கர்ப்பத்தில் கொலுசாய் நீ

​​முதலிரவு முடிந்தாலே கேள்வியெழும்
நற்செய்தி ஏதேனும் உள்ளதாவென ..
கதவுகளும் கதைபேசும் வீடுகள்தோறும்
தாயாகும் பேறுமுண்டா மலடியாவென ...
​கருத்தரித்தால் கொண்டாடும் உள்ளங்கள்
திரித்துக் கூறியவையும் மரித்துப்போகும் !

உருவான கருவாலே மகிழ்ச்சியாகும்
ஊரும் உறவுகளும் உற்சகாமடையும் !
அடித்திடும் கணவனும் அணைத்திடுவார்
கடிந்திடும் மாமியாரும் நடித்திடுவார் ...
இடையிடையே இரக்கமும் காட்டுவார்
நடையுடை பாவனைகள் மாற்றிடுவார் !

வளர்ந்திடும் உருப்பெறும் கருவுமே
தளர்ந்திடும் தாயின் செயல்களுமே !
வந்துபோகும் சுகமான வலிகளுமே
களிப்பூட்டும் அசைகின்ற தளிராலே !
உரையாடுவாள் தாயும் தனியாகவே
உதைத்து விளையாடும் மழலையிடம் !

காலமும் வேளையும் நெருங்கிடும்
கழிக்கின்ற நாளால் சுருங்கிடும் !
பிரசவத்தின் வலியும் கூடிடும்
கொலுசின் ஒலியும் இசைத்திடும் !
உயிரொன்று உலகில் பிறந்திடும்
உறவொன்று உளமகிழ வந்திடும் !

கருவுறும் மகளிர்க்கு மறுபிறப்பு
வெளிவரும் மழலைக்கு புதுவாழ்வு !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-Nov-16, 9:32 pm)
பார்வை : 636

மேலே