காத்திருந்த காலங்கள் 1

அது ஒரு அழகிய இயற்கை எழில் கொஞ்சும் ஓர் சிற்றூர். அந்த சிற்றூரில் அருகருகே இருக்கும் இரண்டு இல்லங்களின் இரு இள மனங்களைப்பற்றித்தான் நாம் காணப்போகிறோம். அந்த இரண்டு வீடும் ஒரே மாதிரி வடிவமைப்பில் கட்டப்பட்டவை. அந்த வீடுகளின் வண்ணங்களும் வாழும் மனிதர்களின் எண்ணங்களும் மாறியிருந்தாலும், ஒரு 15 வருடங்களுக்கு முன்புவரை அந்த இரண்டு வீட்டு மக்களும் ஒன்றான மகிழ்ச்சியாக இருந்தவர்கள்தான். காலத்தின் நியதியால் அந்த இரண்டு வீட்டு மக்களும் சண்டையிட்டு பிரிந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சிறு வயதில் இன்பமுடன் சுற்றித்திரிந்த அந்த ஒரு வீட்டில் உள்ள ஓர் ஆண் குழந்தையும் மற்றேர் வீட்டின் பெண்குழந்தையும் அவர்களின் சண்டையால் 15 வருடங்களாக பிரிந்தே ஒருவருக்கொருவர் பேசாமலேயே வாழ்ந்தனர். அவர்கள் இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களின் வீடுகளின் கட்டுப்பாட்டால் தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டாமல் நேரில் சந்திக்கும் போது போலியான வெறுப்புப் பார்வைகளைப்பறிமாறி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.
(இந்த கதையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெயரிடவில்லை. அவன் அவள் என்ற சொல்லாடலே அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும்…)

அந்த ஆணை அவன் பெற்றோர் அந்த சிற்றூருக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் படிக்க வைத்தனர். அவனும் இப்பொழுது இளமறிவியல் இயற்பியலில் பட்டம் பெற்று அங்கு உள்ள பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் படிப்பிற்கு விண்ணப்பித்து சேர்க்கைக்காகக் காத்திருந்தான். அந்த பெண்ணை அவளது பெற்றோர் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு மாநகரத்தில் விடுதியில் சேர்த்து அவளைப் படிக்கவைத்தனர். அவளும் இளமறிவியல் உயிர்த்தொழில் நுட்பவியலில் பட்டம்பெற்று அவளும் உயர் கல்வி படிப்பில் சேர காத்திருந்தாள். அவனும் இந்த நேரத்திற்குத்தான் காத்திருந்தான் எப்படியும் இந்த முறை அவள் மூன்று மாதமாவது அவள் வீட்டில் இருப்பாள். “அவளிடம் எப்டியும் பேசிவிட வேண்டும்” என்று எண்ணியிருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவளின் முகத்தினைக்கூட காணமுடியாமல் போனது. அவள் வெளியில் வரும் நேரங்களில் அவன் எங்காவது சென்றுவிடுகிறான். அவன் அவளைப்பார்க்க காத்திருக்கும் நேரங்களில் அவள் வீட்டைவிட்டு வெளியே வருவதேயில்லை. அவனுடைய இந்த காத்திருப்பு அவனுக்கு உணர்த்தியது இது நட்பிற்காக வந்த உணர்வில்லையென்று.

அவன் அவனுடைய வீட்டின் சுற்றுச் சுவரின் (அவளின் வீட்டினைப்பார்த்தவாறு) அருகில் பல வண்ண மலர்ச்செடிகளை நட்டு வைத்து வளர்த்தான். அவனுக்கொரு நம்பிக்கை அவள் அவனை பார்க்கவில்லையென்றாலும், எப்படியும் அவன் வளர்க்கும் மலர்ச்செடிகள் தரும் மலர்களையாவது பார்ப்பாளென்று. அவைகளுக்கு தண்ணீர் விடும் சாக்கில் அவளது வீட்டை நாள்தோறும் நோட்டமிடுவதுதான் காலையிலும் மாலையிலும் அவனது வேலை. அவ்வாறு ஓர் நாள் செடிகளுக்கு தண்ணீர் விடும் போது மலர்ச் செடிகளிடம் பேசிக்கொண்டிருந்தான்,

