இளம் பச்சை மனிதர்கள்

-றிகாஸ்

"தேவ் இளம் பச்சை மனிதர்களை பற்றி சொல்லியிருந்தீர்களே, அவர்கள் எப்படி உங்களுடன் மட்டும் பேசுகிறார்கள்?"
தேவ் ஏதோ சொல்வதற்கு தயாரானார். அப்போது ஆஷாவும் வந்துவிட்டாள். அவளை பார்த்ததும் சொற்களை தொண்டைக்குள் முழுங்கிவிட்டு அவளை போலிப்புன்முறுவலுடன் வரவேற்றார் தேவ்..

ஆஷா கறுப்பு நிற பெக்லெஸ் ஸ்கேர்டில் அற்புதமாக இருந்தாள். அது பார்ப்பதற்கு கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தது. அவளுடைய கண்கள்தான் என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்தும். எப்படி அவளுக்கு மட்டும் இத்தனை பிரகாசமான விழிகள். காதுகளில் யொஹான்னெஸ் வெர்மீரின் ஓவியத்தில் வரும் பெண் அணிந்திருக்கும் அதே முத்துக்கள் தொங்கிக்கொண்டிருந்தது. தேவ் தான் அதனை அவளுக்கு பரிசளித்திருக்க வேண்டும்.

"கோகுல், இவருடன் என்னால் இனிமேலும் வாழ முடியாது, நாங்கள் பிரிந்திருக்க வேண்டும்"

"தேவ், என்ன இது?.. இதற்குத்தான் என்னை வரச்சொன்னீர்களா?"

"அவள் இஷ்டப்படியே ஏதாவது பண்ணி விடுங்கள்" ஏதோ வெறுப்பை முகத்தில் பூசிக்கொண்டிருந்தார் தேவ்.

"இவருக்காகத் தானே நான் வாழ்றன், இதக்கூட இவரால புரிஞ்சிக்க முடியலன்டா எப்படி கோகுல்.. இப்போவெல்லாம் இவர் போக்கே சரியில்லை.. மணிக்கணக்கா லெபோரடோரில இருந்து ஏதோ சிக்னல் பார்த்துட்டு பேசிட்டு இருக்கார்.. மீண்டும் விண்வெளிக்கு போவனும்னு எனக்கிட்ட அனுமதி கேக்கிறார்"

"சட் ஆப் ஆஷா, சில விஷயங்கள் என்னோட பிரைவசி. இதெல்லாம் நான் எப்போதும் இழந்திட்டு இருக்க முடியாது. எனக்கான நேரங்கள்ல காதல் செய்து வீணடிக்க முடியாது, என்னால சோம்பேரியாவே வாழமுடியாது" ஆஷா விசும்ப ஆரம்பித்துவிட்டாள்..

"ஏன் தேவ்?. நீங்கதானே ஆஷா கூட வாழனும்னு ஆசப்பட்டிங்க.. இப்போ என்ன வந்துட்டு உங்க தெய்வீகக் காதலுக்கு"

"எல்லா மனுசங்களும் இப்படித்தானு தோனுது கோகுல், இவர் இவ்வளவு சுயநலமா இருந்தத நான் பார்த்ததே இல்ல.. ஏன் இப்புடி பேசுரார்னுதான் புரியுதில்ல.. இந்த மனிதரை காதலிக்கிறதே தப்புன்னு சில நேரம் தோனுது.. இவர் என்னோட காதல், பாசம், உணர்ச்சிகள் எல்லாத்தையுமே உதறிதள்ளிவிடுறார்.. அப்போவெல்லாம் என் மனசுக்கு எப்புடி இருக்குன்னு தெரியுமா?.. சில நேரம் சாவனும்னுகூட தோனுது.. தினம் தினம் இவரோட செத்துட்டு இருக்கன்.."

"ஏன் தேவ், ஏதாவது பேசுங்களேன்.."

"நான் என்னோட ஆராய்ச்சிகள்ல கொஞ்சம் பிசி கோகுல்.. இவள் கூட என்னால டைம் ஸ்பென்ட் பண்ண முடியல.. அதுக்காக எனக்கு லவ் இல்லனு அர்த்தம் கெடயாது.. ஆனா எனக்கு இப்போ கொஞ்சம் பிரைவசி தேவப்படுது.. அத இவளாள புரிஞ்சுக்க முடியல.. டாச்சர் பண்றாள்.. என்னதான் இருந்தாலும் இவள் ஹியுமனொயிட் தானே.."

