பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி ----- இறந்த பின்னும் வாழ்வோம்

கதை தலைப்பு ---இறந்த பின்னும் வாழ்வோம்!

மாரிமுத்து பளையமேட்டுக்குடிபட்டியை நோக்கி நடந்து கொண்டிருந்தான். தூரத்தில் ரயில் தண்டவாளம் தெரிந்தது. அதைத் தாண்டி இன்னும் தூரம் போக வேண்டும். அவன் மனதை சிந்தனைகள் ஆதிக்கம் செய்துகொண்டிருந்தன. அவன் சிறையிலிருந்து விடுதலை ஆகி இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. ஆண்டுகள் கடந்தும் நடந்த சம்பவத்தின் வலி இன்னும் குறையவில்லை. தான் அப்படி செய்திருக்க வேண்டாம்.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் குடியிலே பணத்தை வீண் செய்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தும் பழக்கம் இருந்தது. ஒரு நாள் ஏதோ தவிர்க்க முடியாத செலவுக்காக மனைவி கேட்கப் போக இவன் கொடுக்க மறுக்கவும் அவள் கோபமாக வாக்குவாதத்தில் இறங்க அவளை வெறித்தனமாக அடித்துக் கொலை செய்து விடுகிறான். ஆத்திரம் அடங்கவும் அறிவு வேலை செய்ய தான் செய்த தவறு மனத்தில் உறைக்க காவல் நிலையத்தில் சரணடைந்து விடுகிறான். நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பளித்து அவனுக்கு பதினெட்டு ஆண்டுகள் சிறைவாசம் விதிக்கிறது. சிறை வாழ்க்கை முழுவதும் தான் செய்த அநியாயத்தை எண்ணி எண்ணி மனம் உடைந்தான். "அவள் மீது என்ன தவறு இருந்தது? நியாயமான செலவுகளுக்குத் தானே பணம் கேட்டாள்! தன் உடல் நலக் கேடுகளைக் கூட பொருட்படுத்தாமல் எனக்காகத்தானே வாழ்ந்தாள்!" இப்படியாக அவன் மனது அவனைக் கேள்விக் கணைகளால் குத்திக் கொண்டே இருந்தது. நாற்பதாவது வயதில் சிறைக்கு சென்றவன். இப்போது வயது ஐம்பத்தெட்டு முடிந்து விட்டது.
தலையைக் குனிந்து சிந்தித்தபடியே நடந்துகொண்டிருந்தவன் திடீரென நிமிர்ந்து பார்த்தான். தண்டவாளம் நெருங்கி விட்டது. ரயில் வலதுபக்கத்திலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது அவன் கண்ட காட்சி அவனைத்திடுக்கிடச் செய்தது. ஒரு இருபத்தைந்து வயது இளைஞன் ரயிலின் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்ய முயன்று கொண்டிருந்தான். ஒரு நொடியும் தாமதிக்கவில்லை.பாய்ந்து சென்று இழுத்து இந்தப் பக்கம் தள்ளி விட்டான். ரயில் விரைந்து இடது பக்கம் சென்று மறைந்தது.
"என்னை ஏன் காப்பாற்றினீங்க?" கோபம் குரலில் தெறிக்க அழுதான்.
" சாக என்ன அவசியம் உனக்கு?"
"என் மனைவி செத்தப்புறம் நான் எதுக்காக உயிரோட இருக்கணும்?"
" சாகறது அதர்மம்."
" கொல்லறது மட்டும் ரொம்ப தர்மமோ?"
"டேய்! என்னடா சொன்னே?" மாரிமுத்து அவனை அடிக்க வெறித்தனமாக கையை ஓங்கினான். "ஐயா! ஐயா! ஏன் என்னை அடிக்கிறீங்க?" அவர் கைகளைத் தடுத்தான்.
"நான் கொன்னதை ரொம்ப பார்த்தியோ?" மீண்டும் கையை ஓங்கினார்.
"நீங்களும் கொலை பண்ணினீங்களா?" அதிர்ந்தான்.
அதிர்ச்சியில் கையை இறக்கியபடியே மாரிமுத்து கேட்டார்." அப்ப நீயும் கொலை செஞ்சியா?"
" பாவி ஐயா நான்! பாவி!" ஓவென்று மறுபடியும் அழ ஆரம்பித்தான்.
" அழாம சொல்லு. உன் பேரென்ன?"
