காதல் பழக வா-5

காதல் பழக வா -5

மஞ்சள் பூசிய
சரடினை உன் கழுத்தினில்
முடிந்திட்ட பின்னரே
அதை மாங்கல்யம் என
அறிந்துகொண்டேன்....
நமக்குள்ளான மாங்கல்ய பந்தம்
காதல் பயணம் ஒன்றை
தொடக்கி வைக்க
நீயும் நானும் நாமாய் வாழ
முயற்சி செய்வோம்
என் கரம் பிடிக்க பழகிக்கொள்
என் இனியவளே ...

"அம்மா நீங்க நினைக்கறது போல இல்ல, நான் யாரையும் காதலிக்கல, சொன்னா நம்புங்களேன், இந்த கல்யாணம், பொண்ணு பாக்கற சடங்கு எதுவும் இப்போதைக்கு வேண்டாம்மா, நான் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கு, புரிஞ்சிக்கோங்களேன் ப்ளீஸ்"

காரில் போகும் நேரத்திலாவது தன் மனதை எப்படியாவது அம்மாவிற்கு புரிய வைத்துவிட வேண்டும் என்னும் சிரத்தையில் ராதி வாதாடினால்......


"ராதி வாய மூடு, இத்தனை வருஷமா உன்னை நம்பி தான் ஏமாந்து போய்ட்டேன், ஒரு தோழி மாதிரி பழகியும் நீ ஒரு பையன காதலிச்சத பத்தி என்கிட்டே சொல்லல, ரெஜிஸ்டர் ஆபிஸ் வர போயிருக்க, எவ்ளோ துணிச்சல் உனக்கு...இவனை பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிருந்தா நான் யோசிச்சிருக்க மாட்டேனா, பையன் வீட்ல இருந்து வந்ததால அன்னைக்கு அந்த பிரச்சனை அத்தோட முடிஞ்சி போச்சு, இல்லைனா தாலியும் கழுத்துமா தான வீட்டுக்கு வந்திருப்ப இல்லையா”

"அம்மா அது என் பிரெண்ட்க்காக செஞ்சதுமா, நான் சாட்சி கையெழுத்து போட தான் போனேன்"

"நீ சொன்னதை நம்பி விசாரிச்சதுல தானே உண்மை தெரிஞ்சது, ராதிகா தான் கல்யாண பொண்ணுன்னு ரெஜிஸ்ட்டாரே சொன்னாரே, அதுக்கும் மேல சாட்சி வேணுமா, நீ காதலிக்கற பையனோ வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ண சம்மதிச்சிட்டானாம், இப்படிப்பட்ட கோழையையா நீ நம்பற, உன் அம்மா உன் நல்லதுக்காகத்தான் எல்லாத்தையும் பண்றேன், இதை நீ புரிஞ்சிக்கலானாலும் எந்த கிறுக்கத்தனமும் பண்ணி வைக்காம நான் சொல்றதையெல்லாம் செஞ்சாலே போதும், எல்லா பிரச்சனைகளும் சரி ஆகிடும்"

"அம்மா என் பிரெண்ட் பேரும் ராதிகா தான்மா, அதனால வந்த குழப்பம் தான் எல்லாமே, அது மட்டுமில்லாம சுதாகர் வீட்ல அவரை மிரட்டி தான் அந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிருக்காங்க, ஆனாலும் அந்த கல்யாணம் நடக்க போறதில்ல, சுதாகரும் ராதிகாவும் ஓடி போயாவது கல்யாணம் பண்ணிக்க தான் போறாங்க, அன்னைக்கு ராதிகா வீட்ல தெரிஞ்சிருந்தா ராதிகாவை கொன்னே போட்ருப்பாங்க, அதான் நீங்க போய் விசாரிச்சப்ப ராதிகா சுதாகரை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிருப்பா...கொஞ்ச நாள் வைட் பண்ணுங்கம்மா எல்லா குழப்பமும் சரி ஆகிடும், அப்போ நீங்க என்ன புரிஞ்சிப்பீங்க"

"ராதி இதுக்குமேல நீ எதாவது பேசினா அதுக்கப்புறம் நான் பொறுமையா இருக்க மாட்டேன், தேவை இல்லாம என் கோவத்தை கிளறாம அமைதியா வா, உன்னோட இந்த பிதற்றல் எல்லாம் கேட்டு கேட்டு எனக்கு புளிச்சி போச்சு, இனிமேலும் நான் எதையும் கேட்க தயாராய் இல்ல"

"அப்பா நீங்களாவது அம்மாக்கு புரிய வைங்கப்பா"

"வினோ ராதி சொல்றதுலயும் அர்த்தம் இருக்கறாப்பல தான் தெரியுது, நாம கொஞ்சம் விசாரிச்சு பொறுமையா முடிவு எடுப்போமே"

