என்நினைவு உன்மனதில் இருந்திருந்தால்...

குறிப்பேடுகளில் இல்லாத வினாக்களுக்கு விடைகூறி
குற்றமற்ற எனைநீயும் குறையேதுமின்றி விடுவித்திருந்தால்...

வெறுப்போடுபல கதைகளைப்பேசி வியத்தகு வார்த்தைகளைவீசி
நெருப்புகளாய் உருகிய என் இரவுகளை நீயும் கருக்காமல் இருந்திருந்தால்...

சிரிப்போடு சிலநாள் எனை சிறகடிக்கச்செய்து பின்
சிறைகொண்ட சிறுதீவிற்கு எனைநீயும் வழியனுப்பாது இருந்திருந்தால்...

பிறைகண்ட நறுமுகையின் குளிர்ந்த பார்வையினில் சிக்கி
நரைகொண்ட என்சிரத்தில் என்நினைவுகளை நீயும் உறையவிடாது காத்திருந்தால்...

கதிர்கொண்ட நெல்மணிகளாய் போகும்வழியெங்கும் உதிராமல் தலைசாய்த்து
ஒருமனதாய் எனக்காக நீயும் காத்திருந்தால்...

உலர்ந்துவீசும் பாலைமணலாய் ஓசையின்றி எனைத்தாக்காது
மலர்ந்துவீசும் மல்லிப்பூவாய் நறுமணத்தை வீசியிருந்தால்...

நாளேட்டில் மறைந்துகொண்ட நல்லநேரங்களை அன்றே தேடியெடுத்து
நாளைய செய்திகளெனநீயும் நாளும்பேசாமல் இருந்திருந்தால்...

தப்பிப் பிழைக்க நீ தாம்புக்கயிற்றையா தேடியிருப்பாய்..?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (29-Dec-16, 9:13 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 102

மேலே