“மலர்ச் செடிகளே! நல்ல வண்ணமுள்ள மலர்களை அவளைக் கவரும் வண்ணம் மலர வையுங்கள். அப்பொழுதுதான் அவள் உங்களைப் பார்ப்பாள். உங்களைப் பார்க்கும்போது எப்படியும் நானும் அவள் கண்களுக்குத் தெரிவேன். அவளை என்னைப் பார்க்க வைச்சுட்டிங்கனா? உங்கள் மலரை அவளை நாள்தோறும் சூட வைக்கிறேன். இல்லையென்றால் இப்படியே மலர்ந்து மண்ணில் சருகாகி நீங்கள் வீணாகவேண்டியதுதான்.”
“ டேய் அங்க என்னடா தனியா பேசிக்கிட்டு இருக்க.” அவன் அம்மா.
“ஒண்ணும் இல்லம்மா. சும்மா…” அவன்.
“ டேய். என்னடா கொஞ்ச நாளா செடியா வாங்கி நட்டு வளர்க்குற. என்னா ஆச்சு உனக்கு” அவனது அம்மா.
“அம்மா. இல்லம்மா. என் நண்பன் கவின் அவன் வீட்டிலே இந்தமாதிரி செடி நட்டு வளர்க்குறான். அத பார்த்தா அழகா இருந்துச்சி. அதுதான் நானும் நட்டு வளர்க்கிறேன்”.
“அப்படியா! அவன் அம்மாவ நான் நேற்று பார்த்தேனே! அவன்கிட்ட அவங்க அம்மா கேட்டுருக்காங்க ‘நீ எதுக்கு செடி வளர்க்குற?’ னு அதுக்கு அவன் உன்ன காரணமா சொல்லிருக்கான்…. என்னடா நடக்குது?”.
“?????....”
அவன் அம்மா மனதுக்குள்…
“பக்கத்து வீட்டு பொண்ணு வேற வீட்ல இருக்குது. இவன் பண்ற வேலயெல்லாம் பார்த்தா இன்னொருமுறை அவங்க வீட்டோட சண்ட வரவச்சுடுவான் போல இருக்கே! பார்க்கலாம் என்ன செய்யுறானு...”
என்று சொல்லிவிட்டு அவன் அம்மா வீட்டுக்குள் சென்றுவிட இவன் “அப்பாடா தப்பிச்சோம்…” என்று எண்ணிக்கொண்டு தனது வேலையைத் தொடர்ந்துகொண்டிருந்தான். அந்த நேரம் ஒரு தெருநாய் அவன் வீட்டின் அருகில் உள்ள அவள் வீட்டின் நுழைவுவாயில் நின்று “உணவிடுவார்களா?” என்று காத்திருந்தது.
இந்த இரண்டையும் கவனித்த அவளின் அம்மா “ ஏம்மா என்ன இது! இந்த நாயி நம்ம வீட்டயே எப்பவும் நோட்டமிடுது?” என்று அவளிடன் வினவ.
அவளின் பதிலோ, “ அதான! நீ சோறு போடுவன்னு நினைச்சா அது நிக்குது? பாவம்!!!”
“அடியேய். உனக்கு கொழுப்பு அதிகம் டீ. உங்கப்பன் கொடுக்குற செல்லம்…” என்று கத்திக்கொண்டே வீட்டினுள் சென்றாள் அவள் அம்மா.
“அம்மா… செம… நீ கத்துற சத்தத்த கேட்டு அந்த நாயே தானா போய்டுச்சு…” அவள்.
“இல்லியே. அது போன மாதிரி தெரியலயே…” அவள் அம்மா.
இவர்களின் உரையாடலில் அவளது அம்மா தன்னைத்தான் சொல்கிறார் என்று அவனுக்குப்புரிந்தது. அந்த நேரத்தில் அவள்
“ அந்த நாய்தான் போய்டுச்சே! எந்த நாய சொல்றாங்க?” என்று வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அவன் அங்கே நின்றுகொண்டிருக்க அவளுக்கும் புரிந்துபோனது. அந்த நேரம் அவனைப் பார்த்து ஒரு நொடிக்கும் நிலைக்காத ஒரு புன்னகையை இவன் முன் உதிர்த்துவிட்டுச்சென்றாள்.
அவனுக்கு அதுவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை அவளின் அம்மா இரட்டைப் பொருளில் பேசியதெல்லாம் மறந்து போய்விட்டது. அவளிடம் தான் கண்ட புன்னகையைப் பற்றி அங்கிருக்கும் மலர்களிடம் விளக்கிக்கொண்டிருந்தான். இந்த புன்னகைக்குத்தானே அவன் இத்தனை நாட்களாய் காத்திருந்தான் அந்த மலர்ச்செடிகளுடன்…

