பொய்

எரும மாடே 22 வயசாவுது... எட்டு மணி வரை தூங்குற.. எந்திரிச்சு குளிச்சிட்டு கிளம்புடி...

அம்மாவின் விடியற்காலை தாலாட்டுடன் போர்வையை விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தாள்.

அம்ம்மா ... ஏன் இப்டி கத்துற? வரேன் இரு..

கால்கள் ஜில்லென்றத் தரையைத் தொடவே தயங்கியது...

அம்மா... ஹாட் வாட்டர் வச்சியா?

அடி வாங்க போறடி.....

ஆமா.. அவனுக்கு மட்டும் சுடு தண்ணி, டவல் எல்லாம் கை மேல கொடு... அவன் மட்டும் தான உங்க புள்ள...

என்னடி.... அவன் இவன் இவனு ஒரு மட்டு மரியாத இல்லாம..?? அண்ணனு சொல்லுன்னு எத்தன தடவை சொல்லிருக்கேன்...

அப்படிலாம் அவனக் கூப்ட முடியாது.... அவனும் ஆளும்..... அவனெல்லாம் எனக்கு அண்ணனே கிடையாது....பிசாசு... பேச கூட மாட்டான்.. அவனெல்லாம் அண்ணனா.... நீ வேணுனா தலையில தூக்கி வச்சிட்டு ஆடு...

ஆமாண்டி.. ஆம்பளைப் புள்ளடி... அவன்தான் நாளைக்கு கஞ்சி ஊத்தி கடைசில கொள்ளி போடுவான். நீயி?

வேற டயலாக் ஏதாச்சும் சொல்றியா? ம்ஹ்... கேட்டுக் கேட்டு காதே கதறுது....

இப்டியே நேரத்த கடத்தாத ... ஒழுங்கா குளிச்சுட்டு வா... அப்றம் ஒளறு.. அவனே ஒரு வாயில்லாப் பூச்சி... அவன் உண்டு வேலை உண்டுன்னு இருக்கான்.... அவன் கூடவே வாரப்பாடு...

----------

பெரிய முள் எட்டு இருபதைக் காட்டத் துடித்துக்கொண்டிருந்தது... ஒற்றைப் பின்னலை ஒரு கையில் பிடித்தவளாய்.. ஒரு கையில் சீப்புடன்...



ஏம்மா....இங்க இருந்த என் ரிங் எங்க? எடுத்து எங்காச்சும் வச்சீங்களா?

எல்லாம் என்னையவே கேளுடி ... எங்காச்சும் தொலைச்சிட்டு வந்து, இங்க நடிக்காத... தேட்ற மாதிரி....

இல்லமா... நிஜமா....நைட் தான் இங்க கழட்டி வச்சேன்...

கழட்டி வச்சத திருடனா தூக்கிட்டுப் போய்ட்டான்..??? திமிரு... சம்பாதிச்சு வாங்கிருந்தா பத்ரமா வச்சுக்கத் தோணும்... உன்ன சொல்லி தப்பு இல்லடி... செல்லமா வளர்க்குறோம்ல... அதுதான் பொய் சொல்ல கூட தயங்க மாட்டேங்குற....எங்கள சொல்லணும்...

அம்ம்ம்ம்ம்ம்மா..........

என்ன..?? என்னடி.... எதுக்கு கோபம் வருது?? வந்து கொட்டிக்கோ... தெண்டம்... அப்பவே கலைச்சிருக்கணும்...

.......

ஏய்... சாப்பிட்டு போடி...

........


வழியும் கண்ணீர், பவுடர் பூசிய கன்னத்தில் கோடுகள் போடத் தவறவில்லை. மோதிரத்தை அந்த இடத்தில் வைத்ததைத் தவிர வேறு ஏதும் அறியாதவளாய்...

ஹே.. ஏண்டி பஸ்ல ஏறுனதுல இருந்து உம்முனே வர்ற... அழுதுருக்க போல...

இல்லடி... ஏதும் கேக்காத....

அப்டிலாம் விட முடியாது.. என்னனு சொல்லுடி...

ப்ளீஸ்.. காலேஜ் போற வரைக்கும் ஏதும் கேக்காத...

