நாளை நாங்கள் மண் திண்போம்

ஊர்ப்பசி போக்க
தன்பசி மறந்தவனுக்கு
பட்டினிச் சாவு !

உன் உயிருக்கு
மட்டுமல்ல ,
நீ விளைவித்த
பொருளுக்கும்
விலையில்லை !

உற்பத்தி செய்தவனே
பொருளுக்கு
விலை வைப்பது
உலக நீதி
அதற்கு விவசாயி
மட்டும் விதிவிலக்கு !

உருவாக்கியவனும்
உண்பவனும்
தள்ளி நிற்க,
விலை வைப்பவன்
வெள்ளை வேட்டி
இடைத் தரகன் !

அங்கு உன்
உழைப்பையும்,
வியர்வையையும்
சீந்துவாரில்லை !

அண்டை மாநிலங்கள்
நதி நீர்க்கு கைவிரிப்பு !
உன் வயிற்றிலோ
அணையா நெருப்பு !

"விவசாயிகள் பட்டினி சாவு"
ஊடகங்ளுக்கு விளம்பரம் ;
எங்களுக்கோ அதுவும்
ஒரு செய்தி !

ஒரு முறை 'உச்' கொட்டிவிட்டு
மறு நிமிடம்
மறந்து விடுவோம் !

உனக்குப் பின்
உன் குடும்பத்துக்காக
கவலைப்பட யாருக்கும்
நேரமில்லை !

எம் எதிர்கால
பசி தீர்க்க
நீங்கள் யாரும்
எஞ்சவிலையெனில்

பசி கொன்ற உங்களை
மண் தின்னும் !
நீங்களில்லா நாளைய
எமது பசிக்கு
நாங்கள் மண் திண்போம் !

உங்களோடு கைகுலுக்க
மறந்த நாங்கள்
நாளைய சோற்றுக்கு
வெட்கமின்றி
அயலான் கால் பிடிப்போம் !

விவசாயிகள் எதிர்காலம்
யாருக்கும் விடை தெரியா
விடுகதை ! காலம் தான்
சொல்ல வேண்டும்
தக்க விடை ......! ?

எழுதியவர் : நெட்டூர்.மு.காளிமுத்து (22-Dec-16, 9:45 pm)
பார்வை : 1048

மேலே