என் வாழ்க்கை

எந்தையும் தாயும் மகிழ்ந்து
உலகில் எனதுயிர் சேர்த்தார்கள்...
கந்தலு டைகள் உடுத்தி
எனக்கு கவினுடைத் தந்தார்கள்...
விந்தைகள் கொண்ட கனவின்
வெளிச்சம் விளங்கிடச் செய்தார்கள்...
சிந்தையில் நித்தம் தமிழை
விதைத்து சிறந்திட வைத்தாரே......

பஞ்சணை யில்லா துறங்க
மடியில் படுக்கைவி ரித்தார்கள்...
நெஞ்சுரம் நாளும் கொடுத்து
உறவின் நெறிகளும் ஈந்தார்கள்...
வஞ்சனை யில்லா மகவாய்
வளர்த்து வளர்பிறை கண்டார்கள்...
வஞ்சின மென்றும் தவிர்த்து
கருணை விழியில ணைத்தாரே......

இத்தனை தூரம் தொடர்ந்து
மலர்ந்த இனிமைகள் இவ்வீட்டில்...
இத்தனை மீளா சுகமும்
விளைய இடந்தரு மிந்நாட்டில்...
உத்தம னாய்நான் விளங்க
உதவும் உறவுகள் இந்நாட்டில்...
நித்தமும் என்ற னிதழ்கள்
மொழியும் நலந்தரும் நம்நாடே......


(விளம், தேமா, புளிமா, புளிமா, விளம்,காய்)

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 9:12 am)
பார்வை : 284

மேலே