ஒரு காதல் கடிதம்

இதயம் உன்னூர்::::::காதல் துணை:::::இதயம் என்னூர்::::: 03/01/17

அன்பே..

அழகே... ஆருயிரே.. நலம்.. நலமறிய ஆவல். இது என்னிதயம் உன்னிதயத்திற்கு எழுதும் காதல் மடல்..

நீ.. நான் இதுவரை கண்டிராத காதலி.. உன் கண்ணடி பட இந்த இதயம் காத்துக்கெடக்கு... உன் சொல்லடி படி என் செவியிரண்டும் தவமாய் தவமிருக்கு...

எனக்கு கவிதை எழுதத்தெரியாது.. ஆனால் உனை நினைத்தால் எழுதுவதெல்லாம் கவிதை போலவே தெரியுது.. என் வறண்ட இதயம்.. உன் நினைவெனும் இருண்ட மேகம் முட்டி மோத.. கொட்டும் மழையில் நனையுது..

சீக்கிரம் என் வாழ்வில் வந்து எனக்கான காதல் காலங்களைத் தா.. சீக்கிரம் எனைக் காண வந்து எனக்கான காதல் ராகங்களைத் தா.. சீக்கிரம் என்னில் கலந்து என் வாழ்வின் அழகிய இசையாய் மாறு.. நீ வருவாய் வருவாய் என்றே துள்ளிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கு என் இதய ஆறு...

நேற்றொரு பூவைப் பார்த்தது பூவை உன்னை ஞாபகப்படுத்தியது.. நேற்றொரு தென்றல் தீண்டியது பூவை உன் வாசம் உணர்த்தியது.. நேற்றொரு சாரலில் நனைந்தது உனை என்னில் மூழ்கடித்த‌து..

வா காதலி வா.. முடிந்தவரை விரைந்து வா.. என் இதய வீணையை மீட்டவா.. என் தனிமைப் பொழுதுகளை தனியா மகிழ்ச்சிப் பொழுதுகளாக மாற்றவா.. என் ருசிகரமில்லா வாழ்க்கையை.. ரசிக்கும்படிக்கு ஆக்கவா..

என் மனசாள வா.. எனக்கு மருந்திட வா.. வரும்போது கூடவே வசந்தத்தை அழைத்து வா.. பொதிகைமலைக் காற்றை துணைக்கு கூட்டிவா.. பருவமழையாகி என்னில் பொழிய வா..

உன்னைத் தேடுகிறேன்.. பார்க்கும் கண்களெல்லாம் நீதானா எனவெண்ணி எல்லா இடமும் ஓடுகிறேன்.. அழகிய தருணங்களெல்லாம் நீ கூட இருப்பதாகவே உணருகிறேன்..

நீ எங்கிருக்கிறாய்? என்னில் தான் குடி கொண்டிருக்கிறாய்.. ஆனாலும் என் கண்ணில் விழத்தயங்கி... நிலவின் நெற்றியில் நித்திரை கொண்டுள்ளாயா..? இல்லை வானவில் மாடியில் உன் சேலை உலர்த்திக் கொண்டுள்ளாயா...?

உன் வருகையெண்ணி நான் உணவு உண்பதில்லை.. உன்னை எண்ணினாலே எனக்கு பசியே எடுப்பதில்லை.. என் பசியை வாடகைக்கு எடுத்தவளே.. எனக்கான வாடகையாய் உன் காதலைத் தந்துவிடு.. நமக்கான வாழ்வு வரவேற்க பெருமாலை கொண்டு காத்துக்கொண்டுள்ளது.....

எட்டாக்கனியே... இலக்கியச் சுவையே.. இலக்கணம் கொஞ்சம் புரிந்தவனுக்கு உன் இருப்பிடம் எங்கெனத் தெரியலையே.. உறுப்பினராக்கு என்னை உன் இதயப்புத்தகத்தில்... எனக்கு மட்டுமே அனுமதி கொடு உன்னிடம் பேச... எனக்கு மட்டுமே உன் படமனுப்பு... அதில் ஓரமாய் என் பெயரும் எழுதியனுப்பு...

பத்துப்பொருத்தம் பார்ப்பார்கள் பெரியோர்.. நமக்குள்ளே நூறுப்பொருத்தம் உள்ளதைக் கண்டால் அவர்கள் என்னாவார்களோ...! நமக்கான எதிர்காலம் இதயவாசலில் நின்றிருக்கு... கண்கள் நான்கும் சந்தித்ததும் அது கல்யாண மாலை தர விருப்பம் கொண்டிருக்கு... விரைந்து எடுத்து வா உன் விழியம்பை...

கண்ணில் படா காதலியே.. புயலாக வந்தென்னைக் காதலியே... மயிலாக ஆடிக்கொண்டுள்ளேன்.. அதற்கான மாரிக்காலம் மேக மூட்டமாய் சூழ்ந்துள்ளதை நான் உணர்கிறேன்... கோடி கோடி நட்சத்திரங்கள் நமை வாழ்த்த வானில் உதிக்கப்போகிறது.. கண்மணியே.. என் பொன்மணியே... எனக்கான மண‌மே... விரைந்து நடக்கட்டும் நமது திருமணமே.. கலந்து வாழ்வில் நிலைக்கட்டும் நமது இருமனமே.... நித்திரை தொலைத்தவனின் முகத்திரையில் உன் ஓவியம் வரைய தூரிகை கொண்டுவா.. காரிகையே... காத்திருக்கிறேன்... உன் பதில் காண...

இப்படிக்கு..

உன் சொற்படி நடக்கவிருக்கும்

காதல் கிறுக்கன்....


பின் குறிப்பு:

இது ஒரு காதல் கடிதமல்ல.. வாழ்க்கை கடிதம்...
நம்மிடையே உருவாகப் போவது காதல்ல.. வாழ்க்கை...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Jan-17, 8:34 pm)
பார்வை : 667

மேலே