டீல்ல்ல்ல்.... அப்டினா காலேஜ் போய் கேட்டுக்கிறேன்...


நமட்டுச் சிரிப்பு மேலும் கோபத்தைத் தலைக்கேற்றியது...

__

ஹாய் டி.... ஹாய் டி.... ..... உங்க காலேஜ் பஸ் என்னடி இவ்ளோ லேட்டா வருது?

.......

அவ ஏண்டி இப்டி இருக்கா?? ஹாய் கூட திருப்பி சொல்லாம....??

தெரிலடி.... என்ட்டையும் சொல்லல .. நீ வேணுனா அவக்கிட்டயே கேளு.... நானே செம டென்ஷன்ல இருக்கேன்....

ஹே... சும்மா இருங்கடி...

எங்களால சும்மாலாம் இருக்க முடியாது...

நேத்து நீ ஏன் பர்த் டே அதும் லீவ் போட்ட... பிலேட்டட் விஷஸ் டி...

தேங்ஸ் டி... வீட்ல எல்லோரும் கோவிலுக்கு போனோம்.. அதான்... சரி விடு.. இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் மேட்டர்... டொட்டடொய்ன்...... நம்ம எதிரியோடு அக்கா நேத்து காலைல ஸ்கூட்டில போறப்ப ஆக்சிடண்டாம்ம்ம்... சின்ன அடிதானாம்ம்ம்... அவங்களோட லவ்வர்தான் எல்லா கவனிப்புமாம்... மோதிரத்தை வித்தெல்லாம் ஹாஸ்ப்பிட்டல் செலவு பாத்துருக்காராம்.... செம லவ்வுல்ல??

ஹே.. அவங்களோட லவ்வர் பேர் என்னனு தெரியுமா??

ஆமா... !! அவ நம்ம பிரெண்டு பாரு.. அப்டியே எல்லாத்தையும் சொல்ல... இதுவே அப்டி இப்டி காதுக்கு வந்துச்சு.... உனக்கு ஏன் இவ்ளோ இன்ட்ரெஸ்ட்?

ஒன்னுல்லடி....

ஹேய்.... எதுக்குடி சிரிக்கிற.... உனக்கு ஏதாச்சும் செட் ஆயிருக்கா ?... பொய் சொன்னா சாப்டறப்ப விக்கல் வரும்.....

என்னடி நீ புதுசா சொல்ற ..?? சாப்டறப்ப விக்கல் வருமா?

ஆமா... நானே ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சது... தலையில முட்டினா கொம்பு வர்றப்ப, பொய் சொல்றப்ப விக்கல் வராதா?

போடி... நீயும் உன் விக்கலும் ....

ஒழுங்கா சொல்லிருடி... அப்டியே போன் நம்பரும் கொடுத்திரு.... நாங்க பாத்துக்குறோம்.....

ஹே....

தப்பா நினைக்காதடி.... ஏதாச்சும் ஆக்ஸிடன்டனா போன் பண்ணத்தான்...

அடி வாங்க போறிங்கடி... வாங்க கிளாஸ்க்கு போலாம்...


-------

ஹேய் ...என்னடி உம்முனு வந்த.. கிளாஸ்லயும் ஒரே சிரிப்பு.... நம்ம எதிரியவே வேற பாத்துட்டு இருக்க... ஏதோ சம்திங்க்... ஒழுங்கா பஸ் விட்டு இறங்குறதுக்குள்ள சொல்லுடி..... உன் ஸ்டாப் வேற வந்துருச்சு...

.....

என்னடி எதுக் கேட்டாலும் சிரிக்கிற??

என் ஸ்டாப் வந்துருச்சு.... பாய் டி... நாளைக்கு சொல்றேன்.....

போடீடீடீடீங்க..... பாய்... சீ யூ.... லவ் யூயூயூ....

-------

சீரியல் அண்ணியாரின் சீறல்களை ரசித்தவாறே வெங்காயம் நறுக்கிக் கொண்டிருக்கும் அம்மா....


ஹே...என்ன லேட்டு.... எங்கடி மோதிரம் கிடைச்சுச்சா.. கொஞ்ச நேரத்துல உங்க அப்பா வந்துருவாரு....

