என் தாய்

ஐயிரு திங்கள்
அங்கம் சுமந்து
ஐயமர நாளும் காத்தாய்!

கருவாய் என்னை
உணர்ந்ததுமே
உருவம் மனதிற்குள் தந்தாய்!

வெளிவரா என்னோடு
வெளிப்படுத்தினாய்
உன் உணர்வுகளை!

அசைவுகளை கண்டே
ஆனந்தம் கொண்டாய்
அழகாய் உன் நெஞ்சில்!

நாட்கள் செல்லச் செல்ல
நான் வெளிவரும்
நாட்களை எண்ணினாய்!

மாதமோ நெருங்கி வர
மனமெங்கும்
மாற்றெங்கள் பல கண்டாய்!

உள்ளுக்குள்ளே
நான் உதைக்க
உனக்கோ ஆனந்த கொண்டாட்டம்!

உருண்டு படுக்க
உடல் விழைந்தாலும்
உறக்கமில்லா திண்டாட்டம்!

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாற்றம் கண்டு
மனமெங்கும் பூரித்தாய்!

நெருங்கி வரும்
நாளை எண்ணி
மனதிற்குள் பயமும் கொண்டாய்!

வலியை மெதுவாய்
உணர்கையில்
மகிழ்ச்சியே அடைந்தாய்!

தசைகள் கிழிய
எலும்புகள் உடைய
எனக்காய் தாங்கிக் கொண்டாய்!

உதிரம் சொட்ட
உனக்கும் வலிக்க
என்னை ஈன்றாய் என்தாயே!

பட்ட துன்பம்
அத்தனையும்
பாலகன் என் முகம் காணவோ?

தொட்டு என்னை
தூக்கிடவே - பட்ட
தொல்லையெல்லாம் மறந்தாயே!

உந்தன் உதிரத்தைப்
பாலாய் எனக்களித்து
இரத்த ஓட்டம் கொடுத்தாயே!

என்னுள் துடிக்கும்
இதயத்தை விட
அதிகமாய் எனக்காய் துடித்தாயே!

தந்தை கையில்
என்னைத் தந்து
தவழக் கண்டு அகங்குளிர்ந்தாய்!

தரணியில் உன் போல்
என்னைக் காக்கும் தெய்வம்
இன்னும் தோன்றவில்லையே என் தாயே!..



த.மணிகண்டன்........

எழுதியவர் : தங்கமணிகண்டன் (13-Dec-16, 1:01 pm)
Tanglish : en thaay
பார்வை : 466

மேலே