அவன் கல்லூரி செல்லும் நாளும் வந்தது. இவனுக்கு அவள் எங்குபோய் மேல் படிப்பு படிப்பாள் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அவள் சிறப்பாகப்படிப்பவள். எப்படியும் அவனை விட்டு “மீண்டும் தொலைவில் சென்றுவிடுவாளோ?” என்ற அவனுக்குள் அச்சம் எட்டிப் பார்த்தது. அன்று தான் அவனது மூதறிவியல் படிப்பின் தொடக்க நாள். நேரமாய் எழுந்து மலர்செடிகளுக்கு தண்ணீர் விட்டு சிறிது நேரம் அவளது நினைவுகளை அந்த மலர்களுடன் பகர்ந்துவிட்டு பல்கலைக்கழகம் நோக்கிக் கிளம்பினான். அப்போது அவளது வீட்டில் அவளும் எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் வீட்டில் நடக்கும் உரையாடலை வைத்தே அவன் தெரிந்துகொண்டான்.

“ஒரு வேளை இன்று அவளும் எங்கோ வெளியே படிக்கச் சென்றுவிடுவாளோ?” என்ற வருத்தத்துடனே சென்றான் அவன் படிக்க வேண்டிய பல்கலைக்கழகம் நோக்கி. அன்று அவன் புதிதாய் பல நண்பர்களைச் சந்தித்தாலும் அவன் மனது என்னவோ அவளின் நினைவிலேயே வாடிப்போயிருந்தது.

மதியம் உணவு இடைவேளையில் உணவு உண்ணச் சென்றான். அங்கே கவனித்தான் அவள் ஒருசில பெண்களுடன் அமர்ந்து உணவகத்தில் உண்டுகொண்டிருந்தாள். அவனால் நம்பவே முடியவில்லை. தானும் உணவை வாங்கி அவர்கள் அருகிலேயே அமர்ந்து உண்டுகொண்டிருந்தான் அவள் பார்வைகளையும் சேர்த்து.

அதை கவனித்த அவள் சற்று கவனமாகவே பார்வைகளைச் செலுத்தினாள் அவள் பார்வை அவன் மீது படாதவாறு. ஆனால் அவளது மனதிலும் உள்ள ஆசையால் அவனை அவ்வப்போது பார்த்து இருந்த இன்பத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டாள். அவன் பார்ப்பதை உணரந்த அவளது தோழி அவளிடம் கூறினாள்,

“என்னப்பா. அந்த பையன் உன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான். யாரது…?”
அவள் சற்று சுதாரித்துக்கொண்டு, “ எங்க பக்கத்து வீடுதான். சும்மா தெரிஞ்ச பையன்தான்…”
“அப்ப சரி…” அவள் தோழி.

அவனுக்கு எப்படியாவது அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அவள் உண்டு முடித்து வெளியே வரும் நேரம் பார்த்து உணவகத்தின் வாசலில் காத்திருந்தான். அவளும் அவள் தோழிகள் ஐவரும் வெளியே வந்துகொண்டிருந்தனர். அவளுக்காக அவன் காத்திருப்பது அவளுக்குச் சற்று தயக்கத்தைக் கொடுத்ததால் தலையை குனிந்துகொண்டே அவனைக் கடந்தாள்.

அவள் கடக்கும் வரை அவள் பார்வைகளைச் சிறைபிடிக்க அவன் முயன்றுகொண்டிருந்தவன் தான் காத்திருந்த நோக்கத்தை ஏனோ மறந்தவிட்டான். அவள் கடந்த பின் சுய நினைவு பெற்றவன் அழைத்தான்… “ஏங்க….”

அவன் அழைத்ததும் அந்த ஐந்து பேரும் தங்களில் ஒருவளைத்தான் அழைக்கிறான் என்று உணர்ந்து நடையில் விரைவைக்கூட்டினர். ஆனால் அவளோ, அவளை அறியாமலேயே திரும்பிப்பார்த்தாள் மற்றவர்கள் முன்னோக்கி நடக்க. அவளது தோழிகள் தங்களுக்குள் சிரித்துக்கொண்டே “நீ நடத்து…” என்று கொஞ்சலாக அவளிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்று முன்னோக்கி நடந்தனர்.