ஸ்பெஷல் க்ளாஸ் வச்சுட்டாங்க.. சாரி மா.. நான்தான் நேத்து என் பிரெண்டுக்கு கொடுத்தத மறந்துட்டேன்... எமர்ஜென்ஸி.. ஒரு ஆக்ஸிடென்ட்... அதான் கொடுத்தேன்.... திட்டதம்மா... ப்ளீஸ் .....

என்னது.... இவ அப்டியே பாரி வள்ளலு.. தூக்கி கொடுத்துட்டா.... தங்கம்டி.... வாயைக் கட்டி வயித்தக் கட்டி அந்த மனுஷன் சேத்தது... ஏதாச்சும் பி.ஏ., பி.காம்னு சேத்துட்ருக்கணும்.... உன்ன இன்ஜினியரிங் படிக்க வச்சது தப்பாப் போச்சு... எங்க அந்த ஆளு கேக்குறாரு.... அப்பன் செல்லம்... ஒழுங்கா நாளைக்கு வாங்கிட்டு வந்துரு.... இல்லனா வீட்டுக்கு வராத... அரை பவுன் எவ்ளோ தெரியுமாடி... உனக்கெல்லாம் செல்லம் கொடுத்து வளர்த்ததே தப்பு.......

.....

திட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தவளை பார்த்தவாறே, நனையாமல் கையில் ஹெல்மெட்டுடன் கடந்தான்.


வாடா... உன் தங்கச்சி பண்ணிருக்கதக் கேளு... இதுவே என் பையனா இருந்தா என்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம எதும் பண்ணிருக்க மாட்டான்... இவளும் இருக்காளே...

டேய்... நேத்தே கேட்டேன்ல.... உன் சட்டையில் என்னடா ரத்தக் கறை ஒட்டியிருக்குனு... ஏன் எதுவும் சொல்லல??? தேச்சு எடுக்குறதுக்குள்ள கையே தேஞ்சிருச்சு....

ஒண்ணுல்லம்மா.... உங்கள்ட நான் மறைக்க மாட்டேன்மா... எப்படினு எனக்கே தெரில....

சரிப்பா... நேத்தேக் கேட்டேன்.. நீ ஏதும் சொல்லலையா.. அதன் பயந்துட்டேன் டா.... சரி கிச்சன்ல வேல முடிச்சர்றேன்...

-----

வாப்பா வந்து சாப்ட்டு பேசு..... ஹே... உனக்கு தனியா சொல்லனுமாடி...வந்து நீயும் வயித்துக்கு கொட்டிட்டு போய் படி.........

அம்மா... நீங்க சாப்டல??

மாசக் கடைசி.. யாராச்சும் நாலு பேத்த புடிச்சு கேச போட்டு வர இன்னைக்கு கொஞ்ச நேரமாகும் டா... உங்க அப்பா வந்ததும் சாப்ட்டுக்குறேன்.... மோதிரத்தைப் பத்தி ஏதும் வாயத் தெறக்காத... உங்க அப்பாக்கு போய் சொன்னா பிடிக்காதில்லை.....

வழக்கம்தான்! எனினும் இன்று புயல் கரையைக் கடந்தது.

க்க்க்க்.... க்.... க்க்...

பசி மட்டும் இல்லைனா கொஞ்சம் மாணத்தோடயாவது இருந்திரலாம்.... மைண்ட் வாய்ஸ் ஏதோ கருத்து சொல்ல.......

வழக்கமான வசைப் பாட்டுக்கு நடுவே இரவு உணவை உண்ணும் போது விக்கிக் கொள்ள, தண்ணீர் டம்ளருடன் ஒரு கை நீண்டது... கூடவே...

தேங்க்ஸ் திவ்யா..... பொய் சொன்னா இப்படிதான் சாப்டறப்ப விக்கல் வரும்.....

:-0..... அடப்பாவிகளா....

க்க்க்க்.... க்.... க்க்................




------------


© மனோஜ் கியான்

எழுதியவர் : மனோஜ் கியான் (27-Dec-16, 7:21 pm)
Tanglish : poy
பார்வை : 559

மேலே