நட்பாய் நான்

ஷீலா என்ற அழைப்பு கேட்ட உடன், ஷீலாவிற்கு தெரிந்து விட்டது. அழைத்தது சங்கர் தான் என்று. அவளுக்கு கோபமாக வந்தது. நேற்று கூட இப்படித்தான் பேருந்து நிலையத்திலும் பெயரை கத்தி கூப்பிட்டான். என்ன தான் அவன் நினைத்துக் கொண்டு இருக்கிறான். இவன் இப்படி கூப்பிட்டா மத்தவங்க நினைக்கிறது இருக்கட்டும் எனக்கே அவமானமா இருக்கு. பெண் பிள்ளையை பெயரைச் சொல்லி அழைத்து கிண்டல் டிப்பது நன்று இல்லை என்று சங்கர் பெற்றோர் கண்டித்தால் தான் உருப்படுவான் என்று நினைத்து அவன் பெற்றோரிடம் கூற வேண்டும் என்று முடிவு எடுத்தாள். ஆனால் தான் எப்படி முன் பின் தெரியாத நபரின் முகவரியை விசாரித்து சென்று இதை பேசுவது என்று குழம்பினாள், பின் நமக்கென்ன! சங்கர் எப்படியோ போகட்டும் என்று முடிவுடன் கல்லுரிக்கு சென்றாள். ஆனால் முகம் வாட்டம் குறையவில்லை

ஷீலாவின் முகம் வாட்டாமாய் இருப்பதுக் கண்டு அவள் தோழி ராஜீ" ஏண்டி ஒரு மாதிரியா இருக்க? என்று விசாரித்தாள்.
ஒன்றுமில்லை ராஜீ, அதே பழைய கதை தான். வழக்கம் போல இந்த சங்கர் என் பெயரை கத்தி சொல்லி கூப்பிட்டு வெறுப்பு ஏற்றுகிறான் பா. ஒரே அவமானமா இருக்குடி அவனால.

இதை கேட்ட ராஜீக்கும் கோபம் வந்தது. ஷீலா நீ ஏன் சும்மா வந்த? நல்லா நாலு வார்த்தையாவது திட்ட வேண்டியது தானே! அவனுக்கு பணக்கார திமிர்பா. ஆனா ஒண்ணும் படிக்க காணோம். அவனை கண்டிக்க அம்மாவும்,அப்பாவும் உயிரோடு இல்லை,அதான் மாடு மாதிரி சுத்துறான்

"ஏய் ராஜீ. என்ன பேச்சு இது. மாடு அது இதுனு சொல்லிட்டு, சரி அவனை அப்போ யாரு தான் வளர்க்கிறது?
எல்லா பெரியப்பாதான் கேள்விபட்டேன். அவரும் பணம் குடுக்கறதோடு சரி, தம்பி பையன் எப்படி இருந்தாலும் கவலை இல்லை போல, அவருக்கு அவர் வியாபரம்தான் முக்கியம். அவரோ ஊர் ஊராக சுற்றி பணம் சேர்கிறார், இவனோ ஊர் ஊராக சுற்றி பணத்தை அழிக்கிறான் என்று சொல்லி சிரித்தாள் ராஜீ, ஷீலாவும் சிரித்து வைத்தாள்.
மாலையில் கல்லூரி முடிந்து திரும்பும் பொழுதும் சங்கர் கத்தினான். ஏனோ ஷீலாவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. வீட்டிற்கு வந்தாள். பக்கத்து வீட்டு வாசலில் ஒரே கூட்டம். அம்மாவிடம் என்ன விஷயம் என்று விசாரித்தாள் ஷீலா.
"ஷீலா, நம்ம பக்கத்து வீட்டு சின்னா இருக்கான் இல்ல, அவன் குடித்து கொண்டு வந்து ஒரே ரகளை, பாவம் பார்வதி, அப்பா இல்லாத பிள்ளை என்று பார்த்து பார்த்து வளர்த்தும் சின்னாவால் அவமானமே மிஞ்சியது அவளுக்கு. அம்மா உயிரோடு இருந்தும் அவனை திருத்த முடியல. அப்போ அப்பா அம்மா இல்லா. வளர்ர குழந்தைகள் நிலைமை எப்படி இருக்குமோ? என்று வருந்தினாள் ஷீலாவின் தாயார்.

ஷீலாவுக்கு சங்கரின் நிலைமை இப்பொழுது விளங்கியது. அடுத்த நாள் வழக்கம் போல் சங்கர் கிண்டலாக கத்தியவுடன் ஷீலா நின்றாள். சத்தமும் நின்றது. அவளுக்கு தெரியும் சங்கரின் நண்பர்கள் பணத்துக்கு ஆடும் ஜால்ராகள் என்றும், ஆனாலும் சங்கர் நண்பர்களை மதித்தான் என்றும். ஷீலா சங்கரிடம் நேராக சென்றாள் சங்கரை உற்று நோக்கினாள், பின் "சங்கர் நான் உன் தோழியாய் இருந்தாலும் இப்படிதான் கிண்டல் பண்ணுவியா" என்றாள்.
நண்பர்கள் கூட்டம் "ஒ ஒஓ" கத்தியது. சங்கர் மட்டும் ஏனோ அமைதியாய் இருந்து விட்டான்.

மாலையில் ஷீலா வீடு திரும்பும் பொழுது சங்கர் கத்த வில்லை மாறாக திரும்பி வேறு பக்கம் கவனம் செலுத்தினான் இயல்பாக. அவன்
மாற்றம் உணர்ந்தாள். நிம்மதியுடன் தன் பாதை நோக்கி நடந்தாள்.

எழுதியவர் : பிருந்தா 9884445676 (3-Dec-16, 7:38 pm)
பார்வை : 431

மேலே