"உங்க பொண்ணுக்கு செல்லம் குடுத்து குடுத்து கெடுத்து வச்சது போதும்ங்க, இதுக்கு மேலயும் அவளுக்கு நீங்க சப்போர்ட் பண்ணினா அப்புறம் நீங்க என்ன மறந்துட வேண்டியது தான்"

வினோவின் இந்த வார்த்தையில் ராமநாதன் ராதியை கூட மறந்துவிட்டு அமைதியாக காரை ஓட்டுவதிலேயே இலக்காக இருந்துவிட்டார்...வினோவின் பிடிவாதம் பற்றி ராமநாதன், ராதி இருவருக்கும் நன்றாகவேதெரிந்த விஷயம் தான்…… வினோ பாசத்தை எந்த அளவு உச்சபட்சத்தில் வெளிப்படுத்துவாரோ அதே அளவு கோவமும் உச்சபட்சத்தில் இருக்கும்...ஒரு விஷயத்தை தீர்மானித்து விட்டால் வினோவின் மனதை யாராலயும் மாற்றி விட முடியாது.. இதை புரிந்து கொண்ட இருவரும் நடப்பது எதுவாக இருந்தாலும் ஏற்று கொள்வதே சிறந்தது என மானசீகமாக முடிவெடுத்து கொண்டனர்...

"அம்மா இன்னைக்கு கோவில்ல கூட்டம் அதிக அளவு இருக்கே, இந்த கூட்டத்துல யாரவது காணாம போனா கண்டுபிடிக்க குறைஞ்சது அரைமணி நேரமாவது ஆகும்"

"பின்ன என்னப்பா, இன்னைக்கு எவ்ளோ விசேஷமான நாள், பத்து ஜோடிக்கு கல்யாணம் வேற நடக்கபோகுதே...அதனால கூட்டம் இருக்கறது சகஜம் தான், சரி வாப்பா உள்ள போய் சாமிய தரிசிச்சிட்டு கல்யாணத்தை பார்க்க போகலாம்"

"வாங்கம்மா, உங்க நல்ல மனசால இன்னைக்கு பத்து ஜோடிக்கு கல்யாணம் நடக்க போகுது, இந்தங்கம்மா பத்து மாங்கல்யமும் இதுலயே இருக்கு, உங்க கையால இந்த மாங்கல்யத்தை ஆசிர்வதிச்சி மாப்பிள்ளைகள்கிட்ட கொடுத்தா அவங்க வாழ்க்கை செழிப்பா இருக்கும்"

"கண்டிப்பா பூசாரி ஐயா, என்னோட ஆசிர்வாதம் எப்பவுமே இருக்கும், ஆனா இந்த மாங்கல்யத்தை என் பையன் கண்ணன் கையால எடுத்து குடுத்தா அவனுக்கு அந்த புண்ணியம் போய் சேரும், அதனால கண்ணனே இதை செய்யட்டுமே, அவனுக்கு கல்யாண பிராப்தம் சீக்கிரமே வரணும்"

"கண்டிப்பம்மா, கண்ணன் தம்பி மட்டும் லேசு பட்ட ஆளா, சொக்க தங்கம் ஆச்சே, நீங்க ஆசிர்வாதம் பண்ணி தம்பிகிட்ட கொடுத்துடுங்கோ, தம்பி மாப்பிளையால் கிட்ட கொடுத்தரட்டும்"

"சந்தோசம் பூசாரி ஐயா, நாங்க சாமிய தரிசனம் பண்ணிட்டு வந்துடறோம், நீங்க எல்லா ஏற்பாடுகளையும் பாத்துக்கோங்க"

"ஏம்மா, நீங்களே தாலி எடுத்து குடுத்தா என்ன, எனக்கு தான் அந்த புண்ணியம் வரணுமா, உங்களுக்கு வந்தாலே எனக்கு வந்தது போல தானே"

"அதில்லே கண்ணா, நான் வாழ்ந்து முடிச்சவ நீ வாழ போறவன், உனக்கு இந்த புண்ணியம் கிடைக்கறது தான் எனக்கு சந்தோஷத்தை தரும், அதுவும் இல்லாம, உன் அப்பா மதியம் தான் ஊரிலிருந்து வர்ரதா சொல்லிருக்கறாரு, அவர் இல்லாம தனியா நான் இந்த நல்ல காரியத்தை செய்ய மனசு ஒப்பலைப்பா, எனக்காக நீ இதை செய்யணும் கண்ணா"
"சரிங்கம்மா, கண்டிப்பா செய்றேன்"
வர போகும் விளைவுகளை பற்றி புரிந்து கொள்ளாமல் கண்ணன் ஒப்புக்கொண்ட காரியம் அவன் வாழ்க்கையையே திசை திருப்ப போகிறது என்பதை அந்த மாங்கல்யம் மட்டுமே அறிந்தது...

எழுதியவர் : இந்திராணி (7-Jan-17, 1:12 pm)
பார்வை : 580

மேலே