சிறுகதை சுகமான சுமைகள்

சிறுகதை
சுகமான சுமைகள் !

விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் ஒன்பது அடித்து ஓய்ந்தது. வீடு அமைதியாக இருந்தது. ஹாலில், எப்போதும் கலகலப்பாகப் பேசித் திரியும் பாரதி, அன்று வீட்டின் அறையில் உள்ளே அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். அவளுடைய பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவர்களுக்கு வருத்தமாகவும், அதே நேரத்தில் அவர்களுக்குப் புதிராகவும் இருந்தது.

அவள் அண்ணன் சிதம்பரம் கல்லூரிக்குச் செல்வதற்கு ஆயத்தமானான். அப்போது அம்மா, அவனை வழிமறித்து “சிதம்பரம், என்னடா நீ இப்படி பிடிவாதம் பிடிக்கிறே , உன்னோட தங்கை பாரதியைப் பெண் பார்க்க இன்னிக்கி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்கடா! நீதான் குடும்பத்துக்கு மூத்த பிள்ளை, வீட்டிலே பொறுப்பாக இருந்து எல்லாம் கவனிக்க வேண்டாமா ? இன்னிக்கி ஒருநாள் மட்டும் இருடா.. நாளைக்கு நீ காலேஜ்க்குப் போவதைப் பத்தி பேசிக்கலாம்“ என்ற அம்மாவிற்கு எவ்விதமான பதிலும் கூறாமல் அவன் அலட்சியமாக, அம்மாவின் கையைத் தட்டி விட்டுச் சென்று விட்டான்.

அவன் கோபமாகச் செல்வதைப் பார்த்துவிட்டு, சிதம்பரத்தின் பெரியப்பாவும் பெரியம்மாவும் அவள் அம்மாவின் அருகில் சென்று “ சிதம்பரம் ஏன் இப்படி ஒண்ணுமே பதில் சொல்லாமல், உனக்கும் எந்தவித பதிலும் பேசாமல் கோபமாகப் போரான். பாரதியும் ஒண்ணுமே பேசாமல் அவளும் உட்கார்ந்த இடத்திலேயே யாரிடமும் பேசாமல் அவள் அமைதியாக, எதையோ பறிக்கொடுத்தவள் போல் இருக்காள். என்ன விஷயம்” என்று கேட்டனர்.

அவர்கள் அம்மாவை நோக்கி அப்படிக் கேட்டவுடன், அவள் அம்மா தன் தலையில் இரு கைகளினாலும் அடித்துக் கொண்டு “ எல்லாம் என்னோட தலைவிதி, என்னை அந்த மனுஷன் தவிக்க விட்டு விட்டு குடும்பப் பாரத்தை என் தலையிலே கட்டி விட்டு , அவர் நிம்மதியாக போய் சேர்ந்துட்டார் நான்தான் இவங்களோட இப்படி எல்லாம் அல்லாட வேண்டிருக்கு..” என இறந்துபோன அப்பாவைப் பற்றிக் கூறி புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

அம்மா, தன் இயலாமையை பெரியப்பா பெரியம்மாவிடம் புலம்பியதைக், கேட்டு, பாரதிக்கு அம்மாவிற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை, அவள் பள்ளிகூட்டத்தில் படித்துக் கொண்டு இருக்கும்போது. பாரதியிடம் அவள் அம்மா, தாத்தாவின் பெரியகுடும்பத்தைப் பற்றியும் அப்பா அதற்கு எப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டு உழைத்தார் என்பதைப் பற்றியும் கூறியதை எல்லாம் ,இப்போது பாரதி நினைத்துப் பார்த்தாள்.

அம்மா புலம்புவதிலும் அர்த்தம் இருந்தது. அப்பாதான் தாத்தாவின் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக இருந்தார். அவருக்குக் கீழ் மூன்றும் பெண் குழந்தைகள். அப்பா, அப்போது தாத்தாவின் குடும்ப சூழ்நிலையை அறிந்துகொண்டு, அவர் பள்ளிப் படிப்பை முடித்ததும், மேலே படிக்காமல் , ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். அவர் வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலே , தாத்தாவும் திடீரென்று இறந்து விட்டார். எனவே தாத்தாவின் வீட்டுக் குடும்பப்பாரம் முழுவதும், காலத்தின் கட்டாயம்தான் என்று கூறவேண்டும் அப்பாவின் தோளில் தவிர்க்க முடியாமல் ஏற்றப்பட்டது. அப்பாவும் தன்னோட இளமைக்காலக் கனவுகள், ஆடம்பரமான ஆசைகளுக்கெல்லாம், முற்றுப்புள்ளி வைத்து விட்டு, பாட்டியின் வற்புறுத்தலுக்காக மட்டும் அம்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.

