காதலை தேடி-35

காதலை(லே) தேடி-35

உனக்கும் எனக்குமான
தூரம் தொலைவில்லை
என் காதலியே......

என் உதிரம் கொண்டாவது
உயிர் வளர்த்து
உன்னை தேடி வந்தடைவேன் கலங்காதே......

"சார், இவ்ளோ காதல் இருந்தும், அவங்க அவ்ளோ தூரம் எடுத்து சொல்லியும் நீங்க ஏன் சார் மேடமை விட்டு பிரிஞ்சி வந்திங்க, தன் மேல பழியை போட்டுக்கிட்டு உங்களுக்கு மரியாதை குடுத்து உண்மையான காதலோடு உங்களோட வாழ விருப்பப்பட்ட மேடமை விட்டு நீங்க பிரிஞ்சி வந்தது நியாயமா"

"நியாயம் இல்லதான்பா, ஆனா அந்த நேரத்துல அது தான் எனக்கு சரினு பட்டது, அவளோட ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சூனியம் ஆக்கிட்டு அவளோட நான் இருந்தா மட்டும் எல்லாம் சரியா போய்டுமா, எத்தனை டாக்டர், எத்தனை கோவில், எத்தனை வேண்டுதல்...எந்த தெய்வமும் ஒரு வழிய கூட காட்டாம போனபிறகு நான் மட்டும் என்ன செய்ய முடியும்.....

சகிய உயிரா நினைச்சது தவிர அவளுக்குனு நான் என்ன செஞ்சுருக்கேன், என்னால அவளுக்கு என்ன சந்தோசம் கிடைச்சிருக்கு, கூட இருந்து அவ சந்தோஷமான வாழ்க்கைக்கு நானே தடையா இருக்கறேன்னு தெரிஞ்சும் எப்படிப்பா என்னால அப்படி ஒரு தவற செய்ய முடியும்.......

குழந்தைகளை பார்க்கும்போதும், கர்ப்பிணிகளை பார்க்கும்போதும் இதேபோல தான் ஒரு குழந்தையை சுமக்க மாட்டோமா, தாய்மை உணர்வை அனுபவிக்க மாட்டோமான்னு அவ வயித்தை தடவி பாத்துக்கறதும், எனக்கு தெரியாம அவளோட வலிகளை மறைச்சிக்கிறதுமா இருக்க சகியை என்னால எப்படி கையாலாகாததனத்தோடு வேடிக்கை பார்க்க முடியும்....

எல்லாத்தையும் விட கொடுமை நீ சொன்னாயே பழியை அவ மேல போட்டுக்கிட்டு தியாகம் செஞ்சான்னு, அது தான் என் இந்த முடிவுக்கே காரணம்....எத்தனை பழிப்பு, எத்தனை ஜாடைமாடை பேச்சு, நேரடியா அவளை கேவலமா எத்தனை பேச்சு பேசிருப்பாங்க, எல்லாம் விட அவளோட அம்மாவே அவளுக்கு தான் குழந்தையை பெத்துக்க தகுதி இல்லனு நினைச்சி அவளை கோவில் கோவிலா அலைய விட்டு விரதம் வேண்டுதல்னு படுத்தன பாடு இப்பவும் என் கண்முன்னாடியே நிக்குது....."

"சார், ப்ளீஸ் அழாதீங்க சார், போதும் நீங்க சொன்ன வரை, இதுக்கு மேல நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்"

"இல்லப்பா, என்ன முழுசா சொல்ல விடு, அப்போ தான் என் மனசுல அழுதிட்டு இருக்க வலியெல்லாம் கொஞ்சமாவது குறைஞ்சி போகும், யார்கிட்டயும் சொல்ல முடியாம பக்கத்துல சொந்தம்னு ஒருத்தரும் இல்லாம எத்தனை நாள் தனியா பெரிய மனிதன் தோரணையில் உள்ளுக்குள்ள புழுங்கிட்டு இருந்துருப்பேன், இப்போ சொல்ல தோணுது, நான் சொல்லி முடிக்கறேன், நீ காரை கவனமா ஓட்டுப்பா"

"உங்களுக்கு சொல்றதுல தான் ஆறுதல் கிடைக்கும்னா எத்தனை தடவை வேணாலும் நீங்க சொல்றத கேட்க நான் தயாரா இருக்கேன் சார், சொல்லுங்க, உங்க வலியை போக்க கொஞ்சமாவது நான் உதவியா இருக்கேனா அதுவே எனக்கு போதும்"

"கொஞ்ச நாள் பேசி பழகிய உனக்கே என் வலியை புரிஞ்சிக்கிட்டு அதை போக்க துடிக்கும் மனசு இருக்குன்னா என் வாழ்வாய் இருந்தவள் வலியை போக்க நான் துடிக்க மாட்டேனா, அவளுக்குனு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு, அதை பற்றி அவள் யோசிக்கலானாலும் நான் யோசிச்சேன், குறை அவளுக்கு தான்னு நினைச்சுக்கிட்டு என்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தின யாரும் பேச்சு கூட குறை எனக்கு இருக்கலாமோனு பேசல, யோசிக்க கூட இல்ல, சொல்ல போனா சுயநல மா நான் கூட இருந்திருக்கேன்னு தான் தோணுது, என்ன தான் சகி என்கிட்ட சத்தியம் வாங்கிருந்தாலும் குறை எனக்கு தான்னு எல்லார்கிட்டயும் சொல்லிருக்கணும், ஆனா அந்த அவமானத்தை தாங்கிக்கிற நிலைல அப்போ நான் இல்லை, சகியோட சத்தியம் எனக்கு சாதமாகி போனது, ஒரு பக்கம் என் குற்ற உணர்ச்சி, சகி மேல இருந்த காதல், சுத்தி இருந்தவங்களோட வற்புறுத்தல், சகியின் ஆசை, கனவு, அவளோட வலி இதெல்லாம் என்னை பைத்தியக்காரன் போல மாத்திடுச்சு...