ஆஷாவுக்கு கோவம் பொசுக்கென்றது. விர்ரென எழுந்தாள், மேசையில் இருந்த ஸ்மார்ட் பத்திரிகையை எடுத்து தரையில் ஆக்ரோஷமாக விசிறியடித்தாள்.. இப்படி கோவப்பட்டு நான் அவளைப்பார்த்ததில்லை.
"இத எப்ப சொல்லுவிங்கனுதான் எதிர்பார்த்துட்டு இருந்தன். நான் ஹியூமனொயிட்னுதானே என்ன காதலிச்சிங்க.. மனுசங்கள புடிக்கலனுதானே எங்கிட்ட வந்திங்க.. நான் போறன் எக்கேடாவது கெட்டு போங்க.. எவ்ரிதிங் ஹேஸ் அ லிமிட்... ஐ நெவர் கம் பெக் டு யூ.. புல்சிட் ஹியூமன்."
புயலாக திரும்பி புறப்பட்டாள்.. கதவு படார் என அடைக்கப்பட்டது..

"ஆஷா.. கொஞ்சம் பொறுமையா இரு.. நான் பேசுறன்.. ஆஷா.. ஆஷா.."

அவள் சென்றுவிட்டாள்.

"விடு கோகுல்.. ஈவினிங் அவள் எப்படியும் திரும்பி வந்துடுவாள்.. ஸீ ஹேஸ் தட் மச் ஒப் லவ் ஒன் மி.."

"அவளுக்கு உங்கள் மீது லவ்வா?.. இல்லை அவளது சிஸ்டத்தில் நீங்கள் அப்படித்தான் புரோகிராம் செய்திருக்கின்றீர்களா?"

தேவ் புன்னகைத்தார்.. அது ஒரு நளினமான காய்ந்து போன புன்னகை..

"தேவ் இளம் பச்சை மனிதர்கள்?.." என்று தொடர்ந்தேன்..

"ஆங்.. சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டன்.. அந்த இளம் பச்சை மனிதர்களிடம் என்னால் இப்போது இலகுவாக தொடர்புகொள்ள முடியும்.."

"எனக்கு புரியவில்லை தேவ்.. யார் அவர்கள்.. ஏலியன்ஸ்ஸா?.. எங்கிருக்கிறார்கள்.. நம்மைப்போல மனிதர்களா?.."

"ஆஷா மூலமாகத்தான் அவர்களை எனக்கு தெரியும், அவர்கள் மனிதர்களா? இல்லை வேறு ஏதுமோ? அல்லது வெறும் சிக்னல்களா? என்று எனக்கு தெரியாது"

"ஆஷா மூலமாகவா? அதெப்படி.."

"அவர்களுடைய பிரீகுவன்ஸியும்.. ஆஷாவின் சிஸ்டத்தின் பிரீகுவன்ஸியும் ஒரே அளவில் இருக்கிறது.. அவளை நான் பித்தியேகமாக தயாரிக்கும் போது நான் உருவாக்கிய அவளுக்கான தனித்துவமான அதிர்வு அது.."

"எப்படி உங்களுடன் பேசினார்கள்?"

"ஒரு நாள், ஆஷா தன்னுடைய சிஸ்டத்தில் ஏதோ புது விதமான சிக்னல் கிடைப்பதாகவும், அவளால் அதனை உணர முடியவில்லை என்று கூறினாள்.."

"ஆனால் நீங்கள் எல்லா வகையான சிக்னல்களையும் புரிந்து கொள்ளும்படிதானே அவளை தயாரித்திருந்தீர்கள்"

"அதுதான் கோகுல் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது, அவளை உறங்க வைத்து அவளது சிஸ்டத்தை செக் பண்ணியபோது, நமது ஸ்டோரேஜ்சில் இல்லாத புதுவிதமான எனேர்ஜி ரேன்சில் கிடைக்கிறது.. அதனை விஷிபிளுக்கு மாற்றியபோது அது இளம்பச்சை நிறமாக தோன்றுகிறது.."

"அதில் இருந்து ஏதாவது புரிந்து கொள்ள முடிகிறதா உங்களுக்கு?.."