முதலில் அப்பாவுக்கு அண்ணன் சிதம்பரம் பிறந்தவுடன், தனக்குப்பின் தனது குடும்பத்தை கவனித்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் அப்பா அப்போது மிகவும் மகிழ்ந்தார் என்பதை அம்மா கூறக் கேட்டு இருக்கிறாள். பிறகு பாரதி பிறந்தாள்.

அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில்தான் வேலை பார்த்து குடும்பத்தை எளியமுறையில்தான் நடத்தி வந்தார். அப்பாவின் சம்பளமும், இதர வருமானமும் தன்குடும்பத்தை நடத்திச் செல்லவும், அவருடைய மூன்று தங்கைகளையும் கரையேற்றவே முடிந்தது. அம்மாவும் பொறுமையாக அப்பாவை அவர் இருக்கும் குடும்பபாரத்தின் சூழ்நிலையை உணர்ந்துகொண்டதால், அப்பாவை அனுசரித்தே அம்மாவும் நடந்து கொண்டாள் என்றுதான் கூறவேண்டும்.

அண்ணன் சிதம்பரத்தை மட்டும் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை மூலம்
பி. இ. படிப்பதற்கு கல்லூரியில் சேர்த்து விட்டார். அவளுடைய பெரியப்பா பெரியம்மா உதவியுடன், பாரதி கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தாள். பி.எஸ்ஸி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். சிதம்பரம் பி.இ. இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும்போதுதான் அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

அப்பா அவருடைய உடம்பைக் கவனிக்காமல் அல்லும் பகலும் கம்பெனிக்காக உழைத்தார். கம்பெனியிலிருந்து வேலை விட்டு வரும்போதே ,ஒரு நாள் நெஞ்சு வலி என வீட்டிற்கு வந்து படுத்தவர்தான்.,அப்பா மீண்டும் எழாமலே இறந்து விட்டார். அப்பா இறந்ததினால் பாரதி மிகவும் வருத்தப்பட்டாள்.

ஆனால் சிதம்பரத்திற்கு அவன் அப்பா இறந்ததைக் கண்டு வருத்தத்தை விட அவர் மீது அவனுக்கு வேண்டாவெறுப்பாகவும் கோபமாகத்தான் இருந்தது. அவன் தொடர்ந்து கல்லூரியில் பி.இ. படிப்பு படிக்க முடியாதே என்ற கவலைதான் காரணம் என்பதை அவன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களிடம் பேசியதிலிருந்து பாரதிக்குத் தெரிய வந்தது. பாரதிக்கும் சிதம்பரத்திற்கும் இயல்பாகவே படிப்பு நன்றாகவே வந்தது.

சிதம்பரம் அவன் படிக்கும் கல்லூரியில் நடைபெற்ற காம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகியிருப்பதைப் பார்த்து, அப்போது உயிருடன் இருந்த அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தன் குடும்ப பாரத்தை தனக்குப்பின் குடும்பத்தையும் தன்னையும் நன்கு கவனித்துக் கொள்வான் என்று தன்னுடன் கம்பெனியில் பணிபுரியும் நண்பர்களிடமெல்லாம் பெருமையுடன் அடிக்கடி சிதம்பரத்தைப் பற்றி கூறுவதை பாரதி கேட்டு இருக்கிறாள். அம்மாவும் அப்பாவைப்போல உறுதியாக அண்ணன் சிதம்பரத்தை முழுமையாக நம்பியிருந்தாள்.
அம்மாவும் அப்பாவைப் போல் நம்பிக்கையுடன்தான் இருந்தாள். நாம் ஓன்று நினைக்க தெய்வம் ஓன்று நினைத்தது என்பது போல் அப்பாவின் வாழ்வில் விதி விளையாடியது. அப்பா திடீரென நெஞ்சுவலியில் இறந்தவுடன், அம்மாவும் நம்பிக்கை இழந்து. விட்டார். சிதம்பரம் இன்னும் பத்து மாதங்கள் கல்லூரியில் படிக்க வேண்டும். ஆனால் அண்ணன் சிதம்பரம் சுய நலத்துடன் எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் இருந்தான்.

அப்பா இறந்தவுடன் அவர் வேலை பார்த்த கம்பெனி முதலாளி வந்து , அப்பா படத்திற்கு தான் கொண்டுவந்த ரோஜா மாலையைப் போட்டார். அப்போது அம்மா புடவை முந்தியால் முகத்தை மூடிக் கொண்டு துக்கம் தாளாமல் அவர் முன்னால் விம்மி விம்மி அழுதாள். அவர் அம்மாவிற்கு ஆறுதல் கூறி விட்டு, அப்பாவின் இடைவிடாத உழைப்புக்காக ஒரு கணிசமான தொகையையும் அம்மாவின் கையில் கொடுத்து விட்டுத்தான் சென்றார்.

