கவலை கூறாத காதல் தனலட்சுமி

அன்று அவன் அன்புடன் அழைத்தான்
தன் வாழ்க்கை துணைவியை
"வா! அரசுப் பதிவேட்டில்
உன் பெயரை
மாற்றம் செய்து வருவோம்!"

என்றும் காட்டும் புன்னகையுடன்
" என்ன மாற்றம்? ஏன் மாற்றம்?"
எனக் கேட்டாள் புல்லம்மாள்!
"வா தனலட்சுமி நேரமாகிறது;
பிறகு சொல்கிறேன்"
கையை இழுத்தான்:
"தனலட்சுமியா நான்?"
ஆச்சரிய புன்னகையுடன்
அவனுடன் சென்றாள்!

செல்லும் வழியெல்லாம்
அவன் சிந்தனை முகத்தில்
மட்டற்ற மகிழ்ச்சி கண்டாள்!
அந்த மகிழ்ச்சி அவள் முகத்திலும்
உடனடி மலர்ச்சி சேர்த்தது!
அது கண்டு புரிந்து கொண்ட
அவன் முகம்
இன்னும் மலர்ந்தது!
" பெயர் மாற்றத்தில் ஏன்
இந்த மனிதருக்கு
இத்தனை மகிழ்ச்சி?"
என மனதில் நகையாடிக் கொண்டே
அவனை அன்புடன் பார்த்தாள்!
பரிகாசப் பார்வையா? இல்லை அதி பாசப் பார்வையா?
புரியாமல் விழித்தான்.

"உன் பெயரை தனலட்சுமி என
மாற்ற விண்ணப்பிக்கப் போகிறாய்!"

"அதுதான் ஏன் என்றேன்?
நான் செல்வத்தையா வாரி வழங்குகிறேன்
உங்களுக்கு?"

"நீயே எனக்கு பெரும் செல்வம் தானே!" --- தொடர்ந்தான்.......

" பொன்னகையை உன் கழுத்தில் அணிவிக்கா ஏழை நான்! --- ஆனால்
புன்னகையே உன் முகமாய் எனக்களித்தான் இறைவன்தான்!
அன்புப் புன்னகைக்கும் விலை மதிப்புண்டோ?
ஆகாய விமானத்தில் உன்னை அழைத்து செல்லும் வசதியில்லேன்! --- ஆனால்
காதலெனும் ஆகாயத்தில் என்னை நீ அழைத்து சென்றாய்!
உண்மைக்காதலுக்குத் தான் விலை மதிப்புண்டோ?
சின்னஞ் சிறிய உடல் உபாதை எனக்கென்றால்
அது தீரும் வரை ----
உணவு துறப்பாய்! உறக்கம் துறப்பாய்! உன் சுகமெல்லாம் துறப்பாய்!
உன் தாய்மைத் தியாகம்தான் விலைமதிப்பிடக் கூடியதோ?
ஊதியத்தை அதிகரிக்க படிப்பில்லையே என நொந்தேன்!
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தென்றாய்!
பொன்னே வடிவான புல்லம்மா! என் பொன்னம்மா!
நீ தனலட்சுமிதானே! நீதானே தனலட்சுமி!
இன்னும் சொல்வேன் உதாரணங்கள் ......."

கோபத்துடன் இடைமறித்தாள்! " ஐயோ! போதும் சொன்னது!
பசிக்கும் நேரம் உங்களுக்கு!
வேகமாக வாருங்கள்! வேலை முடித்து வீடு செல்வோம்!
நேற்றிரவு நீர் தூங்கவில்லை!
உண்டு முடித்து தூங்குங்கள்!"
கையை இழுத்து விரைந்து நடந்தாள்.
" செல்லமாய்த் தானே கோபிக்கிறாய் என் செல்லம்மா!"
அன்போடு அழைத்து சென்றான்!
அவன் தோளில் சாய்ந்து நடந்து சென்றாள்!
அவனது தனலட்சுமியாய் திரும்பி வருவாள்!

எழுதியவர் : ம கைலாஸ் (8-Dec-16, 3:41 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 94

மேலே