என் தவிப்பு

முன்னிருந் தோர்தம் எண்ணம றிந்தோ
மண்ணில் பிறந்தேன் பாமர உலகில்
என்னிலும் சிறந்தவர் பலரிங் கிருப்பினும்
எண்ணிலா கடமை கண்முன் கிடப்பினும்
தனக்கென்ன வந்ததென்று எல்லோரும் இருப்பாரோ!!
என்சோறு வெந்ததென்று உண்டுறங்கச் செல்வாரோ!!
தனக்காக வாழாத மாந்தரெலாம் நிலத்தில்விழ
தனத்திற்கே வாழ்வோரை வேந்தரென கொள்வரோ!!
என்றந்த மடமையை யார்வந்து மாற்றுவரோ!!
என்றிந்த நெஞ்சத்தில் நொடுநாளாய் ஒருகவலை!!
விட்டத்தில் தழல்பற்ற தாழ்ந்துவந்து உயிர்பற்ற
திட்டமிட்டு கூற்றுவன் நெருங்கிநின்று கால்பற்ற
சட்டிசோறு செறித்துவிட்ட பெருமிதத்தில் உறங்குவரோ!!
கெட்டபின்பு நிலையை எண்ணியெண்ணி வருந்துவரோ!!
ஊருக்கு அழகுசேர்த்த ஆறுபோன தடமில்லே
பேருக்கு வந்துபோகும் மழைதேங்க இடமில்லே
நேரத்தில் பயிர்செய்த காணிநிலம் அத்தனையும்
பேரத்தில் விலையாச்சு அடுத்தபோகம் வீடாச்சு
ஆறென்று சொன்னேன் அடுத்துசொல்ல மறந்தேனே!!
ஆற்றுமண் தானிங்கே வீட்டுக்கு விலையாச்சு
ஆளாளுக்கு சொன்னோம் ஆற்றுக்கு ஆறுதலை!!
அடுத்தாண்டில் தேடுவோம் சோற்றுக்கு மாறுதலை!!
உழுதவன் கணக்குக்கு உழக்குதான் மீதமாச்சு
அழுதவன் கண்ணுக்கு எல்லாமே கடனாச்சு
வாழுகின்ற வழிதேடி காணாத காரணத்தால்
விழப்போன கிணற்றிலும் நீர்வற்றி மண்ணாச்சு!!
மரபிலோர் கவிபாட வாயெடுத்து துவங்கினேன்
மனத்திலே கவலைகள் கவ்விநின்ற காரணத்தால்
மரபுஇங்கு மண்ணாச்சு!! மனசெல்லாம் கல்லாச்சு!!
மறதிமட்டும் மலைபோல நம்மிடம் நின்னாச்சு!!
தன்பெண்டு தன்பிள்ளை என்போரே உறங்குங்கள்!!
என்போன்ற நெஞ்சினரே என்னோடு திரளுங்கள்!!
பொன்னான நேரத்தை சற்றேனும் ஒதுக்கிவைத்து
முன்வந்து முனைப்போடு களத்திலே இறங்குங்கள்!!
தன்னால் இயன்றதை எல்லோரும் செய்தால்
என்றேனும் ஒருநாள் எல்லாவும் சீராகும்!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (26-Nov-16, 3:45 pm)
பார்வை : 240

மேலே