அவள் தனது செயலுக்கு நாணி அவள் முகத்தல் புதியதோர் அழகை அணிந்திருந்தாள்… அவள் அருகில் வந்து பேசத்தொடங்கி அவளுடன் நடக்கத் தொடங்கினான்.
“ நல்லா இருக்கீங்களா?...” அவன்.
“ம்… நல்லா இருக்கேன்…” அவள். அவன் என்ன பேசுவது என்ற தெரியாமல் அமைதியாய் இருக்க.
“இத கேட்கத்தான் கூப்பிட்டாயா… சரி நான் கிளம்புறேன்…” அவள்.
“இல்ல… இருங்க… உன்கிட்ட பேசி 15 வருடம் ஆகுது… நீ இங்க வீட்டுக்கு வந்த பிறகு பேசலான்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனா வாய்ப்பு கிடைக்கல...” அவன்.
“ தெரியும்…” அவள். தெரிஞ்சிக்கிட்டுதான் இவ்வளவுநாள் நடிச்சியா என்று அவன் மனதில் நினைத்துக்கொண்டு பேசுவதைத் தொடர்ந்தான்.
“ஆமா நீங்கதான் நல்லா படிப்பீர்கள! உங்களுக்கு இதவிட நல்ல பல்பலைக்கழகத்தில இடம் கிடைச்சிருக்குமே. ஏன் இங்க வந்து சேர்ந்திங்க?”
“ ஏன் நான் இங்க இருக்கிறது புடிக்கலயா?...” அவள்.
“ஐயையோ… அப்படி இல்ல… சும்மா கேட்டேன்…” அவன்.

“எனக்கும் கிடைச்சது… ஆனா… நான் 10 வருடத்திற்கும் மேல நான் வெளியூர்லயே படிச்சதால இனிமேல் எங்க வீட்டிலேய இருந்துதான் படிக்கனும்னு அப்பா கண்டீப்பா சொல்லிட்டாரு. அதான் இங்க சேர்ந்துட்டேன். எனக்கு எப்படியும் சென்னைப்பல்கலைக் கழகத்துல கிடைச்சுடும். அதுக்கப்புறம் அப்பா மனச மாத்தி அங்கபோய் சேர்ந்திடுவேன்…” அவள்.

அவன் மனதுக்குள்…
“ தெய்வமே அவளுக்கு அங்க கிடைக்கக்கூடாது… அவள் இங்கதான் இருக்கனும்…”
“என்ன முணுமணுக்குற… எனக்கு அங்க இடம்… கிடைக்கக்கூடாதுன்னா…” அவள்…
அவன் மனதுக்குள், “எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ…”
“அப்படியெல்லாம் இல்ல… மீண்டும் நாம பிரிய போறமா?...” அவன்.
“நாம எப்ப சேர்ந்திருந்தோம் பிரிவதற்கு…” அவள்.
“ நாம சின்ன வயசில சேர்ந்து இருந்ததெல்லாம் எதுவும் உனக்கு நினைவில்லையா?” அவன்.
“எதுவும் நினைவில் இல்ல… சரி எனக்கு வகுப்புக்கு நேரம் ஆச்சு. நான் கிளம்பறேன்.” அவள்.

அவளின் பதிலால் அவன் சற்று மனமுடைந்துதான் போனான்… அவன் முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகள் படர்ந்திருந்ததை அவள் கவனித்தவள் அவனிடம் விடைபெற்று அவன் காணாத வகையில் புன்னகைத்துக்கொண்டே சென்றாள்…

அன்றைய வகுப்பு முடிந்ததும் அவன் அவளுடன் ஊர்வரை பேருந்தில் ஒன்றாக வர வேண்டும் என்று ஓடி வந்தவன். ஆனால் அவள் சென்ற பேருந்தை தவறவிட்டுவிட்டான். தன் ஊருக்குச் செல்லும் அடுத்தப் பேருந்தில் ஏறி அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்தான். அவனுக்கு முன் இருக்கையில் அவளது அப்பாவும் அந்த ஊரில் ஒருவரும் பேசிக்கொண்டிருந்தனர்…

“ஏம்பா… ஏன் உன் மகள இங்கேயே படிக்கச் சேர்த்துவிட்ட… வெளியூரில் எந்த இடமும் கிடைக்கலயா?”
“கிடைச்சுதுப்பா… எனக்கும் எங்க ஊட்டுக்காரிக்கும் ரொம்ப ஆசை… அவளை வெளில நல்ல இடமா படிக்க வைக்கணும்னு… சென்னையில கிடைச்சது… அந்த புள்ள அங்க போய் படிக்கமாட்டேங்குது…” அவள் அப்பா.
“ஏன்?” அவர் அருகில் உள்ளவர்.
“அவள் 10 ஆண்டுகளா வெளிலயே இருந்துபடிச்சதால, இந்த இரண்டு ஆண்டாவது எங்களோட இருக்கணும்னு ஆசைப்படுறா. அதான் இங்கயே சேர்ந்துட்டா….” அவள் அப்பா…
“அடிப் பாவி… என்கிட்ட என்னாமா பொய் பேசிருக்கா…கள்ளி...” அவன் மனதுக்குள்.
“சேர்க்கைக்கு கடைசிநாள் முடிய இன்னும் நாள் இருக்கு… அதுக்குள்ள அவ மனச மாத்தி அவள்
அங்க அனுப்பிடுவேன்… பார்க்கலாம்..” அவள் அப்பா.
“அட… மாமா… எனக்கு வேட்டு வைக்கப்பார்க்குறியே…” அவன் மனதுக்குள்.