அப்பாவும் தாத்தாவைப்போல் குடும்பத்திற்கு என்று ஏதும் சேர்த்து வைக்கவில்லை. குடும்பத் தலைவர் இறந்து விட்டால் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் உள்ளவர்கள், அனைவரும் குடும்பத் தலைவரோடு, அவர்களோட சந்தோசத்தையும் சேர்த்தே இழக்க வேண்டியுள்ளதே என பாரதி நினைத்து அப்போது தங்கள் குடும்ப நிலையை நினைத்து வருந்தினாள்.

அப்பாவின் முதலாளி கொடுத்தத் தொகையில் பாரதிக்கு ஐந்து சவரன் நகைதான் வாங்க முடிந்தது. பெரியப்பாவும் பெரியம்மாவும் பாரதியின் திருமணச் செலவை ஏற்றுக்கொள்ள முன் வந்தனர்.

பாரதி மிகவும் அழகாகவும், அறிவுள்ளவாகவும் இருந்தாள். அவள் தன்னை மேலும் அழகுபடுத்தி கொள்ளவோ, தன்னை மற்றவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று எப்போதும் அவள் நினைத்ததில்லை அவளைப் பற்றி நன்கு விசாரித்த பின்தான் இன்று பெண்பார்க்கவே வருவதாக மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் தெரிவித்திருந்தனர்

நேற்று இரவு முழுவதும் பாரதியின் திருமணம் குறித்துத்தான் அம்மாவுக்கும் அவள் அண்ணன் சிதம்பரத்துக்கும் வாக்குவாதம். அம்மா சிதம்பரத்தைப் பார்த்து “ டேய் சிதம்பரம் அப்பா வேலைபார்த்த கம்பெனி முதலாளியைப் போய் பார். அவர் உனக்கு வேலை போட்டுத் தருவார். இப்போதைக்கு நீ படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போ. பாரதி கல்யாணம் முடிஞ்ச பிறகு வசதிபட்டால் நீ விட்ட படிப்பை தொடரலாம். “ என்று அழாத குறையாகக் கூறினாள்.

அண்ணன் சிதம்பரம் அம்மாவிடம் “ படிப்பை என்னால் நிறுத்தவோ வேலைக்க்கு போகவோ இப்போதைக்கு முடியாது அம்மா. என்னோட படிப்பு பாழாய் போய்விடும். “ என மீண்டும் மீண்டும் அம்மாவிடம் வாதாடினான்.

பெரியப்பாவும் அண்ணனைப் பார்த்து “ சிதம்பரம் நம்ம குடும்ப நெலமை தெரியாமல் பேசாதே ! முதலாளி கொடுத்த பணம் பாரதிக்கு கொஞ்சம் நகை மட்டும்தான் வாங்க முடியும்.. குடும்ப செலவுக்கு, உன் அம்மா என்ன பண்ணுவா ! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வேற வராங்க யோசித்து பார் “ என்றார்.

சிதம்பரம் பெரியம்மாவைப் பார்த்து “ பெரியம்ம்மா நீங்களாவது அம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் புரியும்படியாக எடுத்துச் சொல்லுங்க. நான் காலேஜ்லே கேம்பசில் செலக்ட் ஆகி விட்டாதாலே, இன்னும் ஆறு மாதத்தில் படிப்பை முடிச்சிட்டால் வேலையில சேர்ந்து விடலாம். படிப்பு முடியும் வரையில் கடன் வாங்க வேண்டியதுதான் “ என்று அலட்சியமாக பதில் கூறினான்.

பெரியப்பா சற்று உரக்கவே “ படிப்பு முடிந்தவுடன் உன்னை வேலையில் உடனே சேர்த்துக் கொள்வான் என்பதை, எப்படி நம்புவது. அது வரைக்கும் நம்ம குடும்ப செலவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது...” என கேட்டார்.

அம்மா மீண்டும் அண்ணனைப் பார்த்து “ சிதம்பரம் நல்ல யோசித்து பேசுப்பா. நாளைக்கு பாரதியை பெண் பார்க்க வர்றாங்க . இது நல்ல இடமாக இருக்கு. நல்ல வரனைத் தவற விட்டால், பிறகு இப்படி நல்ல வரன் அமைவது கஷ்ட்டம். உன் தங்கை பாரதியின் கல்யாணத்தை, நீதான் அண்ணன் என்ற முறையில் பொறுப்பாக நடத்தணும். அதை விட்டு விட்டு இப்படிப் பொறுப்பில்லாமல் பேசுறேயே “ என்று வருத்தப்பட்டார்.

