கொஞ்சம் யோசியுங்கள் மாணவ-மாணவிகளே

என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை, பொறியியல் துறை இன்றைக்கு ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகிருக்கிறது. பொறியியல் படித்தால் நிச்சயமாக வேலைகிடைக்கும் என்கிற வாசகம் போய் "அய்யா சாமி ஆள விடுங்க உங்க இன்ஜினியரிங் படிப்பு எங்களுக்கு வேணாம்" என்று ஓடுகிற ஒரு மனோபாவம் இன்றைக்கு பரவிக்கிடக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 500 க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் நிரம்பி வழிகின்றன. அவை அனைத்தும் நாம் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவோம் என்று வீர வசனங்கள் பேசி வருகின்றன. நாளிதழ்கள் அனைத்தும் கலர் கலராக ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள் மூலம் 100 சதவிதம் வேலைவாய்ப்பு உத்தரவாதம் என்று ஆகாச புளுகுக்களை அள்ளிவிடுகின்றன.

பற்றாக்குறைக்கு என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்று கல்வித் திருவிழாக்களும் ஊடக பிரம்மாக்களால் ஊருக்கு ஊர் கூவி கூவி பொறியியல் படிப்புகள் விற்கப்படுகின்றன. கடைசி வரைக்கும் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்ற விபரத்தை தெளிவாக எந்த ஒரு வல்லுநர் பேச்சாளரூம் தெரிவிப்பது இல்லை. அவை வெறும் சுய விளம்பரங்கள் தேடும் நோக்கிற்காக நடத்தப படும் நாடக மேடைகளே.

முடிவில், மாணவர்கள், எதுக்கு சாமி வம்பு என்று வழக்கம் போல் ஆட்டு மந்தை போல் பிரபலமான நான்கு துறைகளைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். இறுதியில் தூர்வாரப்படாத கால்வாய்களில் தேங்குகின்ற குப்பைகள் போல் வருடாந்தோரும் தேங்கிக்கிடகின்றனர். இதைப் பார்க்கும் அடுத்த தலைமுறை மாணவர்கள் பொறியியல் கல்வி மீது அதிருப்தி அடைந்தாலும் , வாடா நாலு வருஷம் கழிச்சு பாத்துக்கலாம் என்கிற தைரியத்தில் கிடைக்கின்ற கல்லூரிகளில் சேர்கின்றனர்..

சரி, சேர்ந்ததும் என்ன செய்கின்றனர்? சற்று விசாரித்துப் பார்த்தால். 40 சதவீதம் பேர் மட்டுமே அக்கறையுடன் ஆர்வமுடன் படிக்கின்றனர். அதில் 30 சதவீதம் மாணவிகள் தான். மற்றவர்கள் வேண்டா வெறுப்புடன் கடமைக்கு வந்து போகின்றனர். இதற்கு இடையில் சினிமாவில் வருவது போல் காதல் காட்சிகள், அடிதடி சண்டைகள், நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கல்வி என்ற பெயரில் உல்லாச சுற்றுலாக்கள், அலைபேசி வெட்டி அரட்டைகள் என அணைத்து வாலிப சேஷ்டைகளும் உண்டு.

மேலும் , தேர்வு முடிவுகள் யாரையும் அவ்வளவு வெகுவாக பாதிப்பதில்லை. "நான் மட்டுமா பெயில்? கிளாஸ்ல பாதிப் பேர் பெயில்" என்று தோல்விக்கு ஆதரவாளர்களைத் துணைக்குக் கூப்பிடுகின்றனர்.

மேலும் விசாரித்தால் எனக்கு இந்த படிப்பு மேல இஷ்டமே இல்லை வீட்ல தொல்லை தாங்காம தான் இதைப் படிக்கிறேன் என்று அப்பட்டமா பேசிக்கிட்டு திரியும் 'கடமைக்குச் செய்யும் மாணவ சங்கமும்' உண்டு.

வேறு சிலரோ, இந்த படிப்பு போர் அடிக்குறது பா... கொஞ்சம் கூட அறிவ வளர்க்கிறமாதிரி, வாழ்க்கைக்கு பிரயோஜனபடுகிற மாதிரி இல்லை என்று பல்கலைக்கழகத்தின் மீதே பழி சுமத்தும் சோம்பேறிகள் சங்கமும் உண்டு.