“ பாவம்பா அந்த பொண்ணு. எப்படியும் இன்னும் ஒரு சில வருடத்துல கல்லாணம் செஞ்சி கொடுத்துற போற. அது வரைக்கும் உங்க வீட்டுல இருக்கட்டுமே! அந்த புள்ளைக்கும் ஆச இருக்காதா… ஒரே ஒரு பொண்ணுதான உனக்கு… இல்லனா ஒன்னு பண்ணு நம்ம ஊருக்கு பக்கத்திலேயே நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டிவச்சிடு...” அவர் அருகில் உள்ளவர்.
“தங்கமான மனிதன்யா நீ…” அவன் மனதுக்குள்.
“நம்ம ஊருக்கு பக்கத்திலயா… (சற்று அழுத்தமாக) நம்ம ஊரு பக்கத்துல இருக்குறதெல்லாம் உருப்படாம போன வீணாண பசங்கதான்… நான் வெளி நாட்டுமாப்பிள்ளைதான் பார்ப்பேன்...” அவள் அப்பா.
அவன் எதையும் கேட்காதவன்போல் மனதில் நினைத்துக்கொண்டான்

“ எனக்கு முதல் எதிரி நீங்கதான் போல… அவள் எப்படியும் நமக்காகத்தான் இங்க சேர்ந்திருக்கா… அவள் பார்வை ஒரு சில நேரங்கள்ல நம்ம விரும்புற மாதிரி இருக்கு ஒரு சில நேரங்களில் வெறுக்குற மாதிரி இருக்கு… அவள புரிஞ்சுக்கவே முடியலயே… நாளைக்கு அவளிடம் தெளிவா நம்ம எண்ணத்தை சொல்லிடலாம்...” என்று தீர்மானம் செய்துகொண்டான்.

அடுத்தநாள் அவன் பல்கலைக்கழகம் செல்லும்முன் அந்த மலர்ச்செடிகளிடம் அவளிடம் பேசப்போவதை பேசிப்பார்த்து ஒத்திகைப்பார்த்தான். அப்பொழுது அவன் கவனித்தான். அங்கு முதல் முறையாக மஞ்சள் நிற ரோஜா வை அங்கிருந்த செடி மலர வைத்திருந்தது. அந்த மலர் என்னவோ அவளுக்காகவே மலர்ந்தது போல் தோன்றியது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது பல்கலைக்கழகம் நோக்கிச் சென்றான்.

அவள் சற்றுத் தாமதமாகவே பல்கலைக்கழகம் செல்ல ஆயத்தமானாள். அவள் வீட்டின் வெளியே வந்து அவள் தங்கள் வீட்டு மலர்த்தோட்டத்தை நோக்கினாள் “எந்த மலரைச்சூடலாம்” என்று. ஆனால் அவளுடைய தோட்டத்தில் உள்ள மலர்ச்செடிகளெல்லாம் மொட்டுகளை மட்டுமே ஈன்றிருக்க ஏமாற்றமுடன் திரும்பினாள். அவள் கண்ணுக்கு அவன் வீட்டுத்தோட்டத்தில் மலர்கள் பல மலர்ந்து அவளை நோக்கிப்பார்த்திருந்தன. அவன் வளர்த்த மலர்கள் அல்லவா?

அங்கிருக்கும் மலர்செடிகளெல்லாம் காற்றில் அசைவது “எந்தன் மலர்களைச் சூடிக்கொள்...” என்று போட்டி போடுவது போல் அவளுக்குத் தோன்றியது. அதில் இன்று புதிதாய்ப் பூத்த அவனுக்கு இன்று பிடித்த மஞ்சள் ரோஜா அவளை மிகவும் கவர்ந்தது. மெல்ல அந்த சுற்றுச் சுவரின் அருகில் வந்தவள் அந்த மஞ்சள் ரோஜாவை தனது கைப்பேசியில் படம் பிடித்து அதன் அழகையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் சூட முடியாது என்பதால் ஏமாற்றத்தில் முகம் வாடி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நகரத்தொடங்கினாள்.

அப்போது அங்கே “ஏம்மா! கொஞ்சம் நில்லு.” அவன் அம்மா.

