இன்றொரு கதாபாத்திரம் - சிறகுகள்

இன்றொரு கதாபாத்திரம் - சிறகுகள்
=================================

அறையில் காலண்டர் கிழிக்கப்பட்டு நாட்கள் ஆயிற்று
அலசி காயலில் இட்ட சட்டைக்கை
கதவடைத்து போகுகையிலும் வருகையிலும்
தட்டித்தட்டி பார்க்கச் சொல்லியும்
காணாமல் போகிறேன்
வண்டிக்காரன் வீட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில்
இறக்கிவிட்டிருந்தான்
இறங்கிய இடத்தில் யாருமில்லை
நடக்கும்போது பாடுவது வழக்கமாக இருந்தது
யாரோ குடித்துவிட்டு நடுரோட்டில் எறிந்துவிட்ட
குளிர்பான தகர உருளை
தன்னை எடுத்து அதன் சவக்கிடங்கு
எச்சில் தொட்டியில் சேர்த்துவிட்டுப்போகலாமே என்றது
சரி வா அதுவரை எனக்குத் துணை வரலாமே
குத்துப்பாடல் முணுமுணுத்தே
காலால் உதைத்தபடி
வடிவம் மாற்றி கொண்டுச் செல்கிறேன்
நோய்வாயில் இருக்கும் தோழியின் உறவுக்காரியை
இரண்டாம் முறை
விசாரிக்க மறந்துவிட்டேன்
தாமதம் ஆக ஆக காலையில் டப்பாவை
அடைத்துவிட்ட சோறின் மீதம்
நினைவில் அன்பு செய்துக்கொண்டிருக்கிறது
முளைக்கட்டிய வெங்காயத்தை
வெட்டி முடித்துவிட்டேன்
நேற்றிரவு அழைத்துவந்த தக்காளி
இன்னமும் வயதிற்கு வரவில்லையே
கதவு தட்டிய
ஏஸீ மெக்கானிக்கின் இருட்டில் கண்ட திருட்டுமுழி
புறத்தே விளக்கிட்டபோது
அழகானதாக மாறியிருந்தன
அலைப்பேசியும் தொகுப்பியும்
அலறலில்லையே என அதுநோக்கியிருந்தன
அகப்படாத இடதுக்கை வலதுக்கை
விரல்களிடையே
ஐந்தாறு மணிநேரம் சண்டையாயிருக்கலாம்
ஒன்றுசேரவில்லை
காய்ந்த வயிறும்
கனத்த இரைப்பையும் கெளரவம் சொல்லிற்று
அடுத்த அறையின்
மீன் வறுவல் வாசத்தில்
தொலைக்காட்சியில் வாரம் மாறி வாரம்
ஒளிப்பதிவுச் செய்யும்
அதே பழைய மலையாள திரைச்சித்திரம்
சலிப்புதான்

""சயனமஞ்சம் விழி அழைக்கிறது
அத்தித் தளிருகள்
அக்னி உதிர்க்கும் சித்ர பௌர்ணமி நாள்
ஜன்னல் திறக்கிறேன்
சந்திரமாத நித்தியவசந்த காற்றிடம்
சவரம் செய்யாத முகம்
சிவந்து நாணும் இந்து கமலம்போல
இந்த தனிமை
காதலியில்லாதவனிடத்தில்
அபரிமிதமாய் ஏதேதோ சொல்லியது
இந்திர பஞ்சமியில்
நிலா தேடிய ஆம்பல்கள் போல
இருள் மங்கிய இதயத்தில்
முதல் முதலாக
ஏதோ ஆலாபனைகள் சிறகு படர்த்தின,, ""

"பூக்காரன் கவிதைகள் "

எழுதியவர் : Anusaran (20-Nov-16, 7:20 am)
பார்வை : 130

மேலே