காதல் பழக வா-1

காதல் பழக வா-1

தென்றல் வந்து
தீண்டி சென்றும்
இன்பம் ஒன்றும் பெருகவில்லை.
களைத்து போன
காதல் உள்ளம்
ஒரு நிமிடம் கூட
மாறவில்லை.....
தென்றல் வேண்டாம்
இன்பம் வேண்டாம்
தியானம் செய்து வாழ்கிறேன் நான்
காதல் பழக எண்ணமில்லை
துறவன் போலே வாழ்கிறேன் நான்....

"அம்மா, என்கிட்டே நீங்க எதை பத்தியும் பேசலாம், ஆனால் கல்யாணம் பத்தி மட்டும் பேசாதீங்க, இப்போ கல்யாணம் பண்ணிக்க எனக்கு துளி கூட விருப்பம் இல்லை....நீங்க எத்தனை பெண்ணோட போட்டோவை காட்டினாலும் யாரையும் ரசித்து பார்க்க கூட தோணலையே, அப்படி இருக்க நான் எப்படி அவங்களோட என் கல்யாணம் பத்தி யோசிக்க முடியும்......"

"கண்ணா, எல்லா அம்மாக்கும் ஒரே ஆசை தான் இருக்கும், தன் பிள்ளையோட வாழ்க்கையை நல்லவிதமா அமைச்சு கொடுக்கணும்னு, அத தான நானும் விரும்பறேன், நீ நல்ல விதமா படிச்சி முடிச்சி இப்போ உனக்கென தனியா பிசினெஸ் அமைச்சிக்கிட்டு அதுல கொடி கட்டி பறந்திட்டு இருக்க, உனக்கு கல்யாண வயசு தாண்டறதுக்குள்ள உனக்கான ஒருத்திய இந்த வீட்டுக்குள்ள கொண்டு வரத தவிர இப்போ எனக்கு வேற என்ன கனவிருக்க போகுது, இல்ல தேவை இருக்க போகுது"

"அம்மா, உங்களுக்கு எத்தனை முறை சொல்றது, சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கறீங்க…. ஒருவேளை எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சுனா, அதுவும் இவளை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணினா நிச்சயம் அவளை உங்க மருமகளாக்கி உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துவேன், அதனால என் கல்யாணம் பத்தி நீங்க கவலையே பட வேண்டாம்.... அதுவரை இந்த கல்யாண பேச்சும் என் கிட்ட பேச வேண்டாம்......... உங்களுக்கு இப்போவே யாருக்காவது கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ஆசை இருந்ததுனா சித்தப்பாவோட பிள்ளைங்க ரவி, ஷாலுக்கு கூட கல்யாண வயசு வந்துடுச்சுல்ல அவங்களுக்கு கல்யாணம் பண்றத பத்தி யோசிங்க......எனக்கு மீட்டிங்க்கு டைம் ஆச்சு, நான் கிளம்பறேன்"

"கண்ணா நில்லுப்பா , நான் சொல்றத கேளு"

அதற்கு மேல் கண்ணன் அங்கு நின்றிருந்தால் தானே அவன் அம்மாவின் குரல் அவனுக்கு கேட்டிருக்கும், மின்னல் வேகத்தில் வெளியேறியவனின் காதில் காற்றின் அலை அலையான ஒலியே நிறைந்திருந்தது.....

"இவனை பாத்திங்களா, இவனுக்கு எப்படி எடுத்து சொல்லி புரிய வைக்கறதுனே எனக்கு தெரியல, என் அண்ணா பசங்க எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்சாச்சு, இப்போ தம்பி பசங்க கல்யாண வயசுல நிக்கறாங்க எல்லார் கல்யாணத்தையும் முன்ன நின்னு செஞ்சு வச்சவனுக்கு தன்னோட கல்யாணத்தை பத்தி யோசிக்க விருப்பமில்லைங்கறான்....நீங்களாவது அவன்கிட்ட பேசக்கூடாதா, வேடிக்கை பாத்துட்டு நிக்கறீங்களே"
"ரமாம்மா, கண்ணாவை பத்தி உனக்கு தெரியாததா, நீ பேசினதால நின்னு பதில் சொல்லிட்டு போறான், வேற யார் பேசினாலும் ஒரே ஒரு பார்வை, அதற்க்கு மேல வேற எதையும் அவனிடம் பேச முடியாது, கண்ணாவோட குணம் புரிஞ்ச நீயும் இப்படி உன்னையே வருத்திக்கிட்டு அவனையும் தொந்தரவு பண்ணிட்டு இருக்கறது சரிதானா......அவன் ஒரு முடிவு எடுத்தா அதை யாராலயும் மாத்திடவே முடியாது, அந்த முடிவும் அவ்வளவு சரியானதா இருக்கும்.....இல்லைனா இழுத்து மூடற நிலையில இருந்த கம்பெனிய இன்னைக்கு நம்பர் ஒன் நிலையில கொண்டு வந்திருக்க முடியுமா, நான் சம்பாரிச்ச பணத்துல ஒத்த ரூவாய கூட தொடாம இன்னைக்கு கோடிக்கணக்குல பிசினெஸ் பண்ற திறமை தான் இருந்திருக்குமா.......கண்ணன் ஒரு விஷயத்துல முடிவை சொன்னா உன் அண்ணன், தம்பிகளும் சரி, என் குடும்பத்திலயும் சரி ஏதாவது மாற்று முடிவு எடுக்க யோசிப்பாங்களா....."

"எல்லாம் சரி தாங்க, ஆனா அதெல்லாம் தொழில் விஷயம்...இது கண்ணனோட தனிப்பட்ட வாழ்க்கை....சொந்தத்துல கல்யாணம் வேண்டாம்னு சொன்னான், சரினு சொல்லியாச்சு, வெளில கூட பொண்ணு பாக்க கூடத்துனா என்ன அர்த்தம்....இப்போவே வயசு முப்பதை தாண்ட போகுது, இதுக்கு மேலயும் கல்யாணத்த தள்ளி போடறது நல்லதில்லைங்க"

"சரி, அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லற"

"இத பத்தி நான் ராம்கிட்ட பேச போறேங்க, எப்பவும் கண்ணனோட நிழல் போல அவனோடவே இருக்கறது ராம் தானே, ராம் சொன்னா நிச்சயம் கண்ணா கேட்பான், இந்த வருஷமே கண்ணாவுக்கு கல்யாணம் நடக்கணும், இதுல எந்த மாற்றமும் இருக்க கூடாது"
தாய்மையின் கவலையும், பொறுப்பும் மனதில் வருத்திக்கொண்டிருக்க, தனது ஒரே மகனின் திருமணமே தன் மிச்சமுள்ள வாழ்வின் இலக்காக நினைத்துக்கொண்டு போராடி கொண்டிருக்கும் ரமாவை பார்க்க வேதனையாக தான் இருந்தது, இருந்தாலும் தான் செய்த தவறே தன் மகன் வாழ்க்கையின் இந்த திடமான முடிவுக்கு காரணமாயிருப்பதை அறிந்த தன்ராஜால் மகனை கண்டித்து பேசவோ இல்லை மகனோடு இதை பற்றி விவாதிக்கவோ குற்றவுணர்வு கொண்ட மனம் இடம் கொடுக்கவில்லை....

எழுதியவர் : இந்திராணி (2-Jan-17, 12:37 pm)
பார்வை : 613

மேலே