அவளும் நின்று திரும்பினாள். எவ்வளவோ நாள் கழித்து தன்னை எடுத்து வளர்த்தவர்களுள் ஒருவர் அழைத்தது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவர்கள் குடும்ப சண்டைகளை மனதில் வைத்து அவள் அவன் அம்மாவிடம் பேசாமல் தயக்கத்துடன் நின்றாள்.
“ இதுல எந்த பூ வேணும்… எவ்வளவு பூ வேணுமோ! அவ்வளவையும் எடுத்துக்கோ…” அவன் அம்மா.
அவளிடமான தயக்கம் இன்னும் அவளைவிட்டு போகவில்லை.

“ எடுத்துக்கோமா… பரவால... உங்கம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க… நான் எடுத்து வளர்த்த பெண்மா நீ… உன் முகத்த என்னால ஏமாற்றமா பார்க்க முடியல… பெரியவங்களுக்குள்ள இருக்கும் சண்டை எங்களுக்குள்ளேயே இருக்கட்டும்… அது உங்களுக்கு வேண்டாம்… இந்தா உனக்குப் பிடித்த இந்த மலர்களை நீ வச்சுக்கோ…” அவன் அம்மா.

என்று அவள் அந்த மஞ்சள் ரோஜாவுடன் இன்னுமொரு ரோஜா மலரைப் பறித்துத் தந்தாள் அவனது தாய். அவளும் அதை எடுத்து மகிழ்ச்சியோடு சூடிக்கொண்டாள்… அந்த மலர்களும் அவள் கூந்தலில் அழகாகக் குடியேறியது… அவள் கண்களால் நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டாள்.

அங்கிருந்த மலர்ச்செடிகளெல்லாம் இத்தனை நாள் அவன் எதற்காக் காத்திருந்தானோ அது நிறைவேறிய மகிழ்ச்சியல் தலையசைத்துக்கொண்டிருக்க, அவள் கூந்தலில் ஏறிய மலர்களைப் பார்த்து செடிகளில் இருந்த மற்ற மலர்களெல்லாம் மணம் வீசி வழியனுப்பி வைத்தன.

அவன் பல்கலைக்கழகத்தில் அவளது வருகைக்காகக் காத்திருந்தான். நிறைய பெண்கள் இவன் முன் சென்றுகொண்டிருக்க அவனுக்கு அடையாளம் காட்டியது அந்த மஞ்சள் ரோஜா “உனக்கானவள் இவள்தானென்று…”. அவனும் விரைந்து அவள் அருகே சென்றான். அவளின் அருகில் மூச்சிரைக்கச் சென்று அவளிடம் பேசத்தொங்கினான்.

“ஏங்க நீங்க வச்சியிருக்கும் இந்த ரோஜா என் வீட்டுத்தோட்டத்தில் இருந்ததுதானே?” அவன்.
“இல்லை.” அவள்.
“ நல்லாத் தெரியும். இந்த மஞ்சள் மலர் எங்க வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்ததுதான்.” அவன்.
“ உங்கள் வீட்டில்தான மஞ்சள் மலர் மலருமா என்ன? செடி இருக்குற எல்லா வீட்டிலேயும் மலரும்… இப்ப எதுக்கு என்ன தொல்ல பண்ற. எல்லோரும் நம்மள பார்க்குறாங்க அமைதியாப் போ...” அவள்.
“நான் உன்கிட்ட பேசனும். என்கிட்ட எதுக்கு இப்ப வெறுப்பா பேசுற. என்கிட்ட எதுக்கு பொய் சொன்ன நேற்று.” அவன்.
“ என்ன பொய் சொன்னேன்?” அவள்.
“உங்க அப்பாதான் உன்ன இங்க நம்ம ஊர்லயே படிக்கச் சொன்னாருன்னு. ஆனா அவரு உன்ன வெளியூர்ல படிக்க வைக்கத்தான் விரும்பினார். நீதான அடம் பிடிச்சு இங்கேயே படிக்குறேன்னு அவர்கிட்ட சொன்ன.” அவன்.
“ஆமா… அதுக்கென்ன இப்ப. உன்கிட்ட உண்மைய சொல்லணும்னு அவசியம் எனக்கு இல்ல.” அவள்.
“ உண்மையச் சொல்லு! நீ எனக்காகத்தான இங்க படிக்கச் சேர்ந்த?” அவன்.
“ உனக்கென்ன பைத்தியமா? நான் எதுக்கு உனக்காகச் சேரப்போறேன். மிகுதியா கற்பனை பண்ணிக்காத...” அவள்.
“சரி முடிவா கேட்குறேன்… என்னைய பிடிக்குமா பிடிக்காதா…” அவன்.
“பிடிக்காது…” அவள்.
“ அப்புறம் என்னைய பிடிக்காமத்தான் நான் வளர்த்த மலர்ச்செடியிலிருந்த மலரை வைச்சுக்கிட்டு வந்தியா?” அவன்.

