அய்யோ காதலியே அன்பான கவிமகளே

மலர்தாங்கும் தேன்துளியே! மகரந்தத் தூளே !
அய்யோ காதலியே! அன்பான கவிமகளே !
இதயம் கலங்கியழ இன்னொருவன் பின்வாழ
என்னை மறந்தங்கு எப்படி நீ போனாயோ

மஞ்சல் வண்ணத்து மங்கலநாண் மேலேற
என்னை நினைத்தாயோ என்னதான் நினைத்தாயோ
தேனினிக்கும் என்றெண்ணி தேடி வந்தவனின்
காதில் ஈயத்தை காய்ச்சி வடித்தாயே

நான் வடிக்கும் கண்ணீர் நான்கு சுவரறியும்
நீ வடித்த கண்ணீர் நித்திலமே நானறிவேன்
காதல் வானத்தில் கனக்கும் மழைசுமக்கும்
கருமுகில்கள் காற்றடித்து கலைந்ததுபோல் ஆனதடி

முழுமதியின் அழகெல்லாம் முகமாகக் கொண்டவளே!
குழிநிலவாய் குனிந்தாயே குறைந்தாயே சரிந்தாயே
பெண்ணுக்குப் பொறுமை பெரிதல்ல என்றதாலுன்
கண்ணுக்கு கருவளையம் கவலையால் வந்ததடி

மூட மரபுகளை மூடிக் கொளுத்தாமல்
முந்தானை கொண்டென்னை மூட நினைத்தாயே
அன்பே தவறில்லை அதுவுன்றன் பிழையில்லை
என்பேன் இனிப்பேசி ஏதும் எனக்கில்லை

சத்தான நம்காதல் சாகுந்தருவாயில்
முத்தான என்னன்பை முறிக்க நினைத்தாயே
சாத்திரத்தால் அறிவிழந்து அன்பில்லாது பொய்
பாத்திரமாய் வாழ்வதெலாம் பாவம்தான் தெரியாதா

சின்னத் தென்றலானேன் சிறுவொளி துளிகளானேன்
உனைப்பிரிந்து எண்ணத்தில் புழுதியானேன் எறும்பானேன்
நினைவுகளில் மாலையிட்டு நிம்மதியாய் நானிருப்பேன்
கனவுகளில் மட்டுமே என்காதல் வாழட்டும்

நேசித்தி ருந்தாயே சிலநேரம் வாழ்வுதனை
யோசித்தி ருந்தாயே பாவி என்னிடத்தில்
பேசிச் சிரித்ததெல்லாம் பெருங்காதல் என்றெண்ணி
பூசித்த காதலும் பொய்யாகிப் போனதடி

ஏமாந்து போனேனா? இல்லை காதலியே
ஏன்மாண்டு போனேனோ என்காதல் தோட்டத்தில்
விம்மித் தவித்து வேதனையில் புரண்டழுது
பாவமே உனைநினைத்து பாடியும் எழுதிவிட்டேன்.
- அன்புச்செழியன்

எழுதியவர் : கரு.அன்புச்செழியன் (6-Jan-17, 11:59 pm)
Tanglish : aiyyo kathaliye
பார்வை : 440

மேலே