"முனியப்பன்! குறைந்த சம்பளத்தில் ஒரு பஞ்சு மில்லில் வேலை பார்த்துண்டிருந்தேன். ஆனா குடிக்கு ஒண்ணும் குறைச்சலில்லே. தினம் பொண்டாட்டிய அடிச்சு துன்புறுத்தினேன். திடீர்னு வியாபாரம் மந்தமாயி மில்லை மூடிட்டாங்க. வேலை போச்சு. குடிப்பழக்கம் போகலை. இது வரை காசு கொடுக்காம அடிச்சவன் சேமிப்பை பிடுங்கிண்டு அடிச்சேன். தற்கொலை பண்ணிண்டுட்டா! தற்கொலை பண்ணிக்கற அளவு நான் சித்திரவதை செய்தது ஒரு கொலைதானே! அதனாலதான் கேட்டேன் கொல்லறது ரொம்ப தர்மமோன்னு!"
":அடடா! அப்படியா! தெரியாம கையை ஓங்கிட்டேன்! மன்னிச்சுக்கோ முனியப்பா! அதுக்காக சாகறதுமே அதர்மம்ப்பா! கடவுள் கொடுத்த உயிரை அது நம்ம உயிரா இருந்தாலும் மாய்க்க நமக்கு உரிமையில்லைப்பா!"
"அய்யா! நான் செஞ்ச பாவத்துக்கு ஏது பிராயச்சித்தம்? நான் எதுக்காக இருக்கணும்? தற்கொலைக்கு நான்தானே காரணம் என்ற குற்ற உணர்வு என்னை வருத்தியது. காவல் நிலையம் சென்று அவள் தற்கொலைக்கு காரணமாக நான் இருந்ததால் என் மீது வழக்கு பதிய சொன்னேன். காவல் துறையும் நீதி மன்றமும் விசாரணைகள் நடத்தி விட்டு சிறை தண்டனை தீர்ப்பளித்தார்கள். சிறைவாசத்தின்போது மனச்சாட்சி வருத்திக் கொண்டே இருந்தது. "சிறை தண்டனை அனுபவித்ததால் திருப்தியாகிவிடுவாயா? இறந்த உன் மனைவிக்கு வாழ்வு திரும்பி விடுமோ?" என்று என்னைத் தாக்கியது. ஒரு வாரம் முன்புதான் விடுதலை ஆனேன். இப்போது மனச்சாட்சி சித்திரகுப்தனாக மாறி வாழும்போதே கேள்விக் கணையால் என்னைத் தாக்குகிறது. என்ன கேட்கிறது தெரியுமா? " சட்டம் தந்த சிறைத் தண்டனையாலோ சாத்திரப் படி நீ செய்யக் கூடிய பரிகாரத்தினாலோ நான் திருப்தி அடைய மாட்டேன்.வேறென்ன செய்யப் போகிறாய்?" என்று. வேறென்ன செய்ய முடியும் அய்யா? எனக்குப் பிராயச் சித்தம் இல்லை.அதனாலேதான் தற்கொலைக்கு பாய்ஞ்சேன்." என்று கூறி கதறி அழுதான். "
“பிராயச்சித்தம் உண்டு!”
"ஒங்க கதையை நான் தெரிஞ்சுக்கலாமா?"
"என்னப்பா இப்படி கேட்டுட்டே?" என்று தன் கதை முழுவதும் சொல்லி முடித்தார். பின் சொன்னார் "சிறை தண்டனை அனுபவிச்சதாலே என் பாவம் தீர்ந்ததா என் மனசாட்சியுமே ஒத்துக்கல. இருந்தாலும் நம்ம ரெண்டு பேர் பாவத்துக்குமே பிராயச்சித்தம் உண்டு!"
" என்ன பிராயச்சித்தம்?"
" நானும் திருமணத்துக்கு வழியில்லாத பொண்ணை கல்யாணம் செஞ்சுண்டு வாழ்வு கொடுக்கணும்! நீயும் அப்படியே செய்யணும்! அதுதான் பிராயச் சித்தம்! பின்ன என்ன தற்கொலையா? நம்ம ரெண்டு பேருமே தண்டனையிலிருந்து தப்ப நினைக்கவில்லை.குற்றத்துக்கான பழியை இன்னொருவர் மீது அபாண்டமாக போட நினைக்கவில்லை. சாத்திரப் பரிகாரத்தை தேடவில்லை.மனச்சாட்சிக்குத்தான் கட்டுப் பட நினைக்கிறோம்.அந்த மனச்சாட்சியைத் தானே இந்தக் காலத்தில் நிறையப் பேர் கொன்று விடுகிறார்கள்! .
