நூல் - 3 ஒரு பா ஒருப ஃது

நூல் - 3 ஒரு பா ஒருப ஃது .

காப்பு :-

கண்டேன் கனியமுதே கன்னல் சுவைதரும்
பெண்ணே எழிலுடைய பேசாத சித்திரமே
மண்ணே மதிமுகமே மாசற்றக் காதலால்
விண்ணே அழகே வியந்து .

நூல் - காதல் அழிவிலாக் கண் .

கண்களில் நாணுதல் கண்டேன் கனவிலும் .
உண்மையைச் சொல்லுமோ உன்றன் இதயமும்
கண்களா யென்னிதயம் காணா விடில்வாடிப்
புண்களாய்ப் போகும் பொழுது (1)

பொழுது விடிந்த பொழுது மனத்தால்
அழுது வடித்தேன் அகமுடைந் தாலும்
உழுது விதைத்தாயே உன்றன் முகத்தை
பழுது படாமல்நீ பார் (2)

பார்த்ததும் என்னுள் பனிபோல் குளிர்ச்சியால்.
ஈர்த்தது உன்விழி இன்பத்தால் என்னுயிரே
நான்வரும் தோற்றம் நலமுடன் தோன்றுதோ.
நோன்பிருக் கும்காதல் நோய் . (3)

நோய்க்கு மருந்தாக நோக்கிடலாம் வாருங்கள் .
காய்க்குக் கனிபோலக் காலமும் காத்திருக்கும் .
கண்ணின் பிழையா கவிமானே வெந்திருக்கும்
புண்ணில் மருந்திட்டுப் போ (4)

போனதுநீ தூரமாய்ப் பொல்லாப் பிரிவென்னை
வானமழைக் கண்ணீர் வடிக்கத்தான் வைத்தாயே
பானமேதும் நானும் பருகாமல் வாழுகின்ற
ஈனமதைக் காணும் இடத்து (5)

இடப்புறம் சக்திகொண்ட ஈசனுக்கும் காதல்
மடமையோ கண்கள் மனங்கள் புணர்தல்
தவறிலை யாயின் தனித்திருந்து நோதல்
சுவரிலாச் சித்திரமாய்ச் சொல் . (6)

சொல்லுதல் உய்க்குமோ சோகமது தீருமோ
மெல்லவே கொல்லுமென் மேனியில் நோயுமிங்கு
தூண்டிலில் சிக்கினாய் துன்பமோ ஆங்குனக்கு
மீண்டுவா என்னுயிர் மீன் . (7)

மீன்களும் கண்ணை மிரட்சியுடன் பார்க்குமோ
மான்களும் தோற்குமோ மங்கை நடைவேகம்
பின்னுமேன் சொல்ல பிழையிலா நம்காதல்
உன்னையே சுற்றும் உலகு . (8)

உலகில் தரிபடும் ஒவ்வொரு நாளும்
பலரின் விழிநோய்க்குப் பக்குவமாய்க் காத்து
உறவாய் நினைத்தே உருகினேன் யானும்
மறவா திருக்குமே மண் . (9)

மண்ணில் பிறந்தாய் மலரே எனக்கெனவே .
விண்ணில் பறந்தால் விடுவேன் எனநினைத்தாய்
சாதல் வரினும் சளைக்காமல் போராடும்
காதல் அழிவிலாக் கண் . (10)

ஆக்கம் :-

பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 2-Jan-17, 12:37 pm
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 40
Close (X)

0 (0)
  

மேலே