“ ஏய்! இப்ப என்ன இந்த பூ தான் உனக்குப் பிரச்சினையா? இந்தா வச்சுக்கோ ஆள விடு… இனிமேல் என்கிட்ட வந்து பேசுற வேலைய வச்சுக்காத… நான் இன்னும் கொஞ்ச நாள்ல சென்னையே போய்டுவேன்… உனக்காக நான் இங்கில்ல அத புரிஞ்சுக்கோ...” அவள்.
என்று சொல்லிவிட்டு தன் கூந்தலில் இருந்த மலர்களை எல்லோரும் தன்னைப் பார்க்கிறார்கள் என்ற சினத்துடன் தூக்கி எறிந்துவிட்டு அவளின் துறையை நோக்கி நடந்தாள்.

அவன் அவள் செல்லும் திசையையே நோக்கிக்கொண்டிருந்தான். பின் அவள் தூக்கி எறிந்த ரோஜாவை எடுத்து அவளின் செயலுக்காக அவைகளிடம் பொறுத்துக்கொள்ளச்சொல்லி வேண்டிக்கொண்டான். அவைகள் அவனிடம் மணந்துகொண்டே சொல்லின நாங்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் இன்று நிறைவேறிவிட்டது என்று.

அவளும் சிறிது தொலைவு சென்றவள் சிந்தித்தாள் தனது சினம் எவ்வளவு மோசமானது என்று. அவள் தனது மனசாட்சியிடம் இவ்வாறு பேசிக்கொண்டாள்,
“அவன் சொல்லிய அனைத்தும் உண்மைதான். அதை ஏன் உன் மனது அவனிம் ஒத்துக்கொள்ள தயங்குகிறது? உனக்குள்ள இருக்குற உணர்வ நீயும் அவனிடம் போய் சொல்லமாட்ட! அவனா வந்து சொன்னாலும் திட்டி அனுப்புற. அவனுக்காகத்தானே இத்தனை நாளா காத்திருந்து வீட்டில் அடம்பிடித்து இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்த! அப்புறம் ஏன் அவனிடம் இப்படி நடந்துக்குற?”

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவனும் அவளிடம் பேச முயற்சிக்கவில்ல. விருப்பமில்லாத அன்பை துன்புறுத்திப்பெறுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. அவனது வேலையை மட்டும் பார்க்கத்தொடங்கினான். அவளுக்கும் அவனது செய்கை வியப்பாகத்தானிருந்தது. எப்படியோ அவனே வந்து அவளிடம் பேசுவாள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள். அவன் இவளை கண்டுகொள்ளமாட்டான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவன் என்னதான் அவளைத்தவிர்த்தாலும் அவளுக்காக அந்த தோட்டத்தில் உள்ள மலர்ச்செடிகளை இன்றும் வளர்த்துவந்தான்.

நாட்கள் இப்படி ஓடிக்கொண்டிருக்க ஓருநாள் மாலை, பல்கலைக்கழக பேருந்து நிறுத்த நிழற்கூடத்தில் அவள், அவள் தோழியுடன் நின்றுகொண்டிந்தாள். அங்கு ஒரு சிலரும் நின்றுகொண்டிருந்தனர். அவனும் அங்கு அப்பொழுது வந்து சேர்ந்தவன் நிழற்கூடத்தின் உள்ளிருந்த அவளைக் கவனிக்கத்தவறிவிட்டான். அந்த நேரம் அவனுக்கு எதிரே ஓர் இள வயதுப்பெண் ஒரு சில முறை இவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதைக்கவனித்தவன் அவனும் அந்த பார்வையை உள்வாங்கி இரசித்துக்கொண்டிருந்தான். இவன் அந்த பெண்ணை நோக்குவதில் ஆர்வமாய் இருந்த நேரம் அவன்பின் வந்து ஓர் கல் தாக்கியது.