முனியப்பா! நாம் இருவரும் உயிர் இருக்கும் வரை வாழ்வோம்! இறந்தும் வாழ்வோம்! வாழவும் வைப்போம்! "
முனியப்பன் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது! " சரிங்க அய்யா!"
"நான் ஒரு தொழில் ஆரம்பிக்கணும் எதிர்காலத்துக்காக! அதற்கு தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்கத்தான் பளையமேட்டுக்குடிபட்டிக்கு நான் இப்ப போயிண்டிருந்தேன்! உன்னை தண்டவாளத்திலே பார்த்தேன். இப்ப இருட்டிடுத்து .நாளை போறேன்! நீ எந்த ஊரு?"
"என் ஊரு புதுமேட்டுக்குடிபட்டி; நான் உங்களோடதொழிலில சேர்ந்துக்கறேன். என் முதலைப் போட கொஞ்ச நாள் அவகாசம் கொடுப்பீங்களா?"
"கட்டாயமா! நான் தொழிலை ஆரம்பிச்சுடறேன்! கொஞ்சம் மெதுவாவே கொடு! நம்ம ஊருதான் நீ! வா திரும்புவோம்!"
கையெடுத்து கும்பிட்டான். இருவரும் ஊருக்கு திரும்பினர்.
மறுநாள் முனியப்பன் மாரிமுத்துவைப் பார்க்கப் போனான். அன்போடு வரவேற்றார். முனியப்பன் கேட்கிறான்."ஐயா!அடுத்த கிராமத்தில் தொழிலுக்கு தெரிந்தவர் ஒருவர் கடன் தருகிறார்ன்னு சொன்னீங்க! சிறையிலேர்ந்து வெளில வந்திருக்கீங்க. சொந்தமும் கிடையாது. எப்படி நம்பி கொடுக்கிறாங்க."
" நான் திருமணத்துக்கு வழியில்லாத ஒரு பெண்ணை மணந்து வாழ்வு கொடுக்கப்போறேன்னு சொன்னேனில்லையா? அது யார்ன்னு தீர்மானம் பண்ணிட்டேன்.அந்த கிராமத்திலேயே ஐம்பது மூன்று வயதான விதவை இருக்கிறார். குழந்தைகள் கிடையாது. அதனால் வயதானதும் தனக்கு ஆதரவு வேண்டும் என்று நினைக்கிறார். நான் எனது யோசனையை சொன்னேன். அவருக்கு சந்தோஷம். நான் அவரை கல்யாணம் செஞ்சுண்டா தொழில் செய்ய பணம் கொடுக்கிறேன்னு சொன்னார். அந்த பணத்தை வைத்து கடனை அடைப்பேன்னு நான் குடுத்த உறுதியை நம்பி என் நண்பர் கடன் கொடுக்கறார்.”
"அது ஒரு பக்கம் இருக்கட்டும்; நானே உங்களுக்கு முன்பின் தெரியாதவன்தானே! என்னை தாமதமாக முதல் போட அனுமதிக்கிறீங்க!"
மாரிமுத்து புன்னகை புரிந்தார். " என்னைப் போலவே உன்னிடமும் மனச்சாட்சி இருக்கிறது. செய்த பாவத்துக்கு தண்டனையை வலிய ஏத்துக்க தயாரா இருக்கே; ஒன் நேர்மையை நம்பறேன்."
" ஒங்க நம்பிக்கையை காப்பாத்துவேன்."
அன்று காலையிலிருந்து மாலை வரை மழை பெய்ததால் மழை முடிந்து அவர்கள் பழையமேட்டுக்குடிபட்டி கிளம்பியபோது இரவு நெருங்கி விட்டது. "இன்று எப்படியும் போய் விட வேண்டியதுதான்" என்றார் மாரிமுத்து.

இருவரும் தண்டவாளத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது "முனியப்பா! அங்கே பாரேன்!" திடீரென கத்தினார் மாரிமுத்து. தண்டவாளத்துக்கு அந்தப் பக்கத்திலிருந்து ஒரு இளம்பெண் தற்கொலைக்காகப் பாய்ந்தாள் . ரயில் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. முனியப்பன் பாய்ந்து சென்று தண்டவாளத்திலிருந்து அவளை முரட்டுத்தனமாக இழுத்து இந்தப் பக்கம் தள்ளி விட்டான்.
