ஒரு பக்கக் காதல் கதை பாகம் -16

அடுத்த நாள் காலை அவளுக்காக ரெகார்டிங் தியேட்டரில் காத்திருந்தான், அவனை போனில் அழைத்து காப்பி ஷாப்பிற்கு வரச்சொன்னாள் அவள்


அவன்: என்ன இன்னைக்கு வேலைக்கு போலையா ?

அவள்: இன்னியோட நீ கேட்ட 7 நாள் முடியுது இல்ல?

அவன்: அமாம், 7 நாட்கள்ல உன்னைப்பத்தி தெரிஞ்சுக்கலாம்னு பாத்தேன், தெரிஞ்சுக்கிட்டது எவ்வளவுனு தெரியல

அவள்: நீ என்ன பத்தி தெரிஞ்சுக்க கேட்ட அவகாசம் போல தெரியல, நான் தான் உண்ணப்பத்தி நெறய தெரிஞ்சுகிட்டேன், இந்த ஏழு நாள்ல என்ன மயக்க உன்னால என்ன செய்யமுடியுமோ அதெல்லாம் செஞ்சு பாத்த, ஹீரோயிசம், அன்பு, பரிவு..இதெல்லாம் உன்கிட்ட கொட்டிக்கிடக்குற மாதிரி உன்ன காமிச்சுக்கிட்ட

அவன்: இன்னைக்கு எனக்கு கோவம் வருதா இல்லையான்னு டெஸ்ட் பண்றியா?...எனக்கு கோவம் நல்லா வருது பாரு கோல்ட் காபி என் கைபட்டு ஹாட் காபி ஆயிடுச்சு


அவள்: பசங்க பொண்ணுங்க முன்னாடி செய்றதெல்லாமே ஏதோ ஒருவகைல அந்த பொண்ண அடைய தூவப்படும் விதைகள்...இந்த இடத்துல அடைவது..மனசா இருக்கலாம், உடலா இருக்கலாம்..

அவன்: இயற்கையே தப்புனு சொன்னா, பூமி திரும்பி சுத்தப்போறதில்ல

அவள்: எதையுமே தப்புனு சொல்லல, நீ செய்ததெல்லாத்துலையும் சல்லடை போட்டா சுயநலம் கொஞ்சம் மீறுது, பலபேருக்கு சலிக்கவே வேண்டாம்

அவன்: சுயம்னு ஒண்ணு இருந்தா அதுக்கு நலமும் தேவைதானே, சுயநலம் இல்லைனு சொல்றவங்க எல்லாருமே சுயமும் இல்லாம தான் இருப்பாங்க, எனக்கு ரெண்டுமே வேணும்

அவள்: காதல், பிரியம், பாசம் இதெல்லாம் தோன்ற கூடவே இருக்கணும், தூண்டிவிடனும், உருவாக்கணும் அப்டிங்கிற அவசியம் இல்லைனு நம்புறவ நான், உன்மேல எனக்கு இதுவரைக்கும் உருவானது நல்ல மனிதன் அப்டிங்கிற தோற்றம்தான்.."உனக்கென்ன வேணும் என்கிட்டேந்து ?"..இந்த கேள்வியை கேட்க தகுதி பெற்றிருக்க

அவன்: (முகம் சற்று வயதானது போல் சுருங்கியது) நல்லது, இதுவரைக்குமாவது வந்தேனே ..மகிழ்ச்சி, அந்த கேள்விக்கு பதில் மொழி வடிவத்துல இல்ல..என்கிட்டேந்து நீ எதாவது தெரிஞ்சுக்கணும்னு தோணிருக்கா?

அவள்: உங்கம்மாவை பத்தி சொல்லு, ஆச்சிரியம், ஆர்வம், அழகு எல்லாம் கலந்து எனக்குள்ள ஆர்வத்தை ஏற்படுத்திட்டே இருக்காங்க

அவன்: நா பத்தாவது படிக்கும்போது எங்கப்பா இறந்துட்டாங்க, வாழ்க்கையே அவர்தான்னு நம்பிட்டிருந்தாங்க, எல்லாம் ஒருநொடியில மாறிப்போச்சு..சொந்தகாரங்க அவங்களுக்கு அடிமையா வாழ கூப்பிட்டாங்க, எங்கம்மாவுக்கு அதெல்லாம் ஒத்துவராது..அப்பா விட்டுட்டு போன ஹோட்டல் தொழில தான் ஏற்று நடத்துனாங்க..ஆம்பளைங்க நெறைஞ்ச இந்த உலகத்துல தனி ஆளா நின்னு என்ன படிக்க வெச்சாங்க, முக்கியா எந்த குறையும் இல்லாம, அவங்க பார்க்காத துன்பமோ, அவமானமோ இல்ல ..எல்லாத்தையும் கடந்து அவங்களோட வெற்றியா உன் முன்னாடி நான் நிக்குறேன்

அவள்: ஒன்னு சொல்லட்டுமா, எனக்கு உன்னைவிட உங்கம்மாவை தான் ரொம்ப புடிச்சிருக்கு, அவங்கள பத்தி தெரிய தெரிய அவங்க மேல அவ்ளோ காதல் வருது...என்னோட லட்சிய கனவுகளின்..மனித வடிவமா இருக்காங்க ..

அவன்: எங்கம்மாவை கல்யாணம் பண்ணிக்கிறியா ?

அவள்: (மோவாயினை மூடி தெத்துப்பல் தெரியாமல் சிரித்தாள்)

அவன்: சரி, நான் புறப்படுற நேரம் வந்தாச்சு...என்னுடைய அவகாசமும் முடிஞ்சாச்சு..எப்பவுமே இப்படி சிரிச்சிட்டே சந்தோஷமா இரு...அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கோ ..(என கூறி திரும்பி பார்க்காமல் சென்றான் )


(மனதிற்குள் ஏதோ கனத்தது போல் உணர்ந்தாள், சிறிது நீர் அருந்தி பார்த்தாள்..உள்ளே யாரோ உட்கார்ந்து அடைப்பதுபோல்)

காப்பி ஷாப்பில் ஆரம்பமானது ஓர் பாடல் (குமரிப்பெண்ணின் உள்ளதில்லே குடியிருக்க நான் வரலாமா..குடியிருக்க நான்.. )

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (17-Dec-16, 6:30 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 423

மேலே