திடுக்கென்று திரும்பிப்பார்த்தான். பின்னால் அவளும் அவள் தோழியும் அவனுக்குத்தெரியாத ஒரு சிலரும் மட்டுமே நின்றுகொண்டிருக்க, யார் இந்த கல்லை எய்திருப்பார்கள்? என்ற சந்தேகம் அவனுக்கு வலுத்தது. அவனுடைய நண்பர்களும் யாரும் அவன் அருகில் இல்லை. அவன் அவள்தான் எய்திருபப்பாள் என்று ஊகம் செய்தாலும் அவளிடம் கேட்க அவனுக்கு அச்சமாக இருந்தது. அவன் மீண்டும் அந்த எதிரே இருந்த பெண்ணை மீண்டும் பார்க்கத் தொடங்கினான்.

மீண்டும் ஒரு கல் அவனைத் தாக்கியது. இந்த முறை திரும்பிப்பார்த்து அவளையும் அவள் தோழியையும் முறைத்துப்பார்த்தான். அந்தக் கல் ஏன் அவனைத்தாக்குகிறது என்ற காரணத்தை அவன் ஊகம் செய்துகொண்டான். ஆனால் அவர்கள் (பெண்கள்) இங்கு நடக்கும் எதையும் கண்டுகொள்ளாதவர்கள் மாதிரி நின்றிருந்தனர். அடுத்தமுறை அவளைக் கையும்களவுமாகப் பிடித்துவிட வேண்டும் என காத்திருந்தான்.

இந்த முறை வேண்டுமென்றே அந்த பெண்ணை நோக்கத்தொடங்கினான். அவள் கல்லை எடுத்து ஓங்கும் நேரத்திற்கும் அவன் திரும்பிய நேரத்திற்கும் மிகப்பொருத்தமாக அமைந்தது. அவள் ஓங்கியக்கல்லை அவன்மீது எறிந்திருந்தால் கூட அவனுக்கு வலித்திருக்காது. தன் கள்ளத்தனத்தை அவன் கண்டதால் வெட்கத்துடன் புன்னகைத்து முத்துக்களை அவன் மீது சிதற விட்டுவிட்டாள். இப்பொழுது விழிகளால் இருவரும் பேசிக்கொண்டனர்.

அவளும் எத்தனை நாள்தான் பொய்யாகவே நடிப்பாள். அவளது உண்மையான அன்பை அவள் புன்னகையிலேயே நாணத்துடன் அவனுக்குக் காட்டிவிட்டாள். அவனும் அந்த பார்வையின் வீச்சை உணர்ந்தவனாய் அவள் அருகில் மெல்ல நகர அவளும் இவனைவிட்டு விலகி நகரத்தொடங்கினாள். அவன் மேலும் முன்னேறிக்கொண்டிருக்க, அவள் வெட்கத்துடன் அந்த நிழற்கூடத்தின் சுவற்றில் சாய்ந்தவள், அவனையும் மனதளவில் சாய்த்தேவிட்டாள். அவன் அருகில் நெருங்கிவரவும் அவர்கள் ஊரின் பேருந்து வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

எப்படியோ அவனது தாக்குதலில் இருந்து தப்ப மனமில்லாமல் தப்பியவள், அவள் தோழியுடன் பேருந்தின் முன் படியில் ஏறி பேருந்தில் நுழைந்து உள்ளே சென்றாள். அவனும் பின் படியில் ஏறி அவளை நோக்கி முன்னேறிச்சென்றான். அதைக்கண்ட அவள் கண்களை அவள் அப்பா இருக்கும் இருக்கையை நோக்கித்திருப்பிக்கொண்டாள். அவன் அதைக்கவனித்தவன் வந்த விரைவிலேயே பின்நோக்கி நகரத்தொடங்கினான்.

அவன் கால்கள் பின்னோக்கி நகரத்தொடங்கியதேத்தவிர அவன் கண்கள் அவளின் கண்களை நோக்கி முன்னேறியேச் சென்றுகொண்டிருந்தது. அவளும் கள்ளத்தனமாய் அவற்றை இரசித்துக்கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் அந்த பேருந்தில் இசைஞானியின் பாடலான “சாமிக்கிட்ட சொல்லிவச்சி...” ல்
“கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே… பூவோடு வரும் காற்றாக நீ சேரத்தெளிந்தேனே…” என்ற வரிகள் ஒலித்துக்கொண்டிருக்க, அவர்கள் இருவரும் தங்களின் நினைவுகளை அந்த பாடலில் ஒன்றிணைத்து இதுவரை தாங்கள் காத்திருந்த காலங்களையும் இனிமேல் காதல் செய்யப்போகும் காலங்களையும் எண்ணி பயணித்துக்கொண்டிருந்தனர்.

இவர்களின் காதலை மீண்டும் இரண்டாம் பாகத்தில் தொடர்கிறேன்….

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (2-Jan-17, 2:52 pm)
பார்வை : 520

மேலே