வாசிப்பின் ஆதி தேடல் - கோபி சேகுவேரா

வாசிப்பில் வானம் வளர்த்து எழுத்துக்களாய் மிதக்கிறேன்..

நிற்காத பெருமழையின் பேரிசையில் மூழ்கி.. கடலின் ஆழ் அமைதி பருகி.. வெடித்திடும் மின்னலென தூள்களாய் சிதறி.. பறவையின் சிறகடிப்பில் அசைந்து.. புல் நுனி பனியாய் படர்ந்து.. குழந்தைகளின் பாத சுவடுகளாய் அலைந்து.. எறும்புகளின் பாதைகளுக்குள் ஒழிந்து.. அழகு மொய்க்கிற பூக்களாய் மாறி.. காதல் கங்குகளாய் காடாகி.. ஞாபகங்களோடு பழுத்து.. நட்சத்திரங்களை உடைத்து.. ஊமையின் மொழியாகி.. முத்தங்களில் புல்லாங்குழல் செய்து.. மௌனம் வாசித்து.. பச்சை பசேலென முட்டி முளைக்குது.. வாசிப்பின் வெப்பத்தில் ஒரு பெருங்காடு..

திசைக்கொரு சங்கதிகளாய் திரிந்து கிடக்கும் நடமாடும் சடலங்களுக்கிடையில்.. அடியாழத்தில் நீந்திக்கொண்டிருந்த கனவின் நறுமணங்களை எழுப்பிக்கொண்டிருக்கிறாள்.. தேடத் தேட தொலையும் தொலைவுக்குள் தசாப்தங்கள் செய்கிறாள்.. தவிப்பின் பெருநெருப்பு வளர்க்கிறாள்.. உயிரின் உணர்வுகளில் நழுவாமல் நுழைந்துகொள்கிறாள்.. காற்றின் மென்மையில் கத்தி செய்து.. உடம்பெல்லாம் குத்தியும் உருவியும் கொலைகளில் காதல் செய்கிறாள்.. இறுதியில் அவளே கடவுளாய் மாறி.. என்னை சிறு பறவையாய் மாற்றுகிறாள்..

வாரிவழங்க வார்த்தைகளில்லை.. இந்த மலைக்காட்டில் எதிரொலிக்கும் குரலை பரிசளித்தேன்.. பள்ளங்களையும் உயரங்களையும் நீர் அடைகிற நிறைவு.. உன்னை எனக்குள் நிரப்பியபோது..

காற்றின் தழுவலை உணரும் மரமாய் தலையசைக்கிறேன்.. உன்னை நிஜமென உணர்ந்தபோது.. பிடித்தமானதொரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.. உன்னை நிழலென உணர்ந்தபோது.. பிடித்தமானதொரு பாடல் தேடித் தேடி.. பிடித்ததாகவே இருக்கக்கூடாதா என தேடல் தொடர்ந்துகொண்டேயிருந்தது..

வேர் முளைத்த காத்திருப்பின் பெரும்தவமளித்த.. கனவின் உருவகம் இவளென.. முன்புக்கு முன்பு வாசிக்காத நாளொன்றில்.. என் புத்தக அலமாரி கனவின்வழியே கதைத்து சென்றது..

வண்ணதாசனோ.. சுஜாதாவோ.. தஞ்சை பிரகாஷ்.. இன்னும் வேறு யாரோ இந்த நாச வேளைகளில் ஈடுபட்டிருக்கலாமென மனம் அஞ்சி.. அதற்காக தடயங்கள் இருக்குமென்று புத்தகங்கள் தொட்டபோது.. அந்த அவள் எப்படியிருப்பாளென வேண்டுதல்.. தவ நிலை அடைந்தது.. இல்லாமையின் பரிசுத்த கடவுளை தேடி வாசிப்பு தொடங்கியது..

எனது வாசிப்பு எப்போதும் முடியாது.. உங்களுக்கு புரிய வைக்க வேண்டுமெனில்.. என்னுடைய நிலவையும் சூரியனையும் வாசிப்பில் மட்டுமே காண்கிறேன்.. எழுத்துக்களின் போதையில் தள்ளாடிக்கொண்டேயிருக்கிறேன்.. உலகை அனாதையாக்கிவிடுகிற பைத்தியத்தின் முகத்தில் என்னை நிறைத்துவிடுகிறேன்.. உடலெங்கும் வார்த்தைகளை பூசிக்கொள்கிறேன்.. நான் ஒருபோதும் எனது வாசிப்பை நிறுத்தப்போவதில்லை..

அந்த அவள் கண்ணெதிரே தோன்றினாலும்கூட.. விரிந்த கண்ணகளோடு வாசித்துக்கொண்டியிருப்பேன்.. என் வாசிப்பு ஒருபோதும் முடியாதது..

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (7-Jan-17, 6:51 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 199

மேலே