எப்படிச் சொல்வேனடி

நெஞ்சள்ளிச் சென்றவனை நினைக்கையிலே மனத்திரையில்
>>>>நிழலாடும் அவனுருவே !
கஞ்சமலர்க் கன்னமென்றான் கருவண்டு விழிகளென்றான்
>>>>கள்வனவன் அழகனடி !
செஞ்சாந்து பொட்டிட்டுச் செல்லமாய்க் கிள்ளினனே
>>>>சிலிர்த்துவிட்டேன் என்தோழி !
வஞ்சியெனைச் சிலையென்றான் வளைக்கரமும் வனப்பென்றான்
>>>>வளைத்துவிட்டான் அன்பாலே !

கள்ளூறும் இதழென்றான் கற்கண்டு மொழியென்றான்
>>>>கவின்மலரே நீயென்றான் !
துள்ளிவரும் மானென்றான் தும்பைப்பூ சிரிப்பென்றான்
>>>>துடியிடையோ கொடியென்றான் !
உள்ளத்தால் மழலையென்றான் உயிர்வளியும் நீயென்றான்
>>>>உணர்வினிலே கலந்துவிட்டான் !
வெள்ளிவரும் வேளைக்குள் விரைந்திடுவேன் என்றுசென்றான்
>>>>வெட்கமென்னைத் தின்றதடி !

பட்டுவிரல் தொட்டணைத்தான் பாவையென்னைப் பதுமையென்றான்
>>>>பார்வையாலே உள்ளமீர்த்தான் !
மொட்டவிழும் நறுமுகைபோல் மோகனமுன் வாசமென்றான்
>>>>மோகவலை வீசிவிட்டான் !
கொட்டிவிழும் வான்மழையில் கோதையென்றன் விரல்பிடித்துக்
>>>>கொஞ்சியவன் முத்தமிட்டான் !
கட்டழகுக் காளையவன் கைபிடிக்கும் நாளையெண்ணிக்
>>>>காலமெல்லாம் காத்திருப்பேன் !

சுந்தரனின் பேச்சினிலே சுகராக மீட்டலிலே
>>>>சொக்கிவிட்டேன் தன்னாலே !
மந்திரமென் செய்தானோ மன்மதனோ மாயவனோ
>>>>மயங்கிவிட்டேன் காதலிலே !
விந்தையென்ன நானறியேன் விழிமூடித் தவிக்கின்றேன்
>>>>விரைந்துவர ஏங்குகின்றேன் !
எங்கிருந்த போதினிலும் என்னிதயம் அவன்வசமே
>>>>எப்படிநான் சொல்வேனடி ....???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Jan-17, 3:36 pm)
பார்வை : 170

மேலே