இன்ஜினியரிங் கல்லூரி மாணவ மாணவிகளே ! உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். பெற்றோர்கள் மீதும் கல்வி நிறுவனங்கள் மீதும் பழி சுமத்தி தப்பித்து விடலாம் என்று நினைத்தால் அகல பாதாளத்தில் விழுவீர்கள். நீங்கள் படிப்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே . எல்லா படிப்புகளுக்கும் பின்னாடி ஒழிந்திருக்கும் வேத மந்திரம் என்ன வென்று அறிவீர்களா? " காசு, பணம்,துட்டு, துட்டு.. மட்டுமே தான்.

இன்று உலகம் இதை நோக்கித் தான் ஓடிக்கொண்டிருக்கிறது, பணத்தைத் தொழில் செய்து சம்பாதிக்க நினைப்பவன் தொழில் ரீதியான வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அப்படி நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஒரு வழி தான் இந்த பொறியியல் படிப்பு. கல்வி என்பது அறிவை வளர்த்தாக வேண்டும்தான், ஆனால் இன்றைய காலகட்டம் அதற்கு உறுதுணையாக இல்லையே! பணத்தை அல்லவா தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இல்லை என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று -அறிவு என்பது தன்னார்வத்தால் , சுய முனைப்பால் வளர்க்கப்பட வேண்டிய ஒன்று. கல்விநிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் வசதிகள் தான் செய்து தர முடியும். உங்கள் மண்டை ஓட்டிற்குள் உள்ள மூளையை நீங்கள் தான் சலவை செய்தாக வேண்டும். பணம் உள்ளவன் தான் வாழ்வில் வெற்றி பெற்றவன் என்று இன்றைய உலகம் அடையாளம் காட்டுகின்றது. ஆதலால், முதலில் பணத்தை சம்பாதிப்பதற்கு முனைவோம்.

இதைப் படித்தால் பணம் சம்பாதிக்க முடியுமாமே?, சரி படிப்போம், என்று படிக்கத் தொடங்குங்கள். இது தந்தால் தான், அது தருவேன் என்று உலகமே நிர்ப்பந்தத்தில் தான் உள்ளது. ஆதலால் உங்கள் முதல் கடமை :பாடங்களைப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவது தான்.
இரண்டாவது, நீங்கள் விரும்பியது போல் அறிவு சம்பந்தமான தேடல்களில் ஈடுபட்டு, உங்களுக்கு உபயோகப்படும் திறமைகளை தேர்ந்தெடுத்து வளர்த்துக்கொள்ளலாம்.

இல்லை, இந்த படிப்பு எனக்கு பிடிக்க வில்லை என்று நேரத்தை வீணடித்தால் வாழ்க்கை வீணாகப் போகும். இந்த பொறியியல் துறை பணம் கொழிக்கும் துறை, ஆதலால் இதை நான் படித்தே தீரவேண்டும் என்று படியுங்கள். அப்படி படித்தவர்கள் மட்டுமே இன்று பன்னாட்டு நிறுவனங்களில் பல லட்சங்களை அள்ளுகிறார்கள். நாடு நாடகப் பறக்கிறார்கள். நீங்கள் நினைக்கிற மாதிரி ஐசாக் நியூட்டன்களோ, அறிவுத் திருவுருவங்களோ அல்ல.

முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்வது மிகவும் முக்கியமானது. வீண் விவாதத்தை விட்டு விட்டு பிழைக்கிற வழியைப் பாருங்கள். இது தான் சத்தியம் . என்னடா இவன் பணத்தை மட்டுமே மையமாக வைத்து பேசுகிறானே என்று நீங்கள் யோசித்தால் நீங்கள் உலகம் புரியாதவர்கள் என்று அர்த்தம்.

பணம் என்னடா பணம் குணம் தானடா நிரந்திரம் என்று அந்த காலத்து கண்ணதாசன் போல கவி பாடிக்கொண்டிருந்தால் விரைவில் காணாமல் போவீர்கள் . உலகோடு ஓட்ட ஒழுகல் நலம். இதைத் தான் நானும் சொல்கிறேன். கொஞ்சம் யோசியுங்கள் மாணவ-மாணவிகளே!

விஜய் கணேசன்

எழுதியவர் : விஜய் கணேசன் (26-Dec-16, 2:59 pm)
சேர்த்தது : விஜய் கணேசன்
பார்வை : 568

சிறந்த கட்டுரைகள்

மேலே