத்தில் அதன் உடல் தூக்கித் தூக்கிப் போடும், அதன் அருகில் வேண்டாமே!

இதே போல் வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் பட்டாசு என்றால் மிகவும் பயம். அதன் உடல் சத்தம் கேட்டாலே நடுங்கும், அதை ஒரு அறையில் வைத்துக் கதவைச் சத்தம் வராதபடி மூடி வைக்க வேண்டும். பட்டாசுகளை டப்பாவிலோ பாட்டிலிலோ வைத்து விடுவது கூடாது. சில ஏழைக் குழந்தைகள் ஏக்கமாகத் தானும் விடமாட்டோமே என்று பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கும் திறநத மனதுடன் பாட்டாசுகளைக் கொடுங்கள். உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள், அவர்களுக்கு நாம் மகிழ்ச்சி கொடுக்க நம் மனமும் மகிழும்.

தமிழகத்தில் பாட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 முதல் இரவு 10 வரை. பொது இடங்களில் பொது வழிகளில் வெடிக்கக்கூடாது. சுற்றுப்புறச்சூழல் விதிப்படி வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசை வெடிக்கக் கூடாது. பட்டாசு ஏற்றி ஹீரோ போல் கையில் வைத்துப் பின் விசிப் போடக்கூடாது.

தவறிப்போய் உடையில் தீப்பற்றினால் ஓடக்கூடாது. ஒருவரையும் பயத்தில் அணைக்கக்கூடாது. உடனே கீழே படுத்து உருள வேண்டும். தீப்புண் மேல் குளிர்ந்த நீரை ஊற்றி மெல்லிய காட்டன் துணியினால் மூட வேண்டும். பின் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும். தன் இஷ்டப்படி மருந்துகளை அதன் மேல் தடவக்கூடாது. இந்த வருடம் இலங்கையில் தமிழ் மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பிரச்சனை தீரப் பிரார்த்திப்போம்.

உங்கள் யாவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.

எழுதியவர் : (25-Oct-16, 3:06 pm)
பார்வை : 764

சிறந்த கட்டுரைகள்

மேலே