தெனாலி இராமன் கதை

தெனாலி இராமன் கதைகளில் ஒன்று. இது நீங்கள் கேட்ட கதையாக இல்லை படித்த கதையாகவும் இருக்கலாம்.

தெனாலிராமன் விடுமுறை எடுத்து ஒருநாள் வெளியூர் சென்றிருந்த நேரம். மற்ற அமைச்சர்கள் கிருஷ்ணதேவராயரிடம் நல்ல பெயர் எடுத்துவிட வேண்டும் என்ற நினைப்பில்ஜோசியர் ஒருவரைக் கூட்டி வந்தனர். அவரும் கிருஷ்ணதேவராயரின் புகழ் பாடி விட்டு “மன்னா உனக்கு எல்லா செல்வங்களும் வெற்றிகளும் கிட்டும். ஆனால் அதற்கு நீ நாளை மட்டும் ஒன்று செய்தாக வேண்டும்” என்று சொல்லி “ நாளை காலை கண்விழிப்பது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரையில் நீ பார்ப்பவைகள் எல்லாமே உனக்கு பச்சையாகத் தெரிய வேண்டும். நாளை ஒருநாள் மட்டும் இப்படி கடத்திவிட்டால் இனி வரும் நாள் எல்லாம் உனக்கு பொன்னாளாகவே அமையும்” என்ற படி போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

கிருஷ்ணதேவராயரோ அமைச்சரவையைக் கூட்டி “ அந்த ஜோசியர் சொன்னது போல நாளை காலையில் நான் விழிப்பதற்குள் அத்தனையும் பச்சையாக மாறியிருக்க வேண்டும். இல்லையேல் உங்களைத் தொலைத்துவிடுவேன்” என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான். அமைச்சர்களுக்கோ என்ன செய்வதன்றே தெரியவில்லை. அப்போதே மாலைநேரம் முடிந்து இரவு ஆரம்பித்துவிட்டது. காலைக்குள் அத்தனை இடங்களையும் எப்படி பச்சையாக மாற்றுவது என்று குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். இப்போது இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தில் செய்வதுபோல சாலைகளையும் அரண்மனையையும் பச்சை பெயிண்ட் அடித்து மாற்றிவிடலாம் என்ற யோசனை ஒருவருக்கு தோன்றியதால் உடனடியாக அதனை செயல்படுத்தலாம் என்ற ஆர்வத்தில் அதனை செயல்படுத்த ஆரமபித்தனர். அரண்மiனையை மாற்ற முடிவுசெய்து வண்ணத்தால் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு தாண்டியும் அவர்களால் அரண்மனையைக் கூட மாற்ற முடியவில்லை. என்னசெய்வது மறுநாள் காலை மன்னருடைய கோபத்தை எப்படிச் சமாளிப்பது என்ற கலக்கத்தோடு இருந்தனர். அப்போது ஊருக்கு சென்றிருந்த தெனாலிராமன் திரும்பிக்கொண்டிருந்தார். அமைச்சர்கள் அனைவரும் ஒடி வந்து தெனாலிராமனிடம் நடந்ததைக் கூறி “ நீதான் எங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினர். தெனாலிராமனோ சிரித்துக் கொண்டே “ இவ்வளவுதானே . நாளை மன்னர் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாகத் தெரியும். கவலை மறந்து நிம்மதியாகத் தூங்கிவிட்டு காலையில் வாருங்கள் மன்னனை எழுப்புவோம்” என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்தான்.

குழப்பத்தோடு சென்ற அமைச்சர்கள் அனைவரும் மறுநாள் மன்னன் விழிப்பதற்கு அரைமணிநேரம் முன்னதாகவே அவருடைய அறைவாயிலில் பதட்டத்தோடு காத்திருந்தனர். தெனாலிராமனின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். தெனாலிராமனும் எப்போதும் போல் சிரித்துக்கொண்டே வந்து சேர்ந்தான்.

“மன்னனை எழுப்பலாமா?” என்று அனைவரிடமும் கேட்டுவிட்டு மன்னனின் அறைக்குள் சென்றான்.பயத்தோடு அமைச்சர்கள் அவன் பின்னாலே சென்றனர். தெனாலி மன்னனை எழுப்பினார். மன்னரோ “ தெனாலி நான் கண் திறக்கப்போகிறேன். நேற்று நீ இல்லை. சக அமைச்சர்கள் ஜோசியர் சொன்னதைச் சொன்னார்களா?. நான் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாகத் தெரியுமா?” என்றுகேட்டார்

தெனாலியோ “ ஆம். மன்னா எல்லாம் கேள்விப்பட்டேன். நீங்கள் தயக்கமின்றி கண்களைத் திறங்கள். எல்லாமே பச்சையாகவே தெரியும். அதற்கு முன்னதாக ஒரு சின்ன வேண்டுகோள். இந்த கண்ணாடியை அணிந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி பச்சை நிறக்கண்ணாடி அணிவித்தது போல முடியும் கதை.

தெனாலிராமன் காலத்தில் கண்ணாடி, பெயிண்ட் எல்லாம் உண்டா? என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. விழிக்கும் திசையெல்லாம் பச்சையாகத் தெரிய வேண்டும் என்றால் எல்லாவற்றையும் பச்சையாக மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. பச்சைக் கண்ணாடி அணிந்து கொண்டாலே போதுமானது என்ற கருத்துதான் இந்த கதை சொல்கிறது. காலையில் எழுந்து யார் முகத்தில் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்து நாள் நல்ல நாளாக அமைவதில்லை. எழும்போது நமது மனதில் ஏற்படும் உணர்வுகளும் எண்ணங்களுமே அந்த நாளை மதிப்பு மிக்க நாளாக மாற்றுகிறது. உங்களுக்கான விடியல் உங்கள் மனதினைப் பொறுத்தும் உங்கள் அணுகுமுறையினைப் பொறுத்துமே அமைகிறது என்பதே உலக உண்மையாகும்.

தேவையற்ற சில எதிர்மறையான நம்பிக்கைகைள் நம்மைச் சிதைத்துவிடும் என்பதற்காகவே நமது கனவுகளில் கூட எதிர்மறையானவைகள் வந்தால் நேர்மறையாக நடக்கும் என்ற நம்பிக்கையை நமக்கு முன்னோர்கள் அளித்துவந்துள்ளனர். நமது கண்களைத் திறந்து கொள்ளும்போதே இந்த உலகம் விடிந்து விடுகிறது என்ற நம்பிக்கை நமது ஒவ்வொரு விடியலின்போதும் இருக்க வேண்டும்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (16-Dec-16, 11:04 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 431

மேலே