"என்னை ஏன் காப்பாத்தணும்?" அழுது கொண்டே தொடர்ந்தாள். " மறுபடி சமூக விரோதிங்க கையில சிக்கி சிவப்பு விளக்கு பகுதிக்கு போகவா?"
அதிர்ந்தான் முனியப்பன். " ஏன்?"
" ஆமாங்க! அஞ்சு வருஷங்களுக்கு முன்னால இருட்டிலே நடந்து வந்துட்டிருந்தபோது என்னைக் கடத்திண்டு போய் சிவப்பு விளக்கு பகுதியில சேர்த்துட்டாங்க. அப்புறம் பெண்கள் பாதுகாப்பு சேவை மையம் ஒன்று என்னை மீட்டு பளையமேட்டுக்குடிபட்டியிலே வசிக்கும் என் பெற்றோர்கிட்ட கொண்டு விட்டது. ஆனால் அடுத்த நாளே " நீ எங்க மகள் இல்ல; வேண்டாம்!" ன்னு துரத்தி விட்டாங்க.இது தெரிந்து சமூக விரோதிங்க என்ன தொடர்ந்துட்டே இருக்காங்க. இப்ப நீங்களா காப்பாத்தப் போறீங்க" கத்தினாள்.
நான்கு ரவுடிகள் அவனை சூழ்ந்தனர். "நீ யாருடா அவளைக் காப்பாத்த; விடுடா. இல்ல வெட்டிப் போடுவேன் உன்னை"
" சாவுக்கும் சிறைவாசத்துக்கும் பயந்து நான் பூமியிலே பிறக்கலே. என்னைக் கொன்னுட்டு அவளை இழுத்துட்டு போங்கடா."
ஆக்ரோஷமாக ஒவ்வொருவருடனும் கட்டிப் புரண்டுகொண்டு சண்டை போட்டான். சமாளிக்க முடியாமல் திசைக்கொருபக்கமாக ஓடி மறைந்தனர் .
அவனிடம் ஒளிந்திருந்த தைரியத்தைக் கண்டு வியந்து நின்றார் மாரிமுத்து. அவரைத் தனியே கூப்பிட்டு முனியப்பன் சொன்னான்." ஐயா. நாம் போற ஊருல இவ பெற்றோர் இருக்காங்க. கூட்டிண்டு போய் அவங்களை ஏத்துக்க சொல்லி பார்ப்போம். மாட்டேன்னாங்கன்னா ....... "
"மாட்டேன்னாங்கன்னா.......?" கேட்டார் மாரிமுத்து.
" நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் இவளை. மறுபடியும் இவள் சீரழிய வேண்டாம்! என் பாவமும் தீரும்!"
" நீ யாரோ இல்லைடா! என் மகன்டா!" ஆனந்தக் கண்ணீர் விட்டார் மாரிமுத்து.
" உன் பேரென்னம்மா?" மாரிமுத்து.
" கனியம்மா." என்றாள்.
மூவரும் பளையமேட்டுகுடிபட்டி அடைந்து கனியம்மா பெற்றோரை சந்தித்தனர். பெற்றோரிடம் முனியப்பன் முயற்சிகள் வீணாயிற்று. மூவரும் அந்த விதவையின் வீட்டை அடைந்தனர். மாரிமுத்து விதவையை அறிமுகப் படுத்தினார். " இவங்க பேரு ஆழியம்மை."
ஆழியம்மையிடம் அவர்களை அறிமுகப் படுத்தி விட்டு முனியப்பனின் கதை, திட்டம் எல்லாவற்றையும் கூறினார். " முனியப்பன் தம்பி! உங்களுக்கு நல்ல மனது! செய்யுங்க! அவர் முதலில் உடனே போய் கடன் வாங்கி வரட்டும்! இரவு சாப்பிட்டுட்டு இங்கேயே எல்லோரும் தங்குங்க. இருட்டில் திரும்ப ஊருக்கு போக வேண்டாம். நம்ம ரெண்டு ஜோடிகளும் நாளைக்கே பதிவுத்திருமணம் செஞ்சுக்கலாம். என் சொத்து ஒன்றை வித்து தொழில் செய்ய இவருக்கு பணம் கொடுக்கிறேன். அதுக்கு கொஞ்ச நாளாகும். வித்ததும் இவர் கடனை அடைக்கட்டும். "
" என் முதல்?"
