உயிர் மாற்றம்

பணம் எடுப்பதற்காக வங்கிகள், ஏடிஎம் மையங்களின் வரிசையில் காத்திருந்தவர்களில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்ட இந்தியர்களுக்கு கண்ணீர் அஞ்சலி - கவிதை

காலையில மீனு வாங்கி
காக்கட்டையில வச்சுக்கிட்டு
கால் நடையா போனேன்

ஐநூறு ரூபா நோட்ட மாத்திவர
அஞ்சாறு நாளா பார்த்தேன்
அக்கம் பக்கத்துல சொன்னாங்க
ஆத்தா..! பேங்க் எல்லாம் கூட்டம்னு
பணமெடுத்து பழமெடுத்து
பதினோரு மணிக்கு
பக்கத்து தெரு சந்தைக்கும் போகணும்

காலையில வந்தே
வரிசையில ஒண்ணானேன்
சின்ன வரிசை பெருசாக பெருசாக
பெருசுக்கெல்லாம் பெரும் துயர்தான்

ஏழை ஏழையாயும்
பணக்காரன் செல்வந்தனாயும் வாழ
கடவுள் எழுதிய விதிகளில்
கள்ளிப்பால் ஊற்றி அழித்தவனே..!

விதி எழுத வாங்கிய
பிரமனின் லஞ்சமும்
ஒழிந்திட போர் செய்தவனே..!
ஒழியட்டும் பணப் போர்
முறியட்டும் ஊழல் மரம்
விலகட்டும் பதுக்கிய மேகங்கள்
அரசனுக்கும் ஆண்டிக்கும்
கையிருப்பு சரியாக
தினமொரு சட்டமிட்டு
திணர்ச்சிகளை திசை தோறும்
சேர்ப்பவனே வாழ்க வென்று
வாழ்த்தி நின்றேன்

பத்து மணிக்கு திறந்ததும்
மக்க சனம் பின்னிருந்து தள்ள
முன்னாடி நின்னோரெல்லாம்
மாறளவு மாறி வரிசைய மாத்த
மாறி மாறி இடம் புடிக்க
தள்ளிய தள்ளுல
தடுமாறி நானும் விழ - என்
தல மேல யாரோ விழ
தாறு மாறா வரிசைய
கலைத்தவர் கால்களே
கட்ட வண்டி போல
எம் மேல ஏறி இறங்க
நடப்பதெது அறியாம
நானும் நசுங்கித்தான்
கிடந்தேனோ..?

என்னைத் தேடினேன்
நான் என் வீட்டில்
படுத்துக் கிடந்தேன்
பக்கத்தூரு மாமன் மச்சான்
அடுத்த ஊரு அத்த பசங்க
தெக்கு வீட்டு , வடக்கு வீட்டு
தோழிமாரு
கிழக்கு வீட்டு சண்டக்காரின்னு
ஊரு சனம் கூடி
ஒப்பாரி வச்சுதுக

நான் எந்த பேங்குல எந்த நோட்டோடு
நிக்குறன்னு தெரியல
நான் நிக்குற இடமெல்லாம்
மேகம்தான் சூழ்ந்திருக்கு
தேடி தேடி பாக்குறேன்
பேங்க் ஒண்ணையும் காணல
எந்த பஸ் புடிச்சு
எப்ப ஊரு போய் சேர..?
எனக்கு ஒண்ணும் புரியல

மக கல்யாணத்துக்கு
கடன் தந்த மகராணி
மல்லு கட்டிட்டு நிப்பாளோ..?

வியாபாரத்துக்கு
வட்டிக்கு தந்த வண்டிக்காரன்
வாயெல்லாம் தானகடு
வச்சுட்டுதான் நிப்பானோ..?
வாரம் இரண்டாச்சு
வாழத் தாரு விக்கவுமில்ல

மக பிரசவத்துக்கு
மாத்த போன பணம்
மாத்தி கிடைச்சோ தெரியல
நல்ல பணம் கொடுத்தாதான்
மூத்த மகளுக்குப் பிரசவம்னு
ஒத்த ஜோசியக்காரன் கூட சொல்லல

500 1000 ரூபா நோட்டால
நாடு மாறும்னு சொன்னாங்க
நட்ட நாடு சாமம் கூட நான் கூட நம்பல

இப்ப எந்த நாட்டுக்கு நான் மாறினேனோ
அம்மா சத்தியமா தெரியல

பணக்காரன வளர்த்தெடுக்க
பிரசவவலி ஏழைக்கா..?
சட்டம் எல்லோருக்கும் ஒண்ணுன்னா
எப்படி எங்கிட்ட மட்டும்
பெரும் பணம் சேரல..?

எழுதியவர் : செ.பா.சிவராசன் (19-Nov-16, 1:38 pm)
Tanglish : uyir maatram
பார்வை : 93

மேலே