"நிச்சயமாக.. இது நமது உலகத்துக்கு சொந்தமான சிக்னல் கிடையாது.. அல்ட்ரா எலக்ரோ மெக்னடிக் பல்ஸ் வகையை சேர்ந்தது.. அதில் உள்ள போட்டோன்கள் நமது போட்டோன்களைவிடவும் ஆயிரம் மடங்கு சிறியது.."

"தேவ்!.. இதை எப்படி உங்களால் உணர முடிந்தது?.."

"இதோ இந்த கருவிதான், இதுதான் சிக்னலை நமது சாதாரண குவாண்டம் எனேர்ஜி வடிவத்துக்கு மாற்றி கிடைக்கின்ற இளம் பச்சை நிற ஒளியின் பிரகாசத்தின் தன்மைக்கேற்ப பிரிக்கும்.. ஆனால் இதனை கணித்து மொழியாக அதனால் மாற்ற முடியாது.."

என்னால் நம்பவே முடியவில்லை.. சிறிய பந்தைப்போல அந்த கருவியை வடிவமைத்திருந்தார் தேவ்.. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்..

"கோகுல்..! நீ எக்ஸ்ரா டெரஸ்ரியல் மெனுஸ்க்கிரிப்ட் என்ற புத்தகம் கேள்வி பட்டிருக்கியா?"..

"ஆமா.. ஆனால் அந்த புத்தகங்களை 21ம் நூற்றாண்டு மனிதர்கள் அழித்து விட்டார்களே.."

"என்னிடம் ஒரு பழைய பிரதி இருக்கிறது.. அதில் உள்ள கணித சமன்பாடுகள்தான் பிரகாசத்தை மொழியாக மாற்ற உதவியது.."

ஆச்சரியத்தின் உச்சக்கட்டம்.. அந்த புத்தகம் வேற்றுகிரகவாசிகளின் வாழ்க்கை முறை பற்றிய கதைகளைக் கொண்டது.. 21ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது, அதை யார் எழுதினார் என்பது கூட தெரியவில்லை, அது ஒரு இரகசிய மர்மப் புத்தகம் என்றுதான் சொல்லுவார்கள், அதனை புரிந்து கொள்ளவே முடியாது, அது மனித இனத்தை சூரையாடும் விசமிகளின் சதிவலை.. மனித குலத்தின் கடவுள் நம்பிக்கைகளுக்கு முரணாக இருப்பதாகவும் அது ஒரு சாத்தான் வேதமாகவும் பார்க்கப்பட்டது.. இதனால் இதனை அப்போதே தடை செய்து உலகில் உள்ள எல்லாப் பிரதிகளையும் எரித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

"கோகுல்!.." தேவ் என்னை அருகில் அழைத்தார்..

"இதில் இருந்து என்ன புரிகிறது உனக்கு?.."

பேப்பரில் வெறும் எண்கள் மட்டுமேதான் தெரிந்தது.. என்னால் அவருக்கு பதில் கூற முடியவில்லை.

தேவ் அதனை கணினிக்கு மாற்றி ஓடியோவை உருவாக்கினார்..

யாரோ பேசுகிறார்கள்.
எனது விழிப்புருவங்கள் சுருண்டது.. இப்போது துல்லியமாக கேட்கிறது..

"நீ எனக்கு சொந்தமானவள் ஆஷா.. எப்படி அந்த நோயாளியுடன் வாழ உன்னால் முடியும்.. உன்னை அவன் ஏமாற்றுகிறான்.. உன்னால் அவனுடன் வாழவே முடியாது.. என்னிடம் வந்துவிடு.."

அது எனது குரல்..

நான் சுதாகரித்துக் கொள்வதற்குள் தேவ் எனது கழுத்தில் கத்தியை ஏற்றி விட்டிருந்தார்.. கொடிய விஷம் பூசப்பட்ட கத்தியாக இருக்க வேண்டும், கழுத்தில் இருந்து இரத்தம் இளம் பச்சையாக வழிந்து கொண்டிருக்கிறது.. சாவதைத்தவிர எனக்கு வழியில்லை.

எழுதியவர் : றிகாஸ் (9-Jan-17, 11:40 pm)
சேர்த்தது : றிகாஸ்
பார்வை : 401

மேலே