"நீங்க ஒண்ணும் முதல் போட வேண்டாம்! இவரை நான் கல்யாணம் செஞ்சதும் நீங்க... இல்ல நீ என் மகன் ஆயிடறே முனியப்பா! தொழிலை பொறுப்பா கவனிச்சுண்டாலே போதும்."
வியப்பு பொங்க ஆழியம்மையைப் பார்த்துவிட்டு மாரிமுத்துவைப் பார்த்தான். மாரிமுத்து புன்னகை பூத்தார். " நான் பணம் வாங்கிண்டு வந்துடறேன்!" கிளம்பினார்.
முனியப்பனைப் பார்த்து கனியம்மா கூறலானாள். "ஒரு வேண்டுகோள்: நீங்களும் மாமாவும் சேர்ந்து செய்யும் இந்த தொழிலில் லாபம் வரப்போ எல்லாம் அதுல ஒரு பகுதியை ஒதுக்கி சேர்த்து வைத்து ஊருக்கு ஊர் 'மதுப் பழக்கத்திலிருந்து மீட்கும் மையங்கள்' ஆரம்பிக்கணும்.அந்த மையங்கள் எண்ணிக்கையிலயும், அளவுலயும் பெருகிண்டே போணும். அதுக்கு வேண்டிய திட்ட உதவியெல்லாம் நானும் அத்தையும் செய்யறோம்." முனியப்பன் ஆமோதிக்கும் விதமாக புன்னகையடன் தலையசைத்தான். "ஏன்னா,..." என்று தொடர்ந்த கனியம்மா, ஆழியம்மை தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றவே சட்டென்று திரும்பிப் பார்த்தாள். ஆழியம்மை குறும்புப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். "ஆலோசனை சொல்ல இப்பவே ஆரம்பிச்சாச்சாக்கும்" என்று சொல்ல, கனியம்மா நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள். "புத்திசாலிப் பொண்ணு முனியப்பா!" என்றாள் ஆழியம்மை.
மறுநாள் இரு ஜோடிகளுக்கும் பதிவுத்திருமணம் நன்கு நடந்தது. மாரிமுத்து திருமண சாட்சிகளே முனியப்பன் திருமணத்துக்கும் கையெழுத்திட்டனர்.
அரசு மருத்துவ மனையிலிருந்து ஓய்வு பெற்ற 75 வயது மருத்துவ அதிகாரி ஒருவர் வீட்டுக்கு வந்து இரண்டு ஜோடிகளையும் ஆசிர்வதித்தார். பின் கூறினார்."உங்கள் வாழ்க்கைக்குப் பின்னும் நீங்கள் உலகுக்கு உதவ ஒரு திட்டம் இருக்கிறது தெரியுமா?"
நால்வரும் கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தனர்.
" நீங்கள் வித்தியாசமான ஜோடிகள். இன்னொரு வித்தியாசமும் செஞ்சு மற்றவங்களுக்கு முன்னுதாரணமாக இருங்க. அதாவது நீங்கள் நால்வரும் அரசு மருத்துவமனைக்கு போய் ஒவ்வொருவரும் இறப்புக்குப் பின் முழு உடல் தானம், அதாவது எல்லா உறுப்புகளையும் தானம் செய்ய பதிவு செஞ்சுட்டு வாங்க. இறந்தப்புறமும் மத்தவங்க உடம்பிலே வாழ்வீங்க!" என்றார்.
அந்த யோசனையைக் கேட்டு நால்வர் முகமும் மலர்ந்தது!
"இறந்த பின்னும் வாழ்வோம்!" என்று நால்வரும் கைகளை உயர்த்தி முழக்கமிட்டனர். மருத்துவ அதிகாரி மறுபடியும் அவர்களை வாழ்த்தி விடைபெற்றார்.
---- ------ -------
திலீபன் அவர்களே! நீங்கள் இந்தப் போட்டிக்காக கேட்ட மொபைல் எண்ணும் மின்னஞ்சல் முகவரியும்
உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.

எழுதியவர் : ம கைலாஸ் (15-Dec-16, 6:27 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 189

மேலே