மீண்டும் வந்தார் பெருமாள் முருகன் கோழையின் பாடல்கள் கவிதை நூல் டெல்லியில் வெளியீடு

டெல்லி: எழுத்தாளர் பெருமாள் முருகனின் "கோழையின் பாடல்கள்" கவிதை நூல் வெளியீட்டு விழா டெல்லியில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் "மாதொருபாகன்" என்ற நாவல் பெரும் சர்ச்சையில் சிக்கியது.
இதனால் வேதனையடைந்த பெருமாள் முருகன், என்னுள் இருந்த எழுத்தாளன் இறந்து விட்டான் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 19 மாத காலம் எழுத்துப்பணியில் இருந்து விலகி இருந்தார். இந்த நூலுக்கு தடை விதிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் பெருமாள் முருகனுக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் அவர் எழுதிய 200 கவிதைகள் அடங்கிய கவிதை தொகுப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. கவிஞர் அஷோக் வாஜ்பாய் பெருமாள் முருகனின் கவிதை நூலை வெளியிட்டார்.

அப்போது பேசிய, பெருமாள் முருகன், மறுபடியும் என்னால் எழுத முடியும் என்று நம்ப முடியவில்லை. கவிதைதான் என்னை காப்பாற்றியது. கவிதை எழுத முடிகிற நிலையை நான் அடைந்து விட்டேன். நான் ஒதுங்கி இருந்த இருண்ட காலத்தை நினைவூட்ட விரும்பவில்லை. என்னை யாரும் மேடைகளில் பேசவும் அழைக்க வேண்டாம்.. எனக்கு மெளனம்தான் வலிமையைத் தருகிறார் என்றார்.

இந்த நூல் வெளியீட்டு விழா குறித்து எழுத்தாளர் ராஜன் குறை தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளதாவது:

பெருமாள் முருகன் மீண்டும் எழுத்தாளராக மறுநுழைவு கண்ட நிகழ்வு தில்லி தீன்மூர்த்தி பவனில் கண்ணியமாகவும், வெற்று ஆரவாரங்களற்ற திடமான மன உறுதியை அரங்கிலிருந்தோர் அனைவரும் வெளிப்படுத்தும் எழுச்சிமிக்க தருணமாகவும் அரங்கேறியது.

பெருமாள் முருகன் தன் வழக்கமான சுயமாகவே எளிமையும், எந்த பூச்சுகளுமற்ற நேரடியான பேச்சுமாக பேரழகுடன் திகழ்ந்தார். தன்னை விழாக்களுக்கும், கூட்டங்களுக்கும் பேச அழைக்கவேண்டாம் என்றும், மெளனமே தனக்கு வலிமையைத் தருவதாகவும், படைப்பெழுத்தின் மூலமே உரையாட விரும்புவதாகவும் அவர் தமிழில் வாசித்த அறிக்கையில் தெரிவித்தார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஆ.இரா.வெங்கடாசலபதி தனது கம்மிய குரலில் உணர்ச்சியுடன் படித்தார்.


பெருமாள் முருகனின் "கோழையின் பாடல்கள்" நூலை இந்தியாவின் மூத்த கவிஞர்களில் ஒருவரும், இந்திய இலக்கிய உலகின் மனசாட்சியாகவும் விளங்கும் அஷோக் வாஜ்பேயி வெளியிட்டு இரண்டு கவிதைகளை பெ,மு. படிக்க அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தார்.

தமிழ் நவீன இலக்கியத்திற்கு கெளரவம் சேர்த்த ஒரு மாலையாக இருந்தது. பெருமாள் முருகனிடம் கையெழுத்து வாங்க நின்ற வரிசையில் சென்று அவரை அணைத்து வாழ்த்தி விடைபெற்றேன். அவர் இந்த உலகம் வியக்குமளவு நிறைய எழுதவேண்டும் மனம் விகசிப்பு கொள்கிறது.

இவ்வாறு ராஜன்குறை எழுதியுள்ளார்.

எழுதியவர் : (26-Oct-16, 3:45 pm)
பார்வை : 92

சிறந்த கட்டுரைகள்

மேலே