இன்றொரு கதாபாத்திரம் - வாடகை வீடு

இன்றொரு கதாபாத்திரம் - வாடகை வீடு
========================================

அவர்கள்
பெரிய செல்வந்தன் மகளும்
குடிகார அரசு ஊழியரும் ஆவார்கள்
அந்த வீட்டில் தான்
அவர்கள் குடிபெயர்ந்தார்கள்
அந்த வீட்டில்
மின் விளக்குகள் இல்லை
அந்த வீட்டில் தான் அவர்கள் பிறந்தார்கள்
அவர்கள் பிறக்கும் முன்னே
அவள் அகல் விளக்கினோடோ
பறக்கும் வழியறியாது
சலபங்கள் முட்டும்போது
சப்தமிட்டு கரையும்
மெழுகு திரிகளோடோ தான்
அவன் வரும்வரை பேசிக்கொண்டிருப்பாள்
அவர்களை உறவினர்கள்
ஒதுக்கி வைக்கிறார்கள்
அவர்களின் குழந்தைகளை
இவர்களுடன் சேர்க்க தவிர்க்கிறார்கள்
அவர்களின் காது படவே
அவர்களின் அப்பா அம்மாவை
குறை சொல்லுகிறார்கள்
அவர்கள் நல்லவர்கள் தான் ஆம்
கெட்டுப்போனவர்களின்மேல்
வாழ்வாதாரம் இன்றி
அரை வயிற்றில் பிழைத்து போகிறவர்களின்மேல்
சிறு கரிசனமில்லாத
உறவினர்கள் நல்லவர்கள் தான்
வாழ்ந்துவிட்டு போகட்டும்
அவர்களின் வாடகை வீட்டின்
முன் கதவில்
தாழ்ப்பாள் இல்லை
அவன் வரும்வரை
கனமான நாற்காலிகளே
அவர்களுக்கு காவலாகியிருந்தன
முறுக்கிப்பிடித்திருக்கும்
அவர்களின் கால்களை
எட்டிடவே மாட்டேன் என்கிற
பிடிவாத போர்வைக்குள்
நால்வரும் கட்டிக்கொண்டு உறங்குவார்கள்
போர்வையில் அவ்வப்போது
குடிகார நெடியும் சேர்ந்து கொள்ளும்
அந்த வீட்டு முற்றத்தில் தான்
ஆயிரம் வருடங்களுக்கு மேலாகியும்
ஏது பூகம்பத்திற்கும்
அறைகூவல் விடுத்தபடி
பூதாங்கரமாய்
அந்த அத்தி விருக்ஷம் வீற்றிருந்தது
அதில் தான்
அவர்கள் ஊஞ்சலாடுவார்கள்
அந்த விருக்ஷம் தொட்டுதான்
அந்த மாடி வீடும் இருந்தது
அந்த மாடி வீட்டைச்சுற்றி
அழகான மரத்தினாலான வேலியும்
அழகான புல்வெளியும்
அந்த புல்வெளியில் நடுநடுவே
நிற நிறங்களாக
விதைக்கப்பட்டிருக்கும்
பட்சிக் கூடுகளும் பட்சிகளும்
அவற்றின் கூச்சல்களும்
ஒரே அளவில் வெட்டப்பட்ட
சாம்பிராணி புதர்களும்
பைனஸ் மரங்களின் கூட்டங்களும்
இதோ கார்த்திகை மார்கழி வெண்பனியினூடே
புலர்ப் புணரும்
துளிப் மலர்க்கூட்டங்களும்
என எல்லாமே
அவர்களை ஈர்க்கும்படி இருந்தன
எப்போதாவது வேலியினூடே
அவர்கள் எட்டிப்பார்க்க சிரமிக்கும்போது
அந்த மாடி வீட்டுக் காரர்களால்
விரட்டப்படுவார்கள்
வாரமொரு வெள்ளிக்கிழமை
ஒளியும் ஒலியும் காண அனுமதிப்பார்கள்
அந்த வீட்டின் மதிற்புறத்தே
வரிசையில் காத்திருக்கவேண்டும்
இது வழக்கம்
பள்ளி சீருடையும் மாற்றாமல்
ஊராரோடு
அவர்களும் காத்திருப்பார்கள்
எல்லா வெள்ளிக்கிழமைகள் போலற்று
அந்த வீட்டில்
அந்த வெள்ளி மட்டும்
பற்பல சமையல் வாசனைகள் நிறைந்தும்
புத்தாடை வாசனைகள் நிறைந்தும்
வீட்டு முற்றத்தில்
விதவிதமான கார்கள் நிறைந்தும்
விஷேடகரமாய் இருந்தது
அவர்கள் குழந்தைகளில்
யாருக்கோ அன்று பிறந்தநாள் ஆம்
விரிந்த தாழ்வாரத்தில்
எல்லோரும்
காட்சிப் பெட்டியில் காணொளியில்
இலயித்திருந்த போது
அவர்களும்
துருதிஷ்டத்தால் அவர்களைப்போல
பூமிக்கு சபித்தனுப்பப்பட்ட
யாரோ சிலருடைய
அகக்கண்களின்
ஒளிவு பார்வைகளும்
சரியாக தாழிடாத கதவிடுக்கின் ஊடாக
முகப்பறை நடுவில்
ராஜ காம்பீரியத்துடன்
உசத்தியான மேசை மேல் வியாபித்திருக்கும்
ரெட் வெல்வெட் கேக்கை
ஒளிப்பதிவு செய்திருந்தன அன்று
எல்லோரும் சொல்லுவதைப்போல
குடிகார கணவனுக்கு
சம்பளம் ஏற ஏற
குடியும் கடனும் சேர்ந்தே மேலேறின
அப்பாவிடமும் அம்மாவிடமும்
ஆசையாக அதைச்சொல்லி
ஆசுவாசப்பட வேண்டுமாய்
நம்ம எப்போமா ,, அதுபோல மாடிவீட்டு
கட்டப்போறோம்
டீவீ எல்லாம் வாங்க போறோம்
அவங்க குழந்தைகளைப்போல
கேக்கு வெட்டி ஹேப்பி பெர்த் டே செய்யப்போறோம்
அப்பா எப்போம்மா வருவாரு
என்னும் குழந்தைகளைப் பார்க்கிறாள்
வாடகை வீட்டில்
ஓடு விரிசல்களின் வழியே
ஏற்றிவைத்த நிர்வாண மெழுகு திரி
பலத்த காற்றில் கற்பிழப்பதைப் பார்க்கிறாள்
விறகடுப்பில்
தீக்கிரையாகிக் கொண்டிருக்கும்
வெறும் சொம்பிற்கு
தண்ணீரூற்றி தீர்க்கிறாள்
அவர்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறாள்
விடாமல் மீண்டும் கேட்கிறவர்களுக்கு
நிலாவொளியைக் காட்டி
மடிமீதுக் கிடத்தி
நெஞ்சையும் வயிற்றையும்
தழுவியே
கதை சொல்லி உறங்கச் செயகிறாள்