பாரதி எல்லாவற்றையும் அமைதியாக கவனித்தும் கேட்டும கொண்டிருந்தாள். அவள் தனக்குத்தானே இப்போது திருமணம் அவசியம் வேண்டுமா ? எனவும் யோசிக்க ஆரம்பித்தாள். அதேசமயம் ‘நல்ல வரனை தவற விட்டு விடக்கூடாதே’ என அம்மா ஆதங்கப்படுவதிலும் அர்த்தம் இருக்கிறது. அண்ணன் மீதும் தப்பு இல்லை. படித்து நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று அவன் ஆசைப்படுவதிலும் அர்த்தம் இருக்கிறது.

பாரதி மீண்டும் மீண்டும் சிந்தித்தாள். அவள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். அதில் தனது குடும்பமும் பாதிக்கக் கூடாது. அதாவது அம்மாவையும் சந்தோசப்படுத்த வேண்டும். அதேசமயம் அண்ணனையும் சந்தோசப்படுத்தவேண்டும். பாரதி நல்ல முடிவை உடனடியாகவும் உறுதியாகவும் எடுத்து வெளிப்படுத்த வேண்டும் என நினைத்து அவள் பெரியப்பாவிடம் “பெரியப்பா ! அண்ணன் விரும்பியபடி, அவன் படிப்பைத் தொடரட்டும். என்னோட கல்யாணத்தை அப்பறம் பார்த்துக்கலாம். நான் அண்ணனுக்குப் பதிலாக வேலைக்குப் போறேன் “ என்றாள்.

“ என்னம்மா பாரதி ! இப்படி சொல்றே, நல்ல வரனாக இருக்கு. தட்டிப் போகக் கூடாதுன்னு நான் பார்க்கறேன் “ என்று கூறும்போது அம்மாவுக்கு அழுகையே வந்து விட்டது.

“ அம்மா எதற்காக அழறே ! என்னைப் பெண் பார்க்க வர்றவங்க, எனக்கு என்னமோ அவங்க நல்லவர்களாகவே தெரியுது. நமது குடும்ப சூழ்நிலையை அவங்ககிட்ட எடுத்துக் கூறினால், ஒரு வருஷம் கழித்து கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்றால், நிச்சயம் அவங்க சம்மதிப்பாங்க. நம்பும்மா ! நம்பிக்கைதான் வாழ்க்கையம்மா ! “ என பாரதி எடுத்துக் கூறினாள்.

“அண்ணன் படிப்பு முடிந்து, வேலைக்குப் போற வரைக்கும், அப்பாவைப் போல் இந்தக் குடும்பத்தை நானே பார்த்துக்குறேன். அப்பா வேலை பார்த்த கம்பெனியின் முதலாளியை நாளைக்கே நான் நேரில் சென்று பார்க்கறேன். எனக்கு அவர் வேலை தரமாட்டேன்னு சொல்லமாட்டாரம்மா ! நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே “ என்று சமாதானப்படுத்தி அம்மாவை சம்மதிக்க வைத்தாள்.

“பாரதி ! இந்த சின்ன வயசிலே உனக்கு இந்தக் குடும்பப்பாரம் சுமையாகத் தெரியல்லையா ? !” ஆதங்கத்துடன் அம்மா கேட்டார்.

“ சுமைதான் அம்மா. ஆனால் உங்க எல்லாருடைய சந்தோஷங்களை எல்லாம் நான் நினைக்கும்போது , இது ஒண்ணும் எனக்கு சுமையாகத் தெரியல. அப்படியே அது சுமையாகத் தெரிந்தாலும், இது எனக்கு ஒரு சுகமான சுமைதான் அம்மா ! “ என மகிழ்ச்சியுடன் கூறினாள்.

பாரதி கூறியதைக் கேட்டு உணர்ச்சி மிகுதியில் பெரியப்பா, பெரியம்மா மற்றும் அம்மா மூவரும் அவள் கைகளைப் பிடித்து தங்களோட கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

பாரதி, அண்ணன் சிதம்பரத்தை ‘அண்ணா என்னோட முடிவு உனக்கு இப்ப சந்தோசம்தானே ‘ என்று கேட்பதுபோல் அவள் அண்ணனைப் பார்த்தாள். சிதம்பரம் கண்களில் கண்ணீர் பெருக, நன்றிப் பெருக்குடன் தனது தங்கை பாரதியைப் பார்த்தான்.

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை:

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (2-Jan-17, 2:53 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 467

மேலே