பிரம்மை பிடித்தவன் போல எத்தனையோ இரவுகளை கடத்திருக்கேன், அதற்கு மேலும் நான் அங்க இருந்தா எதுவுமே சரி ஆகாதுன்னு முடிவு எடுத்து தான் நான் அங்க இருந்து கிளம்பினேன்....போகறதுக்கு முன்னாடி என் சகியை கொஞ்ச நாளாவது சந்தோஷமா வச்சிக்கணும்னு நினைச்சி தான் செகண்ட் ஹனிமூன் போலாம்னு கட்டாயப்படுத்தி வெளிய கூட்டிட்டு போனேன்....அவளோட சந்தோஷமான முகத்தை பார்த்த தெம்பில் ஊரிலிருந்து வந்த சில நாட்களில் இரவோடு இரவா சகி கிட்ட கூட சொல்லிக்காம என் மனநிலையை ஒரு கடிதத்தில் எழுதி வச்சிட்டு என் எல்லா சொந்தங்களையும் விட்டு விலகி வந்தேன்...

இது தான்பா நடந்தது, என்னோட காதல் கதை இது தான், நான் என் சகியை விட்டு பிரிஞ்ச கதை, கதையோடு இல்லாம நிஜத்தில் என் உயிரோடு வாழும் ஜீவனுள்ள நினைவுகளப்பா என் காதல்"

"சார், நிஜமாவே உங்களோட காதல் கிரேட் தான் சார், என்ன தான் இருந்தாலும் அவங்கள பிரிஞ்சி போன பின்னாடியும் அவங்களையே நினைச்சிட்டு அவங்களுக்காகவே வாழ்ந்துருக்கீங்க, நிச்சயமா உங்க காதல், காத்திருப்பு வீண் போகாது சார்"

"நீ சொன்னபடி நல்லது நடந்தா எனக்கும் சந்தோசம் தானப்ப, ஆமா உன் வீடு வந்ததா இல்லையா, போய் சேர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் "

"அவ்ளோ தான் சார், அடுத்த ரைட் கட்ல வெள்ளை கலர் வர்ணம் பூசி வெள்ளை மாளிகையா நிக்கறது தான் எங்களோட வீடு"

"எங்களோட வீடா, எப்போ பாரு எங்க அம்மா, எங்க வீடுன்னு பன்மைலயே சொல்றயேப்பா, உன் வீட்ல எத்தனை பேரு , இதுவரை உன்ன பத்தி எதுவுமே கேட்காம விட்டுட்டேன் "

"சார் இனி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல, எல்லாம் உங்களுக்கே தானா புரியும், அங்க பாருங்க சார் அதான் எங்க வீடு"

""என்னது வீடா, தாயகம்னு போட்ருக்கே, எதோ ஆசிரமம் மாதிரில்ல இருக்கு"

"சார், உள்ள வந்து பாருங்க உங்களுக்கே புரியும்"

"சார், இறங்குங்க சார், உள்ள போகணும்ல...உங்களுக்கான இன்ப அதிர்ச்சியை பாக்க சீக்கிரம் போக வேண்டாமா"
"என்னப்பா சொல்ற, எனக்கு ஒண்ணுமே புரியல"

"சரோ அண்ணா, வேலை முடிஞ்சதா, சீக்கிரம் வந்துடீங்க"

"ஏய் வாலு எத்தனை தடவை சொல்லிருக்கேன், என்னை சாரதி அண்ணான்னு கூப்பிடுன்னு, இன்னொரு தடவ சரோனு கூப்பிட்ட உனக்கு நான் வாங்கி தர சாக்கலேட் கட் ஆகிடும், ஜாக்கிரதை"

"சாரி அண்ணா, நான் இனி அப்படி கூப்பிட மாட்டேன், சரியா"

"சரி செல்லக்குட்டி, பயந்துட்டியா, அண்ணா சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், அம்மா எங்க இருக்காங்க"

"அம்மா ஆஃபீஸ் ரூம்ல எதோ கணக்கு வேலைலாம் பாத்துட்டு இருக்காங்க அண்ணா, ஆமா இந்த அங்கிள் யாரு அண்ணா"

"அங்கிள் இல்லமா, அப்பா, நமக்கெல்லாம் ரொம்ப வேண்டியவரு, சரி நான் அம்மாவை பாக்க போறேன், நீ போய் விளையாடு"

"சார், நீங்க ஏன் அங்கயே நிக்கறீங்க வாங்க உள்ள போய் அம்மாவை பாக்கலாம்"

எழுதியவர் : இந்திராணி (27-Dec-16, 12:27 pm)
பார்வை : 505

மேலே