"இனியுறங்கு
மனதாரி மலர்ந்திடும் கனவுகளே
தேவதைகள் தாலாட்டிடும்
இரு மலர்களே
கடல் விளிம்பின் மடியில்
ஓடி ஓடி தளர்ந்து கிடக்கின்ற
ஒருகான சாம்ராஜ்ய
அருவிகளே
ஆசைகள் என்கிற பேரிலுள்ள
சுமைகளோடு அலைந்து
கூடு திரும்பிய அன்றில்களே
"இனியுறங்கு"
இருள் முல்லைக் காடுடை மின்மினிகளே
காலத்தின் தாழ்கள்
திறந்திடும் ஒருநாள்
பனிக் கால முல்லைகள் வாடாதிருக்க
நீர்மழை பொழுயு தென்
விழி மலர்கள் இதோ
கலங்கிடவேண்டாம் கண்மணிகளே
"இனியுறங்கு"
இதயத்தில் துடிக்கின்ற
மணி வீணை நாதங்களே
பலகோடி அபிலாசைகளை
முத்தமிட்டு உணர்த்தும்
இளவேனிற் இரவுடை உதிர்ச்சரங்களே
"இனியுறங்கு "

கந்தல் உடுப்புகள்
அவர்களுடைய வறுமையை சொல்லுகிறது
அடுத்தவர்களுக்கு
அது கவர்ச்சியை சொல்லுகிறது
ஏதேதோ பெயர்ச்சொல்லி
அதெல்லாம் நிரம்ப வேண்டும்
என்று கேட்கின்ற
அவர்களுடன்
எல்லாம் வாங்கி வருகிறேன் என்று
பொய் சொல்லிவிட்டு
வீட்டிலிருந்து புறப்படும்
அப்பாவை
அவர்கள் எப்போதும்
அதே மறுநாள் காலையில் மட்டுமே
பார்ப்பார்கள்
வழக்கமான அதே பொய்களுடன்

ஒருபக்கம்
எப்பேர்ப்பட்ட வீட்டிலிருந்து
வந்த பொண்ணு
இப்படி கஷ்டப்படுறாளே
என்ற ஊராரின் பரிதாபங்களே
அந்த வாடகை வீட்டில்
அவளுக்கு ஆறுதாகி போகட்டும்

எப்போதாவது தொடர்கிறேன் - நன்றி

"பூக்காரன் கவிதைகள் "

எழுதியவர் : Anusaran (11-Nov-16, 1:16 pm)
பார்வை : 106

மேலே